புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015






செம்மரங்களை வெட்டியதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை என்கவுன்டரில் படுகொலை செய்த ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவினரின் கொடூரம் தேசத்தையே உலுக்கியுள்ளது.
கடந்த 6-ம் தேதி திருத்தணி வழியாக ஆந்திராவுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த தமிழக கூலித்தொழிலாளிகள்.
குறிப்பாக, ஜம்னா மாத்தூர் மற்றும் கண்ணமங்களத்திலிருந்து வந்திருந்த தொழிலாளிகள் திருத்தணியிலிருந்து திருப்பதிக்கு செல்லும் பேருந்தில் ஏறினார்கள்.
அப்படிச் செல்லும்போது நகரிப்புத்தூருக்கு அருகே தமிழக, ஆந்திர எல்லையில் இருக்கும் சோதனைச் சாவடியில், குறிப்பிட்ட அந்த பேருந்தை நிறுத்தியது அதிரடிப்படை.
பஸ்ஸுக்குள் ஏறிய போலீஸார், சிலரை மட்டும் கீழே இறங்கச் சொன்னார்கள். அதன்பிறகு அவர்களை எங்கு அழைத்துப் போனார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மறுநாள் அவர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட தகவல்தான் வந்தது.
பேருந்திலிருந்து இறக்கினார்கள் என்று ஐ விட்னஸ் சேகர், பாலசந்தர் உறுதியாக சொல்ல, அதன்பிறகு என்ன நடந்தது என்பது இதுவரை வெளிவராத நிலையில் நாம் தீவிர விசாரணையில் இறங்கினோம்.
ஆந்திர அரசின் ஆயுதப்படை பிரிவில் உள்ள அதிகாரிகள் சிலரிடம் மிகுந்த சிரமத்திற்கு பிறகு நம்மால் பேச முடிந்தது. அதில் ஒருவர், தமிழக பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆந்திரா அதிகாரி. அவர் கொஞ்சம் மனம் திறந்தார் நம்மிடம்.
செம்மர கடத்தலில் சம்பந்தப்பட்ட ஏஜெண்டுகள் 10 பேரை சமீபத்தில் கைது செய்திருக்கிறோம். அவர்கள்தான் ஆட்களை எங்களுக்கு காட்டிக்கொடுத்து வருகிறார்கள். அப்படி எங்களிடம் அகப்பட்ட ஒரு மேஸ்திரியை அதிரடிப்படை கவனித்த கவனிப்பில், "6-ந் தேதி நகரி வழியாக 6 பேர் வர்றாங்க' என்று கக்கினான்.
அவன் கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு அவர்களைப் பிடிப்பதற்காக 10 பேர் கொண்ட ஒரு டீமை உருவாக்கியிருந்தார் ஆயுதப்படை டி.ஐ.ஜி.காந்தாராவ். இது மாதிரி 20-க்கும் மேற்பட்ட டீம் இருக்கு. அதில் ஒரு டீமை நகரி செக்போஸ்ட்டுக்கு அனுப்பினார்.
அந்த மேஸ்திரியையும் இழுத்துக்கொண்டு போய், நகரி செக்போஸ்ட்டில் ஒவ்வொரு பஸ்ஸாக கண்காணித்துக் கொண்டிருந்தது ஸ்பெஷல் டீம். ஒரு பஸ்ஸுக்குள் அவனையும் ஏத்தி ஆட்களை காட்டச் சொன்னப்போ, 6 பேரை காட்டினான். அந்த 6 பேரையும் கீழே இறக்கிவிட்டு பஸ்ஸை அனுப்பிவிட்டது ஸ்பெஷல் டீம்.
கருப்பும் நீலமும் கலந்த வேனில் அவர்களை ஏத்தும் போது, "நாங்க எந்த தப்பும் பண்ணலைங்கையா. கோயில் கட்டட வேலைக்கு வந்த எங்கள எதுக்கு புடிச்சிக்கிட்டுப் போறீங்க?'ன்னு கேட்க... அவங்களுக்கு அங்கேயே அடி விழுந்தது.
அங்கிருந்து கிளம்பி, திருப்பதி திருமலை கோயில் நுழைவாயிலுக்கு பக்கத்திலுள்ள சிறப்பு அதிரடிப்படை அலுவலகமான கபிலித்தீர்த்தம் பங்களாவிற்கு வேன் வர, அங்கு அவர்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே வெவ்வேறு பகுதிகளிலிருந்து 14 பேரை பிடித்திருந்தது ஸ்பெஷல் டீம். 3 இடங்களில் இவர்களை ஜட்டியோடு அடைத்து வைத்திருந்தோம். இந்த 3 இடத்திலும் தான் இவர்களுக்கு கரண்ட் ஷாக், நெருப்பில் சுடுவது என சித்திரவதை நடந்தது. சித்திரவதையை தாங்க முடியாமல் கதறித் துடித்தார்கள்.
யாருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கிறமோ அவங்க கண்ணை மட்டும் கட்டிட்டு, மத்தவங்களை பாக்கச் சொல்லித்தான் ஷாக் ட்ரீட்மெண்ட் நடந்தது. ஷாக் கொடுக்கப்பட்டவங்களை விட அதை பாத்தவங்க அலறி துடிச்சாங்க. வெல்டிங் வேலையில் பயன்படுமே அந்த தீ ஜுவாலையை வெற்றுடம்பில் காட்ட, துடிதுடித்துப் போனார்கள்.
அவர்களின் அலறல் அந்த வனப்பகுதியில் எதிரொலித்ததே தவிர அதைத் தாண்டி வெளியில் போகவே போகாது. "இனிமே ஒருத்தனும் ஆந்திராவுக்கு வரக்கூடாது'ன்னு சொல்லிக்கிட்டே மூங்கில் கட்டைகளால் அடித்தார்கள். உடம்பெல்லாம் கன்றிப்போனது. கரண்ட் ஷாக்கும் தீச்சூடும் அவங்க உடம்பை கருக்கியது. தாங்க முடியாமல் எல்லோரும் மயங்கி விழுந்த பிறகே ஸ்பெஷல் டீம் ஓய்ந்தது.
வெவ்வேறு இடங்களில் இருந்த ஸ்பெஷல் டீமிற்கு, "உங்க கஸ்டடியில் இருப்பவர்களை திருப்பதிக்கு கொண்டு வாங்கன்னு டி.ஐ.ஜி.காந்தாராவிடமிருந்து தகவல் வர, 6-ம் தேதி இரவு 8.20-க்கு கபிலித்தீர்த்தம் பங்களாவுக்கு எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். 8.30 மணிக்கு அந்த பங்களாவுக்கு வந்தார் காந்தாராவ். ஒரு அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போ, "இனி ஒரு அடி அடிச்சாலும் யாருக்கும் உயிர் இருக்காது. எஃப்.ஐ.ஆர். போட்டு காலையில் ஜெயிலில் அடைச்சிடலாம்' என முடிவெடுத்தோம். டி.ஜி.பி. ராமுடுக்கு தகவல் சொன்னார்.
அவரோ, "திருப்பதிக்கு வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானியை சந்திப்பதற்காக சி.எம். (சந்திரபாபு) திருப்பதிக்குத்தான் வந்திருக்கார். அவர்ட்ட கேட்டு சொல்றேன்'னார்.
உடனே அவர், சி.எம். செகரட்டரிகளில் உள்துறையைக் கவனிக்கும் முதன்மை செகரட்டரி சதீஷ் சந்திராவிடம் சொல்ல, அந்த போனை வாங்கிப் பேசிய சந்திரபாபு நாயுடுவிடம், டி.ஜி.பி. விவாதித்தார்.
செம்மரம் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்ததால், "என்கவுன்டர் பண்ணிடுங்க'ன்னு உத்தரவிட்டுவிட்டு இரவு 9.30-க்கு திருப்பதியை விட்டு கிளம்பினார் முதல்வர்.
சி.எம்.மின் உத்தரவு காந்தாராவுக்கு சொல்லப்பட்டது.
உடனே வனத்துறையினரால் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செம்மரக்கட்டைகளை வேனில் ஏற்றுமாறு ஸ்பெஷல் டீமுக்கு உத்தரவு போட்டார். கட்டைகளை பார்த்த டீம், அதில் குற்ற எண்கள் எழுதப்பட்டிருப்பதை காந்தாராவிடம் சொல்ல, "அதை அழிச்சிட்டு ஏத்துங்க' என்று அவசரப்படுத்தினார்.
சில கட்டைகளில் எண் அழியவில்லை. நேரமில்லாததால் கட்டைகள் ஏற்றப்பட்டன. இரவு 12 மணி. 20 பேரின் கைகளையும் பின்புறமாக இறுகக் கட்டி ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு போனோம். எல்லோரும் துவண்டு போயிருந்தார்கள்.
