புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2015

கிளிநொச்சி எஸ்.கே.மூதாளர்கள் (சுவிஸ் எஸ்.கே.நாதன்) பேணகத்திற்கு வட மாகாண முதல்வர் விஜயம்

வடக்கு மகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.
அதனொரு கட்டமாக கிளிநொச்சி மலையாளபுரத்தில் கொடையாளி எஸ்.கே.நாதன் என்பவரால் சிறப்புற பேணப்பட்டு வரும் எஸ்.கே.மூதாளர்கள் பேணகத்திற்கு விஜயம் செய்து அங்கு இருக்கும் மூதாளர்களின் நலன்களை விசாரித்ததுடன் அவர்களுடன் தேனீர் விருந்திலும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது முதல்வருடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசா சமூகசேவையாளரும் ஓய்வு நிலை அதிபருமான இராஜேந்திரம், சமூகசேவையாளர் நிதர்சன்செல்லத்துரை (கண்ணன்), கிராமசேவையாளர் சந்திரபாலன், கரைச்சி பிரதேசசபையின் செயலாளர் கிருஸ்ணகுமார், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உபதலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் மூதாளர் பேணகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இராமகிருஸ்ணமிசன் மற்றும் கொடைவள்ளல் எஸ்.கே.நாதன்  ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்து
இப்பாடசாலை அவசர அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட போது இராமகிருஸ்ண மிசன் நிறுவனத்தினர் இங்கு கொட்டில்களை அமைப்பதற்கான செலவையும் சுற்றுவேலி அமைப்பதற்கான செலவையும் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரம் குடிநீர், கழிப்பறை வசதிகளை இங்குள்ள மாணவ, ஆசிரிய சமுதாயத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இராம கிருஸ்ணமிசன் தலைமை சுவாமியார் சர்வரூபானந்த மகராஜ் அவர்கள் வலது கை கொடுப்பதை இடது கை தெரிந்து கொள்ளப் பிரியப்படாதவர். ஆனால் பல கொடைகளைக் கையளித்து வருபவர். அத்துடன் சுவிஸ் நாட்டில் வாழும் கொடைவள்ளல் திரு.எஸ்.கே.நாதன் அவர்களின் பெருந்தன்மையால் 5 லட்சம் ரூபா செலவில் ஆசிரியர்களுக்கான விடுதி ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இன்னும் பல அபிவிருத்திப் பணிகளுக்காக 15 லட்சம் ரூபாவரை அவர் வழங்கி உதவியதாகவும் அறிகின்றேன்.
இப்பேர்ப்பட்ட கொடைவள்ளல்களால்த்தான் இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் எமது பிள்ளைகள் துணிவுடன் தலைதூக்கி நிமிர்ந்து நிற்கின்றார்கள். அதற்குக் கைமாறு செய்ய வேண்டிய கடப்பாடு மாணவ மாணவியராகிய உங்களைச் சார்ந்தது.
அன்பார்ந்த பிள்ளைகளே! கல்விதான் எமது மூலதனம். ஆகவே கடந்து போன சோகங்களை மனதில் ஒரு புறம் வைத்துவிட்டு, புதிய உத்வேகத்துடன் முறையாகக் கல்வி பயின்று எதிர் காலத்தில் தலைசிறந்த கல்விமான்களாக நீங்கள் மாற வேண்டும் என வாழ்த்தி இன்றைய இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்துக் கௌரவித்த இப்பாடசாலை சமூகத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
அன்னைசாரதா புதிய கட்டட திறப்பு விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசா ஓய்வுநிலை அதிபர் இராஜேந்திரம் அயல்பாடசாலைகளான பாரதிபுரம் மகா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம், இராமகிருஸ்ணா வித்தியாலயம், செல்வாநகர் அ.த.க.பாடசாலை கனகபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாயாலயம் ஆகியவற்றின் அதிபர்கள் பிரதிஅதிபர்கள் கிளிநொச்சி கல்வி வலயத்தில் தொழில்நுட்ப அதிகாரி வேல்குமரன் கிராம சேவகர் சந்திரபாலன் ஓய்வுநிலை கிராமசேவகர் வைரவநாதன் தமிழரசுக்கட்சியில் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளர் பொன்.காந்தன் அன்னை சாரதா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பெற்றார்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
சோகங்களை தள்ளி வைத்து விட்டு உத்வேகத்துடன் கற்க வேண்டும்! மாணவர்கள் மத்தியில் வட மாகாண முதலமைச்சர்
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா இன்று பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில்
அதிபர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, ஆசிரியர்களே, மாணவச் செல்வங்களே, சகோதர சகோதரிகளே,
