புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2015

போராளிகளின் தியாகமே எம் சுகவாழ்வுக்கு காரணம்நாங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது மக்கள் சந்தோசமாக சுகமாக வாழ்வதற்கு, முன்னாள் போராளிகளின் தியாகம், அதற்காக
அவர்கள் பட்ட கஷ்டம் தான் காரணம்.
 
அதனை மறுக்க முடியாது. எனவே அவர்களுக்கு உதவ வேண்டிய கடமை, கடப்பாடு எமக்கு உண்டு. அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று வெள்ளவத்தை நித்திய கல்யாணி நகைமாட உரிமையாளர் ஜெயராஜ் தெரிவித்தார்.
 
வடக்கிலுள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்றுமுற்பகல் இடம் பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்களுக்கு உதவுவதன் மூலமாக நாம் கொடையாளிகள் ஆகிவிடமுடியாது. அது எமது கடமை. மக்கள் சேவையே மகேசன் சேவை. நாட்டில் உள்ள மக்கள், வெளிநாடு வாழ் எமது மக்கள் சுகமாக நிம்மதியாக வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் (முன்னாள் போராளிகள்) செய்த தியாகம், அதற்காகப் பட்ட கஷ்டம் தான் காரணம். நாம் அங்கு சுகமாக வாழ்கிறோம். 
 
எனவே நாங்கள் உங்களுக்கு உதவக் கடமைப்பட்டுள்ளோம். முன்னர் பலருக்கு உதவியிருந்தாலும் இப்போது தான் உங்களுக்கு உதவுகிறோம்.
 
உங்களுக்குக் கடமைப்பட்ட இன்னும் பலரைச் சேர்த்து உங்களுக்கு உதவுவோம். எதிர்காலத்தில் இது தொடரும். தனிக் குடும்பப் பெண்களுக்கு, பாடசாலைக் கல்விக்கு உதவ வேண்டும். நாம் கல்வியில் முன்னேறுவோமாயின் வேறெதுவும் தேவையில்லை என்றார்.
 
ஆலயங்கள் 
உதவ வேண்டும்
வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கு உரையாற்றுகையில்,
வசதி படைத்த சமூக அலகுகளில் ஆலயங்களும் பங்கு வகிக்கின்றன. ஒரு ஆலயத்துக்கு அதிகமாகக் கிடைக்கும் பணம் மீளவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்று தெல்லிப்பளை துர்க்காபுரம் தங்கம்மா அப்பாக்குட்டி முன்னர் கூறியுள்ளார்.
 
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் புதன்கிழமை சந்திப்புக்களில் பல பிரச்சினைகளை முன்வைக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும். மக்களை மையப்படுத்தியதாக வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. தற்போது குழுமச் சமூகப் பொறுப்புணர்வு என்ற தொனிப்பொருளில் வர்த்தக முனைப்பு முன்னேறி வருகிறது. 
அதனூடாக அவர்கள் உதவிகள் புரிகிறார்கள் என்று தெரிவித்தார்.
 
வெள்ளவத்தை நித்திய கல்யாணி நகைமாட உரிமையாளர், வெள்ளவத்தை மயூரபதி தேவஸ்தானம் என்பன உதவிப் பொருள்களை வழங்கின.
 
யாழ். பல்கலை மாணவன் ஒருவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதோடு பலருக்குத் தொழில் ஊக்குவிப்புக்காக காசோலைகளும் வழங்கப்பட்டன. சிலருக்கு மருத்துவ உதவிக்காகக் காசோலைகள் வழங்கப்பட்டன. 
 
பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாணவர்களுக்குச் சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், சமையலறைப் பொருள்கள், பாடசாலை மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள், பெண்களுக்கு சேலைகள் என்பனவும் வழங்கப்பட்டன.
 
இந்த நிகழ்வில் நகைமாடத்தைச் சேர்ந்த ஜெயராஜ், மயூரபதி ஆலயத்தின் சுந்தரலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், முதலமைச்சரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வேம்படி பாடசாலை அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.