புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2015






க்கீரன் இல்ல மணவிழாவை, திருமந்திரங்களை ஓதி தமிழ் முறைப்படி நடத்தி வைத்திருக்கிறார்கள் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தைச் சேர்ந்த ஓதுவாரான குமரலிங்கமும் அவரது உதவியாளரும். இந்தத் திருமணத்தில் புரியாத வடமொழி மந்திரங்கள் இல்லை. அந்த மந்திரங்களின் பொருள் புரிந்தவர்கள் அதை ஓத அனுமதிக்கமாட்டார்கள் என்பது வேறு கதை. காரணம், அதில் அவ்வளவு அபத்த ஆபாசக் குப்பைகள்.

தமிழ்முறைத் திருமணத்தில் இதுபோன்ற அபத்தங்கள் இல்லை. மூடச் சடங்குகள் இல்லை. இறைவன்மீது நம்பிக்கை வைத்து, மந்திரத்தமிழ் இலக்கியங்களான தேவார திருவாசகங்களை இதில் ஓதுகிறார்கள். ’"திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்' என்பது ஆன்றோர் வாக்கு. அத்தகைய உருகவைக்கும் தமிழ் மந்திரங்களும் நன்னெறி போதிக்கும் வள்ளுவனின் மாமறையும் தமிழ்த் திருமணத்தில் ஓதப்படுகிறது. போதாக்குறைக்கு சந்தத் தமிழால் சதிராடிய அருணகிரியாரின் திருப்புகழும் உணர்ச்சிமயமாய் ஓதப்படுகிறது. அன்புமயமான, காதல் கசியும் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை திருவெம்பாவையும் மெய்ம்மறந்து இசைக்கப்படுகிறது. எனவே இம்முறைத் திருமணம் அனைவரையும் உணர்ச்சிப்பெருக்கில் திளைத்து இன்புறவைக்கிறது.

நமது நக்கீரன் இல்ல மணவிழாவை பிப்ரவரி 6-ல் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற ஓதுவார் குமரலிங்கம் சிறப்புற நடத்திவைத்தார். தனது கணீர்க் குரலில், அவர் தமிழ் மந்திரங்களை ஏற்ற இறக்கத்தோடு பாடி, இறைவனை வேண்டியபடியே, பூக்களை இறைத்த காட்சி, எல்லார் மனதிலும் இதமாய் இடம்பிடித்தது. அடுத்து அவர் எந்த மந்திரத் தமிழ் பாடலைப் பாடப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு பாடல் முடிந்தபோதும் உண்டானது.‘"கல்யாணம்ன்னா இதுதான் கல்யாணம். எவ்வளவு உருக்கமா மணமக்களுக்காக இறைவனிடம் வேண்டறாங்க பாருங்க. இதைக் கேட்கும்போதே இறைவன் பூமிக்கு இறங்கிவந்து மணமக்களை வாழ்த்துவான்னு தோணுது. நம்ம புலவர் பெருமக்களின் மந்திரத்தமிழே தமிழ்' என வந்திருந்த அத்தனைபேரும் உச்சிமுகர்ந்தனர்.

நாம் ஓதுவார் குமரலிங்கத்திடம், தமிழ்முறைத் திருமணம் குறித்துக்கேட்டபோது, ‘""தமிழ்ச் ’சொற்களுக்கு உயிருண்டு. அதனால் அதற்குத் தனி சக்தியும் உண்டு. மனமுருகித் தமிழ் மந்திரங்களைப் பாடினால் அந்த இறைவனே மனம் மகிழ்வான். நற்றமிழால் நம்மைப் பாடுக எனக் கேட்டவனாயிற்றே நமது இறைவன். நாங்கள் ஆயிரக்கணக்கான திருமணங்களை தமிழ்முறைப்படி நடத்திவைத்திருக்கிறோம். மணமக்கள் அத்தனை பேரும் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வடமொழி மந்திரங்களை ஓதி நடத்தும் திருமணங்களைவிட நமது தமிழ்த்திருமணம் எல்லா வகையிலும் சிறப்பானது. மேலும் இது குறித்துப் பேசவேண்டுமென்றால், எங்கள் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் அய்யா பேராசிரியர் முனைவர் ந.ரா. சென்னியப்பன் அவர்களிடம் பேசுங்கள்''’என முடித்துக்கொண்டார்.

நாம் 82 வயதான முனைவர் ந.ரா. சென்னியப்பனை சந்தித்தோம். புன்னகையோடு வரவேற்றவரிடம், ""தமிழ்வழித் திருமணங்களுக்கும், வடமொழிவழித் திருமணங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?'' என்றோம். சென்னியப்பனோ ""தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் திருமணம் தமிழ்த் திருமணம். விசாலமான மனம்கொண்ட நம் தெய்வப் புலவர்களின் தமிழையே மந்திரமாக இங்கே உச்சரிக்கிறோம். எந்தவித மூடச்சடங்குகளும் இங்கே இல்லை. நம் தமிழ்வழித் திருமணத்தில்,  ஒரு பெண்ணை ஒருவன், பெரியோர் முன்னிலையில் கரம்பிடித்த மறுகணமே அவனின் மனைவியாகிவிடுகிறாள் என்கிறது. வடமொழித் திருமணம் செய்த உடனேயே மணம்புரிந்தவர்கள் காசிக்கு செல்ல வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், இந்தக் கொடுமை தமிழ்முறையில் இல்லை. நம் தேவாரமும், திருவாசகமும் சொல்லாத எதையும், உலகில் யாரும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இளமையில் துறவறம் கொள்... என அவர்கள் சொல்வதால்தான், காணொளிகள் மூலம் கண்றாவி சாமியார்கள் பகிரங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்''’ என்றார் புன்னகையோடு.

