புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மார்., 2015

வடக்கு மாகாண மக்கள் தங்களுடைய தனித்துவத்தை உலகறியச்செய்ய வேண்டும்; வடக்கு முதல்வர்


வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும்  வகையில் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 
 
 
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குமாகாணத்திலுள்ள யாழ். மாவட்ட சாலைகளுக்கான புதிய பேருந்துகள்  கையளிக்கும் நிகழ்வு இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. 
 
அதில் அதிதியாக வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் கலந்து  கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்  தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,  
 
 
கடந்த சில நாள்களுக்கு முன்னர் எமது அமைச்சுக்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அங்கு சென்று வாகனங்களுக்கான திறப்புகளைக் கையளித்துவிட்டு கைதட்டி படத்தினையும் எடுத்துக் கொண்டு சில மணி நேரத்திற்குள் வந்துவிட்டோம். 
 
அதுபோல யாழ். பேருந்து நிலையத்திலும் பேருந்துகள்  கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெறுவதாக டெனீஸ்வரன் என்னிடம் தெரிவித்திருந்தார். அத்துடன்  பேருந்துகளைக் கையளித்துவிட்டு உடனேயே வந்துவிடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
 
ஆனால் இங்கு வந்து பார்க்கின்றபோது கொட்டகைகள்  போடப்பட்டு மக்கள்  பெருவாரியாக நின்று ஏதோவொரு பெருவிழா நடைபெறுவதுபோல இருக்கின்றது. 
 
இவை எல்லாம் தேவையா என்று யோசித்தேன் . எனினும்  இவை எமக்கு தேவைதான். இதுவரை எமக்கு வாகனங்களையே தராது இருந்த போது தற்போது திடீரென எமக்கு வாகனங்கள்  இவ்வாறு கிடைத்துள்ளது. எனவே இது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு.
 
ஒருவேளை தேர்தலுக்காக வரவேண்டிய வாகனங்கள் இப்போது தான் வருகின்றதோ என்று எனக்கு தெரியவில்லை. எனினும் வாகனங்கள்  வந்துவிட்டன. 
 
வந்த வாகனங்களை நாங்கள்  பராமரிக்க வேண்டும். வாகனங்கள் வந்துவிட்டது தானே என்று எண்ணி அவற்றைப் பராமரிக்க தெரியாமல் இருந்துவிட்டோம் என்றால் எங்களுக்கு தரப்பட்ட இந்த வாகனங்களால் எமக்கு நன்மை கிடைக்காது போய்விடும். 
 
அஸ்கர் மக்களை  சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த சொத்துக்களை  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பது இந்த பேருந்துகள்  தான். எனவே அவற்றை நாம் நன்றாக பராமரிக்க வேண்டும். 
 
வடக்கு மாகாண மக்கள் தங்களுக்கு வழங்கப்படுகின்ற நன்மைகளை நல்ல முறையில் பராமரித்து சேவையினை ஆற்றுவார்கள் என்ற செய்தியை உலகத்திற்கு எடுத்துக் காட்டும்  வகையில் செயற்பட வேண்டும் 
 
மேலும் எங்களுடைய வீதிகள்  நன்றாக இல்லாதுவிட்டால் வாகனங்களை சரியாக பராமரிக்க முடியாது. சென்ற அரசின் காலத்தில் பாரிய தெருக்களை அழகாக செய்தார்கள் . ஏனெனில் வருபவர்களுக்கு இதனை காட்சிப்பொருள்களாக எடுத்துக்காட்டுவதற்கு. 
 
அடுத்து இராணுவம் விரைவில் செல்வதற்காகவும் இந்த பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் உள்வீதிகள்  பலவருடகாலமாக பார்ப்பாரற்று மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. 
 
அவ்வாறான தெருக்களில் வாகனங்களைக் கொண்டு போகும்போது நன்றாக வைத்துக்கொள்ள முடியாது. எனவே அவ்வாறான வீதிகளை நாம் புனரமைக்க வேண்டும். 
 
அவற்றை அமைப்பதற்கு பணம் அவசியம். எனினும் வடக்கிலுள்ள சிறுவீதிகளை அமைப்பதற்கு 8ஆயிரம்  மில்லியன்  ரூபா பணம்  தேவையாகவுள்ளது. எனினும் அதற்கான பணம் எம்மிடம் இல்லை.
 
ஒரு வருடத்திற்குரிய முழுமையாக பணம் கூட எமக்கு கிடையாது. எமக்கு கிடைத்த பணம் எட்டில் ஒரு பங்காக இருக்கின்றது. 
 
எனவே குறித்த தெருக்களை உரியவாறு பராமரித்து செய்யக்கூடிய நிலையில் 
இல்லாவிட்டாலும் முக்கியமான வீதிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை எடுத்து வருகின்றோம். 
 
ஆகவே நாங்கள்  இந்த வாகனங்களை பராமரிக்கும் அதேநேரத்தில் எமது வீதிகளையும் புனரமைப்பதனால் தான் நாங்கள் முன்னேறமுடியும். 
 
வடக்கு மாகாணம்  தற்போது பலவித மாற்றங்களை சந்தித்துக் கொண்டு வருகின்றது.  அந்த மாற்றங்கள் எங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது மட்டும் அல்லாது நல்ல முறையில் எமது வாழ்க்கையினைக் கொண்டு செல்வதற்குரிய பண்பையும் நாம் கொண்டிருக்கவேண்டும்.
 
கடந்தகாலங்களில் பல இன்னல்களை அனுபவித்துவந்த நாங்கள்  தற்போது எங்களுக்கு வரும் நன்மைகளை நல்லமுறையில் பாவித்து முன்னேற வேண்டும்.
 
போட்டி பொறாமைகளை எங்களுக்குள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் வடமாகாண மக்கள். முழு இலங்கையிலும் வடக்கு மாகாணத்தில் மட்டுமே ஒரு தமிழ்  மகன்  ஒருவர் முதலமைச்சராக இருக்கின்றார்.
 
ஆகவே நாங்கள் தமிழ் மக்கள்  என்ற முறையில் எங்களுடைய மாகாணத்தில் சகலவற்றையும் பராமரித்து சிறந்தமுறையில் செயற்படக்கூடிய தென்புள்ளவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் இருக்கின்றோம் என்பதனை நாங்கள்  காட்டக்கூடிய வகையில் எமது நடவடிக்கைகளை எடுத்துச் செல்லப்பட வேண்டும்  என அவர் மேலும் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=457503919615472971#sthash.XlVEoSXx.dpuf

ad

ad