11 மார்., 2015

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு; நீதிபதி உத்தரவு


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி  உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், வாத பிரதிவாதங்கள் அனைத்தும் புதன்கிழமை முடிவடைந்தன. இதையடுத்து, புதன்கிழமை மதியம், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. 

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தீர்ப்பை ஒத்திவைத்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கின் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். மேல்முறையீட்டு மனு மீது ஜனவரி 5ம் தேதி தொடங்கிய விசாரணை முடிவுக்கு வந்தது. 

முன்னதாக புதன்கிழமை காலை எழுத்துப்பூர்வமான இறுதி வாதத்தை தாக்கல் செய்தார் சுப்பிரமணியசாமி. 14 பக்க அறிக்கை தாக்கல் செய்த சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா சொத்து குவித்ததை சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஐகோர்ட் உறுதிசெய்ய வேண்டும் என்று வாதங்களையும் முன் வைத்தார்.