11 மார்., 2015

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு அழுத்தம்! கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப முயற்சி

பூஸா தடுப்பு முகாமை மூடி விடுமாறு கிடைத்துள்ள வெளிநாட்டு அழுத்தங்களையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை முன்னறிவித்தல் எதுவுமின்றி அவர்களின் விருப்பத்துக்கு மாறாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக சட்டத்தரணி கே. எஸ். ரத்னவேல் நேற்று தெரிவித்தார். 
எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலம் பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் 10 பேர் 15 பேர் என நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இது சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்த சட்டத்தரணி ரத்னவேல் இது தொடர்பாக தமிழ்க் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள் கவனிப்பதாக தெரியவில்லை என்றும் கூறினார்.
கிளிநொச்சி ஜெயகுமாரி நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்ட போது அவருக்கு சார்பாக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று ஜெயகுமாரியை நீதிமன்றத்துக்கு ஆஜராக்குவதாக கூறப்பட்ட போதும் அவருடன் 6 பெண்கள் உட்பட 13 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் 8 பேர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனையோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்