புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 மார்., 2015

மோடியின் பயணத்தை இறுதி செய்யக் குழு; இன்று வடக்கே வருகிறது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வடபகுதிக்கான பயண ஒழுங்கை இறுதி செய்வதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று
இன்றைய தினம் வடமாகாணத்துக்கு வருகை தரவுள்ளது.
 
இந்தக் குழுவில் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும், வெளிவிவகார அமைச்சைச் சார்ந்தவர்களும் இடம் பெற்றிருப்பர்.
 
இந்தியப் பிரதமர் இரு நாள் பயணமாக எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்புக்கு வருகிறார். இந்தப் பயணத்தின்போது வடபகுதிக்கும் அவர் வரவுள்ளார். தற்போதைய பயண ஒழுங்கில், எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு மாகாணத்திற்கு வருவதற்கான ஒழுங்குகள் குறிக்கப்பட்டுள்ளன.
 
கொழும்பிலிருந்து சிறப்பு விமானத்தில் அநுராதபுரத்துக்கு வருகை தரும் மோடி அங்கு, மகாபோதியில் வழிபாடு நடத்தவுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து மன்னார் மாவட்டத்திற்கு உலங்கு வானூர்தியில் செல்லவுள்ளார். தலைமன்னார் வரையிலான ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலமாக, யாழ். மாநகரசபை மைதானத்தை வந்தடைவார். யாழ். பொதுநூலகத்துக்கு அருகில், இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்படவுள்ள கலாசார நிலையத்துக்கான அடிக்கல் நட்டு வைப்பார்.
 
அதன் பின்னர், யாழ். பொதுநூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், வடக்கு மாகாண முதலமைச்சரையும் சந்தித்துப் பேசுவார். தொடர்ந்து, கீரிமலையில் இந்திய வீட்டுத் திட்டகையளிப்பு நிகழ்வில் பங்கெடுப்பார். அதன் பின்னர், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்த பின்னர், பலாலிக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் செல்வார்.
 
எனினும் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பயண ஒழுங்குகளை இன்று வருகை தரும் அதிகாரிகளே இறுதி செய்வர் என்று தெரிவிக்கப்படுகின்றது.