புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2015

வீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு - 26 வருடங்கள் அயராது உழைத்தவர்


சொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்... என்பதுதான் உண்மை!
தலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான்.
களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டால் அந்தத் தாக்குதல் நிச்சயம்
வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய போராளிகள் உணர்ந்திருந்த காரணத்தால் "முன்னேறு" என்னும் தளபதியின் புலிக் கர்ச்சனையைக் கேட்டதுமே..வில்லில் இருந்து விடுபட்ட அம்புபோல் போராளிகள் முன்னேறி எதிரிகளின் நிலைகளைத் தாக்குவார்கள்.
பூனகேரித் 'தவளை' நடவடிக்கையின்போது பங்குபற்றிய ஓர் இளம் போராளி சிலகாலம் என்னுடன் நின்றவர்தவளை நடவடிக்கையின்போது அவரையும் அனுப்பும்படி எனக்கு வேண்டுகோள் வந்ததும் அந்தப் போராளி மகிழ்வுடன் துள்ளிக் குதித்தான்..இதுதான் புலிகள் அமைப்பின் சிறப்புக் குணம்!..
எமது போராளிகளுக்கு தாக்குதல் நடவடிக்கையில் பங்கு பற்றுவது என்றால் கரும்பு தின்னுவது போன்றது!.1993இல்...பூனகேரி தாக்குதல்( தவளை பாய்ச்சல்) நடந்தபோது அதில் பங்குபற்ற எமது போராளிகள் ஒவ்வொருவருமே ஆர்வத்துடன் இருந்தார்கள்.
சிலவேளை தாக்குதல் நடவடிக்கைக்கு ஓர் போராளிக்கு அழைப்பு வரவில்லை என்றால் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு எதையோ பறிகொடுத்தவர்கள் போல் இருப்பார்கள்.அந்த நேரத்தில் நாங்கள் அவர்களுக்கு எது சொன்னாலும் அவர்களின் காதுகளில் அது ஏறுவதில்லை.
அதற்கு ஓர் சிறு உதாரணம் சொல்கிறேன் படியுங்கள்..
ஒரு தாக்குதல் நடவடிக்கையில் பங்குபெறும் முன்களப் போராளிகளுக்கு பெரும்பாலும் சில வாரங்களுக்கு முன்னரே அவரின் பொறுப்பாளர் மூலம் அழைப்பு போய்விடும். ஆனால் எங்கே தாக்கப் போகிறோம்?
அல்லது எப்போது அந்த முகாமை தாக்கப் போகிறோம்? என்பதை புலிகள் பெரும்பாலும் இறுதி நேரத்தில்தான் சொல்வர். ஆயினும் முன்கள வீரர்கள் சிலருக்கு சில விசேட பயிற்சிகள் கொடுக்க வேண்டும் என்பதால் முன்பே அழைத்து இராணுவ வரைபடம் பற்றியும் தாக்குதலின் இலக்கு பற்றியும் விளக்கமாகச் சொல்லப்படுவதுடன் அதற்கான சிறப்பு பயிற்சியும் அளிக்கப் படும்.என்னுடன் இருந்த அந்தப் போராளிக்கு இறுதி நேரத்தில்தான் அழைப்பு வந்தது.
ஆனால் அவருடன் பயிற்சி பெற்ற சில போராளிகள் ஏதோ ஓர் நடவடிக்கைக்கு என்று சொல்லி ஏற்கனவே அழைக்கப் பட்டிருந்ததை அறிந்த அந்த இளம் போராளி எப்போதும் சோர்வாகவே காணப்பட்டார்.
ஒருநாள் எனது காருக்கு எண்ணெய் பார்த்து ரேடியேட்டருக்கு' தண்ணீர் விடும் பணியை அவர் செய்து கொண்டிருந்தபோது தண்ணீர் விடும் ரேடியேற்றருக்குள்' எண்ணெயை விடச் சென்றார்.
இதை எதேச்சையாக கண்ட நான் ஓடிச் சென்று தடுத்துவிட்டேன்.தாக்குதலுக்கு அழைப்பு வரவில்லையே என்ற ஏக்கத்தால் யோசனையால் விளைந்த சம்பவம் இது!எனவே புலிகள் என்பவர்கள் உண்மையிலேயே நிஜப் புலிகள் போன்றவர்கள்தான்.
