புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

சிறு கட்சிகளிடையே ஏக இணக்கப்பாடு * ஜனாதிபதி - பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் 20ம் திகதி இறுதி முடிவு


* எம்.பிக்கள் தொகை 255ஆக அதிகரிக்க உடன்பாடு
20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும்
திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சர் சரத் அமுனுகமவின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்களான அமைச்சர்களான எஸ்.பி. திசாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், சம்பிக ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர். குழு உறுப்பினரான பழனி திகாம்பரத்திற்கு பதிலாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் கலந்து கொண்டார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் அடங்கலான பாராளு மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத, சகல தரப்பும் இணங்கக் கூடிய புதிய கலப்பு தேர்தல் முறையொன்றை உருவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் திங்கட்கிழமை நடைபெறும் முக்கிய கூட்டத்தில் இறுதி முடிவு எட்ட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். அமைச்சரவை உபகுழுவின் சிபார்சுகள் அடங்கிய இறுதி அறிக்கை புதன்கிழமை அமைச்சரவைக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.
எல்லை நிர்ணயத்தின் போது சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் மற்றும் பல் அங்கத்துவ தொகுதிகள் உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டதோடு எம்.பிகள் தொகையை 255 ஆக அதிகரிப்பது தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது. எல்லை நிர்ணய சபை மற்றும் அதற்கு கண்காணிப்பாளர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திர ம் அண்மையில் ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதன்போது தமது யோசனைகளை முன்வைக்க அவகாசம் வழங்குமாறு சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் கோரியிருந்தன. அதன்படி அவற்றின் யோசனைகளை முன்வைக்க புதன் கிழமை நண்பகல் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இதன் போது முஸ்லிம் காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் ஜனநாயக மக்கள் முன்னணி, ஹெல உருமய தேசிய சுதந்திர முன்னணி உட்பட பல கட்சிகள் தமது யோசனைகளை முன்வைத்திருந்தன. அன்று மாலை கூடியஅமைச்சரவை கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரை வழங்குவதற்காக 9 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இதேவேளை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் துரிதமாக புதிய தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதாக அறிய வருகிறது.

ad

ad