நிலைமையை அவர்கள் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருத்தர் கண்ணிலும் மரண பயம். அதிகாரிகளின் கால்களில் விழுந்து "எங்களை கொன்னுடாதீங்கய்யா. எங்க புள்ளைகளெல்லாம் அனாதையாயிடும்யா. இரக்கம் காட்டுங்க'ன்னு கெஞ்சினாங்க.
காட்டில் வெட்டவெளியாக இருந்த இடத்தில் 20 பேரையும் இறக்கி அவர்களை 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடத்தியே கொண்டு போனோம். ஈத்தலகுண்டா பகுதியில் எல்லோருடைய கண்களையும் கட்டியது ஸ்பெஷல் டீம்.
அதில் 9 பேரை மட்டும் கொஞ்ச தூரம் அழைத்துப்போய் தரையில் வெவ்வேறு கோணத்தில் இடைவெளி விட்டு விட்டு மண்டிபோட வைத்தது ஸ்பெஷல் டீம். அடுத்து, 9 பேருக்கும் நேராக 9 போலீஸ் 5 அடி தூரத்தில் நின்றுகொண்டு சுட, கண்ணிமைக்கும் நேரத்தில் 9 பேரும் அப்படியே சரிந்தனர்.
உடனே அவர்களது செருப்புகளையெல்லாம் கலைந்து கிடக்கிற மாதிரி வெவ்வேறு இடங்களில் மாற்றி மாற்றிப் போட்டனர். சிலர் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து அவர்களது உடலுக்கு அருகே கிடத்திவைத்தனர்.
அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மற்ற 11 பேரையும் சச்சினவபண்டா பகுதிக்கு நடத்திக் கொண்டு போய் 9 பேருக்கு நடத்தியது போலவே 11 பேருக்கும் நடத்தி முடித்துவிட்டுத் திரும்பியது ஸ்பெஷல் டீம்'' என்று மிரட்சியுடன் விவரித்தார் அந்த அதிகாரி.
மற்றொரு அதிகாரியோ, ""உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, நாகப்பட்லா பகுதி வனத்துறை அதிகாரி நடராஜா, சந்திரகிரி இன்ஸ்பெக்டரிடம், "டி.எஸ்.பி. ஹரிநாத்பாபு தனது கீழ்நிலை அதிகாரிகளுடன் மலையின் கீழிருந்து மேலே ஏறிக்கொண்டிருந்தபோது, 7-ம் தேதி விடியற்காலை 5.30-க்கு 100 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கிகொண்டிருந்தது. அந்த கும்பல் போலீஸைத் தாக்க... அதனால் அவர்களை நோக்கி சுடவேண்டியதிருந்தது. விடிந்ததும் பார்த்தால் செத்துக்கிடந்தார்கள்' என்பதாக புகார் தரச்சொன்னதன் அடிப்படையில் புகார் தரப்பட, அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது'' என்கிறார்.
இந்த என்கவுன்டர் ஆபரேசன் லோக்கல் போலீஸார் யாருக்கும் தெரியாது. தமிழகம் மட்டுமல்ல ஆந்திராவிலும் இப்பிரச்சினை சீரியஸாக வெடித்துள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஒரு "உண்மை அறியும் குழு'வை அமைக்கும் முயற்சியில் இருக்க, அதில் தமிழகத்தை சேர்ந்தவரும் அவரது நண்பருமான பாலாஜி இடம்பெற்றிருக்கிறார்.
இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த பாலாஜியிடம் பேசியபோது, ""கடந்த மார்ச்சில், செம்மரக்கட்டைகள் கடத்தல் குறித்து உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனை நடத்தினார் சந்திரபாபு நாயுடு. அதில்தான், "இனி மரம் வெட்டும் தமிழர்களை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளுமாறு' நாயுடு உத்தரவிட, அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
அதன் பிறகே, ஆயுதப்படை டி.ஐ.ஜி. காந்தாராவ் தலைமையில் செயல்படும் சிறப்பு அதிரடிப்படையினருக்கு ஷூட்டிங் ஆர்டருக்கான அனுமதியும் அரசின் தரப்பில் தரப்பட்டிருக்கிறது. இந்த முடிவை தமிழக அரசுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது நாயுடு அரசு.
 நடந்திருக்கும் கொடூரங்களை பார்க்கும் போது, ஈழத்தமிழர்களைப் பிடித்து வைத்து கொன்று குவித்த ராஜபக்ச போலவே சந்திர பாபு நாயுடுவும் இரத்த வேட்டையை நடத்தியுள்ளார் என்கிறார் ஆவேசமாக.

ad

ad