அவரிடம், ‘""அந்தணர்களை வைத்து செய்யாத எந்த ஒரு நல்ல காரியமும் நிறைவுபெறாது என்கிறார்களே?'' என்றோம்.

சென்னியப்பனோ, ""அப்படி ஒரு தவறான கூற்றை நம் தமிழர்களிடம் புகுத்திய அவர்களின் தந்திரத்தை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அந்தணர்கள் என்றால் ‘அவர்கள்தான்’ என்பதில்லை. அந்தணர் என்போர் அறவோர் என்கிறது தமிழ்ச் சூத்திரம். அறத்தின்படி வாழ்கிறவர்கள் எல்லாருமே அந்தணர்கள்தான். நம் செந்தமிழ் அந்தணர்களைக் கொண்டு நாங்கள் இதுவரை 1300-க்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்துவைத்திருக் கிறோம். அவர்கள் எல்லாம் நிம்மதியாக இல்லையா'' என்ன? என்றவர்.... ""மூட நம்பிக்கைகள்தான் அவர்களின் மூலதனம். அஷ்டமி, நவமி, ராகுகாலம், எமகண்டம் என்று சொல்லி அந்த நேரத்தில் பயணிப்பது ஆபத்தானது என்று பயமுறுத்தினார்கள். இப்போது விண்வெளியில் பறக்கும் விமானங்கள் ராகுகாலம், எமகண்டம் பார்த்தா புறப்படுகின்றன. எல்லாமே ஏமாற்று''’ என்கிறார் அழுத்தமாய்.’

""நாமக்கல் மாவட்டம் பருத்திப்பள்ளியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் தமிழ்முறையில் திருக்குட நன்னீராட்டுவிழா, மிகுந்த போராட் டத்திற்கு மத்தியில் நடத்தப்பட்டிருக்கிறதே?'' என்றோம்.’""உண்மைதான். தமிழக வரலாற்றிலேயே 133 குண்டங்கள், அதாவது உலகப் பொதுமறையான திருக்குறளின் 133 அதிகாரங்களை நினைவூட்டும்வகை யில் அமைத்து, தமிழ்முறைப்படி வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தோம். ஆனால் தமிழ் கேட்டு மகிழ்ந்த தமிழ்நாட்டு கடவுள் முருகனுக்கு, அங்கே தமிழ் ஓதி வழிபாடு செய்யக்கூடாது என்று சில அந்தணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். பெரும் போராட்டத்திற்கு பின் நீதி தமிழின் பக்கம் நிற்க, 250 செந்தமிழ் அந்தணர்களைக் கொண்டு அடியார்கள், பக்தர்கள் புடை சூழ திருக்குட நன்னீராட்டை  சிறப்பாய்ச் செய்து முடித்தோம். இது பெரிய சாதனைதான். அதேசமயம்  திருவள்ளுவரையும் தமிழையும் எதிர்க்கிற அவர்களிடம் நம் தமிழ் மக்கள் நிற்பது வேதனை யாகத் தான் இருக்கிறது'' என்றார் சென்னியப்பன் ஆதங்கமாக.

""உங்கள் மணிவாசகர் அருட்பணி மன்றம் குறித்து...?''’ தெரிந்துகொள்ளும் ஆவலுடன் கேட்டோம்.
சென்னியப்பனோ, ""நாங்கள் 1993-ல் இந்த மன்றத்தை விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை வைத்தே ஆரம்பித்தோம். அப்போது கரூரை அடுத்துள்ள கூடலூர்.. .அதாவது அமராவதி ஆறும், காவிரி ஆறும் கூடும் இடம் என்பார்கள்- அந்த இடத்தில் உள்ள ஆற்றுக்குள் இருக்கும் மணிமுத்து ஈஸ்வரன் கோவில் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடிய பின், பாழ்பட்டு நிற்பதாகவும், அங்கே பூஜைசெய்து கொண்டிருந்த அந்தணர் வருவதில்லை எனவும், தமிழ் முறைப்படி அங்கே பூஜை செய்து தரவேண்டும் என்றும் கோவில் நிர்வாகிகள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் சென்று கோவிலை சுத்தப்படுத்தி தமிழ்முறைப்படி வழிபாடு நடத்த முயற்சிக்க, அவாள் எல்லாம் திரண்டு, எங்களை அடிக்கவந்துவிட்டார்கள். அப்போது அவர்கள் சொல்வதே வேதவாக்காய் இருந்தது போலீசுக்கும். எங்களுக்காக பல தமிழ் ஆதரவு அமைப்புகள் களமிறங்கின. தமிழ்தெரியாத சாமிகள் ஊரைவிட்டு ஓடுங்கள்... என்ற கோஷம் வான்வழியாய் இறங்கி அந்த ஆற்று நீருக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஊடகங்கள் எங்களுக்கு துணைநின்றன. இதன் விளைவாக செந்தமிழ் அலையில் ஈஸ்வரன் மிதந்தார். அந்த ஆற்று நீரின்மேல் பதிந்த  தமிழ் மன்றத்தின் பாதச் சுவடுகள்தான் தமிழ்  மண்ணெங்கும் இப்போது பதிந்துகொண்டிருக்கிறது. இப்போது மக்கள் பலரும் விழிப்புணர்வு கொள்ள துவங்கி விட்டார்கள். தமிழ்முறைத் திருமணத்தைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதுவும் உங்கள் நக்கீரன் குடும்பம், தமிழ்வழி திருமணத்தை நடத்தியதால், இதன் பெருமை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது''’என்றார் பூரிப்பாக. தமிழ்நாட்டில் தமிழுக்கு இவ்வளவு எதிர்ப்பா?



ad

ad