புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

யார் இந்த மயூரன் சுகுமாரன்


பாலி-9 ; பாகம்-1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?


இந்தோனேஷியா தான் நினைத்தது போலவே காரியத்தை நிறைவேற்றிவிட்டது.
ஆம்! போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்த எட்டுப்பேரின் உயிர்களை காவுகொண்டு தனது நாட்டின் “நீதியை” நிலைநாட்டியிருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு தண்டனையா என்று உலகமே உறைந்துபோயிருக்கிறது.
“பாலி 9″ எனப்படும் விஸ்தீருணம் மிக்க இந்த வழக்கு, குற்றச்சாட்டு, அதில் நடந்த இழுபறிகள் போன்ற பல விடயங்களை “பாலி 9″ என்ற இந்த பத்தி தொடரச்சியாக பேசவிருக்கிறது. அதன் முதல் அங்கமாக இன்று இடம்பெற்ற மரணதண்டனையிலிருந்து ஆரம்பிப்போம்.
மயூரன் சுகுமாரன் – அன்ட்ரூ ஷான்.
கடந்த இரண்டு மாதங்களாகவே உலகின் அனைத்து ஊடகங்களையும் ஆழமாக ஆக்கிரமித்துக்கொண்ட பெயர்கள். கடந்த மூன்று நாட்களாக சமூகவலைத்தளங்களில் பிரதான பேசுபொருளாகிவிட்ட பிரபலங்கள். இவ்வளவுக்கும் இவர்கள் யார் என்று கேட்டால், போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு குற்றவாளிகள். ஆனால், இரண்டு குற்றவாளிகளுக்காக உலகமே அணி திரண்டு அவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கக்கோரி குரல் கொடுப்பது உண்மையிலேயே விந்தையிலும் விந்தை. இந்த பொதுஉளவியலுக்கு அப்பால், இவர்கள் செய்தது என்ன? ஏன் இவர்கள் இந்த நிலைக்கு ஆளானார்கள்?
Mayuran2
2005 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், சிட்னியில் 21 ஆவது பிறந்ததின நிகழ்வொன்று நடைபெறுகிறது. இதற்கு பிறிஸ்பன் மாநிலத்திலிந்து வந்த இளைஞர்கள் குழு ஒன்று வந்து கலந்துகொண்டு சிட்னி இளைஞர்கள் சிலரை சந்தித்து இரகசிய திட்டம் ஒன்று பற்றி கலந்துரையாடுகிறது. இந்த பிறந்ததின நிகழ்வு முடிந்து ஆளாளாளுக்கு வீடு சென்ற பின்னர், மீண்டும் இந்த இளைஞர்களின் இரகசிய ஏஜென்டுகளின் மினி சந்திப்பு ஒன்று சிட்னியில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் பிரகாரம், சிட்னியிலிருந்தும் பிறிஸ்பனிலிருந்தும் தனித்தனியாக இரண்டு குழுவினர் இந்தோனேஷியாவின் சுற்றுலாத்தலைநகரமான பாலிக்கு செல்கின்றனர். அங்கு ஏற்கனவே சென்றிருந்த மயூரன் சுகுமாரனும் அன்ட்ரூ ஷானும் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஏழு பேரையும் வரவேற்று ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கின்றனர். தனிதனி சிம் அட்டைகளை கொடுத்து தம்மோடு தொடர்பிலிருக்குமாறும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் தெரியப்படுத்துவதாகும் மயூரனும் ஷானும் கூறுகிறார்கள்.
போனவர்களில் சிலர், தாங்கள் செய்யப்போகும் திருக்கூத்தை எண்ணி மிகுந்த பரபரப்புடன் ஹோட்டலுக்குள்ளேயே கிடக்க, இன்னொரு கூட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று பாலி கடற்கரைகளில் ஒய்யாரமாக களியாட்டங்களில் திளைத்திருந்திருக்கிறது.
திட்டத்தை நிறைவேற்றும் நாள் வந்தது. நடந்தது என்ன என்பதை “அலைபாயுதே” படம் போல பின்னோக்கி சென்றுதான் பார்க்கவேண்டும். ஏனெனில், பிடிபட்ட ஒவ்வொருவரும் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அனைத்தையும் ஒன்றசேர்த்து இந்தோனேஷிய நீதித்துறை கூறும் கதை இதுதான்.