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதனைத் திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட நீண்ட ஓலைக் கொட்டில்களில்  கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த போதிலும் அவர்களின் கல்வி முன்னெடுப்புக்கள் எதுவித குறைகளுமின்றி வளர்ச்சியுற்று இன்று 350 ற்கும் மேற்பட்ட பிள்ளைகளையும் 15 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு பாடசாலையாகத் திகழ்ந்து வருவது பெருமைக்குரியது.
1977 மற்றும் 1983ல் நடைபெற்ற இனக்கலவரங்கள் காரணமாக மலையகப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மிகக் கூடுதலான மக்கள் கிளிநொச்சிப் பகுதியில் அமைந்துள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர். இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. எனினும் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனியானவொரு அலகாக இயங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஆரம்பப் பிரிவைத் தனியலகாக வேறொரு இடத்தில் ஆரம்பிக்கும்படி அதிகாரிகளின் தொடரழுத்தங்கள் இருந்து வந்தன. ஆரம்பப் பிரிவுக்கான ஒரு காணியை பெற்றுக் கொள்வதில் ஏற்படக்கூடிய இராணுவக் கெடுபிடிகள் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில் அக்காலத்தில் அதிபராக இருந்த திரு.இராஜேந்தின் அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக 5 ஏக்கர் காணியை இப்பாடசாலைக்காகப் பெற்றுக் கொண்டு அக்காணியினுள் உடனடியாகவே 100 அடி நீளம் 25 அடி அகலக் கொட்டில் ஒன்றையும் அதே போன்று 50X25 அளவிலான இன்னொரு கொட்டிலையும் அமைத்து இப்பாடசாலை பாரதி ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது ஏற்கனவே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தமையால் இப் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையைத் தொடங்க முடியாது எனவும் நண்பகல் 12 மணிக்குள் புதியதொரு பெயரை அனுமதிக்காகச் சமர்ப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டதாக அறிகின்றேன். எனினும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திக்குழு ஆகியன ஒன்றாகக் கூடி ஆராய்ந்து அன்னை சாரதாதேவி ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலையைப் பதிவு செய்து இன்று நல்ல முறையில் இப்பாடசாலை அன்னை சாரதாதேவி வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இது இங்குள்ள ஆசிரியர்களினதும் அதிபரினதும் கடுமையான உழைப்பையும் ஊக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
நான் இப்பகுதிக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறைகேள் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். அப்போது மிகவேதனைக்குரிய விடயமாக 2006 – 2009 வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் எனவும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்களாகினர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது என்றும் அறிந்தேன். இவ்வாறு கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணில்த்தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட 6 வகுப்பறைகள், ஒரு காரியாலய அறை, ஒரு களஞ்சிய அறை என்பனவற்றைக் கொண்ட இந்தக் கட்டடத் தொகுதி மிக அழகாக 6.2 மில்லியன் ரூபா செலவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. இறந்து போன அந்தச் சிறார்களை இவ்விடத்தில் மனதில் நிறுத்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மனதுள் பிரார்த்திப்போமாக!
 இப்பாடசாலை ஒரு அழகிய கட்டிடத் தொகுதியைக் கொண்டுள்ள போதிலும் கழிப்பறைகள் எதுவும் இங்கு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் பாரியதொரு குறைபாடாக நான் கருதுகின்றேன். இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் சுற்று வட்டாரத்தை அசுத்தப்படுத்தாமல் அங்கு கட்டப்பட்ட கழிவறைகளைப் பாவித்த மக்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக எங்கோ வாசித்த ஞாபகம். சுத்தம் சுகம் தரும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை நாங்கள் மறக்கக் கூடாது. உரியவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சில கழிப்பறைகளை இங்கு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

ad

ad