இரையைப் பிடிப்பதுதான் புலிகளின் இலக்கு என்றால், எங்கள் புலிகளின் இலக்கு அதைவிட கூர்மையானது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புலிகள் என்றால் ஆயுதங்களைக்கட்டிக் கொண்டு காட்சி காட்டுபவர்கள் என்று சில வேளை எண்ணம் வரலாம். ஆனால், அவர்களின் இதயத்துக்குள் எப்போதும் சிங்களவர்களை சிங்கள இராணுவத்தை பழிவாங்கவேண்டும் என்ற உணர்வே உண்டு.
அதிலும் பிரிகேடியர் சொர்ணம் போன்றவர்கள், சிறுவயதில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்ந்தபோது பட்ட அடிகளின் வலியைப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.அதனால்தான் அவர்களின் கைகள் எப்போதும் போராட தாக்குதல் நடாத்த துடிக்கின்றன!
பிரிகேடியர் சொர்ணம் அந்த ரகத்தில் இருந்து இன்னும் வேறுபட்டவர் .போராடிய வேளை ஆயுதத்தை ஏந்தியதுடன் தலைமை தாங்கும் பண்பையும் மிகச் சிறப்பாக பெற்ற ஒருவர் என்று கூடச் சொல்லலாம்.
பூனகரி 'தவளை நடவடிக்கையின் போது நாகதேவன்துறை கடற்படை முகாமைத் தாக்கும் பணி தளபதி சூசை தலைமையில் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.
அப்போது கடற்புலிகளின் அரசியல் வேலை என் தலைமேல் விழுந்த நேரம் என்பதால் பின்கள வேலைகளின் சில பாரிய பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்திருந்தார் தளபதி சூசை.அதில் நான் வெளியேயும் உள்ளேயும் ஓடவேண்டியிருந்தது.
அதிக அளவில் மக்களை தாக்குதல் நடக்கும்போதேகொண்டு சென்று களத்துக்கு அண்மையில் சேர்க்கவேண்டி இருந்தது.கைப்பற்றப் படும் சிறியரக நீரூந்து போர்க் கப்பல்கள் பலவற்றை கைப்பற்றி எமது முகாமுக்கு டிராக்டர்களில் ஏற்றிக் கொண்டு செல்வதற்கு பாரிய மனித வலு அன்று தேவை பட்டது.
அதைச் செய்யும் பணியில் அன்று நான் மிகுந்த வெற்றி பெற்றேன் என்றால் அந்த அதிகாலைப் பொழுதில் மக்கள் நூற்றுக்கணக்கில் தாக்குதல் நடந்த இடத்துக்கு எம்முடன் வரத் தயாராக இருந்ததுதான் பெரும் வெற்றிகளில் ஒன்றாகும்!
ஆனால் தளபதி சொர்ணம் எமது இடத்தில் இருந்து தெற்கே தன்..தரைபிரிவுப் படையோடு அப்போது இருந்தார்.
கடற்புலிகளின் தாக்குதல் ஆரம்பித்து அதன்மூலம் பூனகேரிக்கு அரணாக இருந்த நாகதேவன் துறையில் உள்ள சிங்களக் கடற்படை முகாம் கடற்புலிகளிடம் விழுந்த பின்னர்தான் பூனகேரியைச் சுற்றி நின்ற எமது தரைபடைப் பிரிவுகள் பூனகேரி முகாம் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே புலிகளின் திட்டம்.
அழகிய வைகறைப் பொழுதுக்கு முன்னர் கடற்புலிகளின் அதிரடிப் பிரிவு நாகதேவன்துறை கடற்படை முகாமை தாக்கி அழித்து சின்னா பின்னப் படுத்திவிட்டனர்.அப்போதுதான் எதிர்பார்த்தவாறு தளபதி சொர்ணம் உட்பட பல தளபதிகள் தத் தம் குழுக்களை முன்னேறித் தாக்கும் பணியில் ஈடுபடுத்தினர்.
ஆம்..அந்த நடவடிக்கைகள் யாவும் வைகறை பொழுதுக்குள் முடிந்து எண்ணிறைந்தஆயுதங்களை அந்த முகாமுக்குள் இருந்து புலிகள் அள்ளி எடுத்தனர்..அவைகளில்
முக்கியமானவை இராணுவத்தின் கனரக டாங்கிகள் சில, மற்றும் சில ஆட்டிலறிகள் ஆகும்..தானியங்கி துப்பாக்கிகளோ நூற்று கணக்கில் இருந்தன.பிரிகேடியர் சொர்ணனின் படை அணியும் அதில் ஒன்று.