அதாவது –
கிட்டத்தட்ட 2004 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவிலிருந்து பாலிக்கு சென்று தொடர்ச்சியாக போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திவந்து கொண்டிருந்த மயூரன் சுகுமாரன் உட்பட ஒரு குழுவினரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கையும் களவுமாக பிடிப்பதற்கு நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய காவல்துறையின் நெடுநாள் கண்காணிப்பின் பயனாக, இந்த ஒன்பது பேரும் பாலியிலிருந்து பெருமளவில் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டிடுவரவிருந்த திட்டம் – அனைத்து விவரங்களுடனும் – புலனாய்வுத்தகவல்கள் மூலம் கிடைக்கப்பெற்றிருக்கிறது.
இதன்பிரகாரம், இந்த ஒட்டுமொத்தக்குழுவினரையும் கூட்டத்தின் தலைவர்களுடன் சேர்த்து அமுக்குவதற்கு முடிவெடுத்த ஆஸ்திரேலிய காவல்துறையினர், இந்தோனேஷிய காவல்துறையினரை தொடர்புகொண்டனர். மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த தகவல்பரிமாற்றத்தில், ஆஸ்திரேலியாவிலிருந்து பாலிக்கு வந்துள்ள ஒன்பது பேரினது பெயர் விவரம், அவர்களது கடவுச்சீட்டு விவரம், அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் விவரம், அவர்கள் கொண்டுவரவிருந்து போதைப்பொருள் மற்றும் அவர்கள் எவ்வாறு மறைத்து கொண்டுவரப்போகிறார்கள் என்பது உட்பட அனைத்தையும் இந்தோனேஷிய காவல்துறையிடம் அள்ளிக்கொடுத்தது.
தனது நாட்டில் புரையோடிப்போயுள்ள போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை ஒழிப்பதற்கு இதில் பிடிபடுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்குமளவுக்கு சட்டத்தை நெருக்கிவைத்திருக்கும் இந்தோனேஷியாவுக்கு ஆஸ்திரேலிய காவல்துறை கொடுத்த தகவல்கள், பொரிகடலை போலானது. தனது பங்குக்கு இந்த ஒன்பது பேரையும் தானும் வேவு பார்த்து சட்டத்தின் எந்த ஓட்டைக்குள்ளாலும் தப்பமுடியாதளவுக்கு அப்படியே அமுக்குவதற்கு திட்டங்களை தயாரித்துவிட்டு, தயாராகவிருந்தது.
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி…
இந்தோனேஷியாவின் விமான நிலையம் ஒன்றின் ஊடாக ஆஸ்திரேலியா புறப்படவிருந்த – பாலி9 குழுவில் – நால்வரை உடம்பில் மறைத்துவைத்திருந்த போதைப்பொருள் பொட்டலங்களுடன் இந்தோனேஷிய காவல்துறையினர் கைது செய்கின்றனர். அதேநாள், இவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பாய்ந்த இந்தோனேஷியாவில் காவல்துறையினர் அங்கிருந்த மயூரனுடன் மேலும் மூவரையும் போதைப்பொருள் பொட்டலங்கள் மற்றும் அவற்றை உடம்பில் ஒட்டும் கருவிகள் என்பவற்றுடன் கையும் களவுமாக கைது செய்கின்றனர். அன்றைய தினம் மாலை, தனியாக ஆஸ்திரேலியா புறப்படவிருந்த அன்ட்ரூ ஷான் விமானநிலையத்தில் வைத்து பல கைத்தொலைபேசிகளுடன் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார்.
நெத்திப்பொட்டில் அடித்தாற்போல் நடந்து முடித்த இந்த நடவடிக்கை, ஆஸ்திரேலிய காவல்துறையினரின் “புண்ணியத்தில்” இந்தோனேஷிய காவல்துறையினர் அரங்கேற்றிய திருவிழா. ஊடகங்கள் எல்லாம் செய்தியை கேள்விப்பட்டவுடன் உச்ச ஸ்தாயியில் கதற தொடங்கின. ஆஸ்திரேலியர்களின் மானத்தை நார் நாரக கிழித்து உலக ஊடகங்கள் எல்லாம் தோரணம் கட்டி தொங்கவிட்டன. “இந்த விஷயம் ஆஸ்திரேலிய காவல்துறைக்கு முதலே தெரிந்திருந்தால், அவர்கள் ஆஸ்திரேலியாவில் இறங்க விட்டு கைது செய்திருக்கலாமே, போயும் போயும் இந்தோனேஷிய காவல்துறையின் கைகளில் ஏன் பிடித்துக்கொடுத்தார்கள். போதைப்பொருள் கடத்தலுக்கு என்ன தண்டனை கொடுப்பார்கள் என்று தெரிந்தும் ஆஸ்திரேலியா ஏன் இப்படி மொக்குத்தனமாக நடந்து கொண்டது” என்றெல்லம் ஆய்வு வாய்வு என்று ஊர்கூடி ஒப்பாரி வைத்தது.
