புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2015

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளுடன் அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது யாழ். நகரில் பிரதமர் ரணில்













* பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம்
* 2016 இல் யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டுவிழா

* குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார திட்ட முன்னெடுப்புகளுக்கு விசேட செயலகம்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இரு அரசாங்கங்களும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாகவும் நிரந்தர தீர்வு ஒன்று எட்டப்படும் வரை இந்திய மீனவர்களுக்குச் சிறு கால அவகாசமொன்றைப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட பிரதமர், இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை உபயோகிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த பிரதமர், இத்தகைய செயற்பாடுகளினால் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
யாழ். செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்தின், ஈ.பி.டி.பி. எம்.பிக்களான டக்ளஸ் தேவானந்தா முருகேசு சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டு வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
குறிப்பாக மீள்குடியேற்றம், பாதுகாப்பு படையினரிடமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், விதவைகளின் எதிர்காலம், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுவது போன்ற விடயங்களை அவர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகள் தற்போது கட்டம் கட்டமாக மக்களுக்குக் கையளிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஏப்ரலில் மேலும் 1000 ஏக்கர் காணிகள் மீளக் கையளிக்கப்படும் என தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களில் குறிப்பாக பெண்களின் பொறுப்பில் இயங்கும் குடும்பங்களின் பொருளாதாரம் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என தெரிவித்த பிரதமர், இது தொடர்பான ஐ.நா. அறிக்கைக்கிணங்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள தாகவும் பிரதமர் தெரிவித்தார்.
குடும்பத்தின் பொறுப்பாளர்களாக பெண்கள் உள்ள குடும்பங்கள் வடக்கு, கிழக்கில் 1,50,000 உள்ளதாகவும் வடக்கில் மாத்திரம் 50,000 குடும்பங்கள் உள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டன. இவர்களின் வாழ்வாதாரம், சுயதொழில் குடும்பப் பொருளாதாரம் தொடர்பில் எதிர்காலத்தில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதா கவும் பிரதமர் தெரிவித்தார்.
இவர்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் செயலகமொன்றை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் தென்னாபிரிக்காவை மாதிரியாகக் கொண்ட செயற்திட்டங்கள் இங்கு முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கவனத்திற் கொண்ட பிரதமர், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் பத்து இலட்சம் தொழி வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றும் அதன் போது வடக்கிற்கு முன்னுரிமை யளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் நாடளாவிய ஒன்பது மாகாணங்களிலும் இளைஞர் மேம்பாட்டு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அதன் முதலாவது நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
2016 இல் தேசிய விளையாட்டு விழா
அத்துடன் 2016 தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கென யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் மறுசீரமைப்புச் செய்யப்படுமெனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, மாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ். பலகக்கார, அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் முப்படைகளில் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.மீனவர் பிரச்சினை தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இரண்டு நாடுகளுக்கிடையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் சிறு வாய்ப்பொன்றை வழங்குவதற்கு இலங்கை தயார். எனினும் இந்திய மீனவர்கள் இழுவைக் படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.
இழுவைப் படகு மூலம் மீன் பிடிப்பதற்கு இலங்கை மட்டுமன்றி இந்தியாவும் அனுமதிக்கவில்லை. இதனை முற்றாக நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான கால அவகாசம் ஒன்றை நாம் வழங்குவோம். அதனை மீறி செயற்பட்டால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
இழுவைப் படகுகளை உபயோகிக்கக் கூடாது என்பது தொடர்பில் நாம் இந்திய அரசாங்கத்துடன் பேசியுள்ளோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டு மீனவர்களும் ஈடுபடுவதே சிறந்தது.
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சும் கடற்றொழில் அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படும் எனில் பிரதமர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பில் இழுவைப் படகுகள் மூலம் ஏற்படுத்தும் அழிவுகளினால் தாம் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக வடக்கு மீனவர் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
வங்கிகளில் கடன்களைப் பெற்றே தாம் தொழிலில் ஈடுபடுவதாகவும் கடனை மீள் செலுத்த முடியாமல் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தமது சமூகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் மீனவ சமூக பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
நாம் நிம்மதியாக தொழில் செய்து வாழ்வதற்கு வழியேற்படும் வகையில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்று எட்டப்படுவது மிகவும் அவசியம் என்றும் அவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் வங்கிகளில் கடன் பெற்று மீள செலுத்த முடியாதோருக்கு இடைக்கால நிவாரணமொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். அது தொடர்பில் கடற்றொழில் அமைச்சு, நிதியமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சுக்களுக்கு உரிய பணிப்புரைகளை வழங்குவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ச்சியாக வழங்க முடியாது என்பதையும் அவர் மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
மீனவ சமூக பிரதிநிதிகள் தமது பிரச்சினைகளை பிரதமரிடம் முன்வைக்கும்போது இந்திய மீனவர் தொடர்பில் குறிப்பிட்ட மீனவர்கள், தென்னிலங்கை மீனவர்களினாலும் தமக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டனர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் தென்னிலங்கை மீனவர்கள் இங்கு மீன் பிடிப்பது பாரம்பரியமாக இடம்பெறும் விடயமாகும்.
இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றைக்காண முடியும். மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் மாகாண சபை ஆகியன இணைந்து இதற்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
விவசாயத்துறை செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்ட பிரதமர், காலத்திற்குப் பொருத்தமான நவீன தொழில்நுட்ப உபயோகத்துடன் வடக்கின் விவசாயத்துறையை முன்னேற்றினால் அதன் மூலம் முழு நாடும் முன்னேற்ற மடையும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார். (ஸ)

ad

ad