கனரக டாங்கிகளை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் ஏற்கனவே சில போராளிகளுக்கு அவற்றை எப்படி இயக்கவேண்டும்? என்பது பற்றி பயிற்சி கொடுக்கப் பட்டிருந்தது.
இராணுவ வேவு நடவடிக்கைகள் நூறு வீதம் வெற்றி அளித்ததால்தான் அன்று 'தவளை'நடவடிக்கை மாபெரும் வெற்றியை ஈட்டியதுடன் நூற்றுக் கணக்கான இராணுவத்தினரும் மாண்டுபோக அது காரணம் ஆயிற்று.!
தளபதி சொர்ணனின் பங்களிப்பு ஒப்பரேசன் 'தவளை' நடவடிக்கையில் மறக்க முடியாத ஒன்று ஆகும்!
தளபதி சொர்ணம் பங்கெடுத்த சிலமுக்கிய தாக்குதல்கள் பின்வருவன ஆகும்!
(1) ஆகாய கடல் வெளிச் சமர்.
(2) மாங்குளம் தாக்குதல்
3) 'தவளைப் பாய்ச்சல்' தாக்குதல்.
(4) மண் கிண்டி மலைத் தாக்குதல்.
(5) புலிப் பாய்ச்சல் தாக்குதல்
(6) இதய பூமி தாக்குதல்
(7)முல்லை முகாம்தாக்குதல்
(8) சூரியக் கதிர் நடவடிக்கை
(9) ஓயாத அலைகள்' நடவடிக்கை
(10)ஜெய சிக்குறு நடவடிக்கை முறியடிப்பு'
(11) எல்லாளன்' நடவடிக்கை
(12) மண்டைதீவு முகாம் தாக்குதல்
(13) திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற பல தாக்குதல்கள்.
இப்படி இன்னும் ஏராளமான தாக்குதல் நடவடிக்கைகள் உண்டு.எதை எழுதுவது? எதை விடுவது? நிச்சயம் பிரிக்கேடியர் சொர்ணனின் வீர வரலாறு தனி நூலாக எழுதப் பட வேண்டிய ஒன்றே!
பிரிகேடியர் சொர்ணத்தை திருமணம் செய்யும்படி தலைவர் வேண்டிக் கொண்டபோது ஜெனி என்னும் பெண் போராளியை மணந்து கொண்டார்.தலைவர் எது சொன்னாலும் தட்ட மாட்டார் சொர்ணம்.
இயக்கத்தில் தலைவரின் பிரதான மெய்ப் பாதுகாவலராக மட்டும் அல்ல.. உயிர்க் கவசமாக இருந்தவர்தான் பிரிக்கேடியர் சொர்ணம்.
தலைவரின் சொற்படி சொர்ணம் திருமணத்துக்கு சம்மதித்து திருமணம் நடக்க இருந்த வேளை....திருமணத்துக்கு தலைவர் நிச்சயம் வருவார் என்பதால் திருமணத்துக்கு உடுத்தியிருந்த தன் வேட்டிக்குள் தன் கைத் துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டே திருமணம் செய்தார்.
ஏன் தெரியுமா? அப்போதும் கூட தலைவரின் பாதுகாப்பு முக்கியம் என்பதால்! இப்படி ஓர் தலைவரின் மீது விசுவாசம் மிக்க ஓர் வீர மெய்ப் பாதுகாவலரின் கதையை நான் எங்கும்கேட்டதில்லை.
படித்ததும் இல்லை..சுமார் ஆறரை அடிக்கு மேல் உயரம் உள்ள..வீரத்தின் இலக்கணமாக விளங்கிய தளபதி சொர்ணம் 2009 இறுதி முள்ளி வாய்க்கால் போரின்போது தலைவரை தன் சிறகுகளுக்குள் வைத்து காத்து தன் விடுதலைப் போராட்டப் பணியை கடைசி வரை நிறைவேற்றி 15.5.2009இல் வீரச் சாவை தழுவிக் கொண்டார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தை ஆன தளபதி சொர்ணனின் வரலாற்றை, வீரத்தை, செயல்பாடுகளை, அர்ப்பணிப்பு, உணர்வுகளை தமிழ் உலகம் உள்ளவரை எவராலும் நிச்சயம் மறக்க முடியாது! இது ஓர் பூரண வரலாறு இல்லை என்பதால் என்னால் சில சம்பவங்கள் எழுதப் படாமல் விடுபட்டிருக்கலாம்.
ஆனால் ஒரு காலத்தில் தளபதி சொர்ணனின் வரலாறு நிச்சயம் யாராவது ஒரு முன்னாள் புலியால் நிச்சயம் எழுதப் படும்போது அனைத்தும் வெளியில் வரும்!
அப்போது ஓர் வரலாற்று நாயகனின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது மட்டும் உண்மை!.
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
 
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம்.தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது.
இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண்.
தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.
பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர்தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.
இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள்இ கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான்.
அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.
ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான்.
எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.
சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான்.
வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.
இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான்.
சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும் அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.
இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல். சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.
ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை.
ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது.
பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.
இம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.
இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான்.
அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.
நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால் வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.
இந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான்.
தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.
இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.
- விதுரன்-

ad

ad