இந்தோனேஷிய அரசு விசாரணைகளை ஆரம்பித்தது. ஒன்பது பேரையம் தனித்தனியாக உருவ ஆரம்பித்தது. பிடிபட்ட கலக்கத்தில், ஆளாளுக்கு தான் தப்பவேண்டும் என்ற ஆதங்கத்தில் நடந்தது ஏல்லாவற்றையும் உளறிக்கொட்டினர். இதிலிருந்து நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்தது.
அதாவது, அன்ட்ரூ ஹானும் மயூரன் சுகுமாரனும்தான் இந்தக்கூட்டத்தின் தலைவர்கள். விமான நிலையத்தில் பிடிபட்ட நால்வருக்கும் ஹோட்டலில் வைத்து அவர்களின் உடம்பில் போதைப்பொருள் பொட்டலங்களை கட்டி ஒளித்து வைத்து அனுப்பியது மயூரன் சுகுமாரன். இந்தோனேஷியா நடவடிக்கையை கச்சிதாமாக கையாளுவதற்கு மயூரனும் இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா வந்தடைந்தவுடன் அங்கு மீதி விஷயங்களை டீல் பண்ணுவதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பொறுப்பாக அன்ட்ரூ ஹானும் இருந்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது. மீதிப்பேர், இதில் குருவிகளாக செயற்பட்டாலும் அவர்கள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் இல்லை. விளைவுகளின் விபரீதங்கள் எல்லாம் தெரிந்துதான் இந்த கடத்தலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் நீதிமன்றுக்கு தெரியவந்தது.
பிடிபட்ட ஒவ்வொருவரும், தனித்தனியே சட்டத்தரணிகளை வைத்து தமக்கு எதிரான வழக்கை எதிர்த்து வாதாடினர். தோல்வி. மேன் முறையீடு செய்தனர். தோல்வி. என்னென்ன சாதகமான சட்ட வழிகள் உள்ளனவோ வற்றையும் தோண்டி பார்த்தனர். தோல்வி. வருடக்கணக்கில் இந்த இழுபறி நடந்தது. இவர்களில் ஒருவருக்கு மட்டும் 21 வருட சிறையும் ஆற பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனையும் வழங்க்கப்பட்டது. மயூரனுக்கும் ஷானுக்கும் மரண தண்டனை வழங்குவது என்று அறிவிக்கப்பட்டது.
இதில் தொடங்கியது பரபரப்பு. இந்த தண்டனைக்கு எதிராக போடாத மேன்முறையீடுகள் இல்லை. போராடாத வழக்கறிஞர்கள் இல்லை. எல்லாமே தோல்வியில் முடிய, ஈற்றில் மரண தண்டனைதான் இருவருக்கும் வழங்குவது என்று முடிவானது. ஆஸ்திரேலியாவின் நான்கு முன்னாள் பிரதமர்கள் உட்பட தற்போதைய அரசும் இந்தோனேஷிய அரசிடம் காலில் விழாத குறையாக மன்றாடியது. அவர்களை விடுதலை செய்யவெல்லாம் நாங்கள் கோரவில்லை. பத்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இரண்டு இளைஞர்களும் எவ்வளவோ நல்வழிப்படுத்தப்பட்டுவிட்டார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது நியாயமில்லை. தண்டனை என்பது ஒரு மனிதனை நல்நெறிப்படுத்துவதாக இருக்கவேண்டும். அந்த வகையில், இந்த இரு இளைஞர்களும் தங்கள் தவறுகளை நன்றாகவே உணர்ந்துவிட்டார்கள். இந்த நிலையில், இவர்களை தண்டனை என்ற பெயரில் கொலை செய்வதால், சட்டமும் நீதியும் எதையும் சாதித்துவிடப்போவதில்லை” என்று இறைஞ்சினார்கள்.
இதற்கு பிறகு எனன நடந்தது என்பதற்கு அப்பால், படுகொலை செய்யப்பட்ட மயூரன் பற்றி சிறு தகவல் குறிப்பை பார்ப்போம்.

ad

ad