புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2015

சென்னையில் நகை விற்பனை கண்காட்சியில் கொள்ளை முயற்சி: கொலம்பியா நாட்டு கொள்ளையன் கைது



சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபலமான நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த நட்சத்திர ஓட்டலில் கடந்த 19-ந் தேதியில் இருந்து வைரநகைகள் விற்பனை கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் வைர நகை வியாபாரிகள் தங்கள் நகைகளை விற்பனைக்கு வைத்தனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வினோத் என்ற வைர நகை வியாபாரியும் தனது வைர நகைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைத்தார். நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் விற்பனை கண்காட்சி முடிந்துவிட்டது.

இரவு 11 மணி அளவில் வியாபாரி வினோத் தான் விற்பனைக்கு வைத்திருந்த வைர நகைகளை பெரிய பையில் போட்டு ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதிக்கு எடுத்து வந்தார். கார் அருகில் நகை பையை வைத்து விட்டு, கதவை திறந்து காரில் ஏற முற்பட்டார்.

அப்போது அவசரமாக அங்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் வினோத்துடன் ஏதோ பேசினார். வினோத்தும் அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த இன்னொரு வெளிநாட்டுக்காரர், வினோத் கார் அருகில் வைத்திருந்த வைர நகைகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடப்பார்த்தார்.

வினோத்தின் கார் டிரைவர், அந்த ஆசாமியை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த ஆசாமி நகைப்பையை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் ஓட்டலுக்கு வெளியில் ஓடி தப்பிச்சென்று விட்டார்.

வினோத்திடம் பேசிக்கொண்டு நின்ற ஆசாமியும் கொள்ளை ஆசாமி என்பது தெரிய வந்தது. அந்த ஆசாமியும் தப்பி ஓடப்பார்த்தார். ஆனால் வினோத்தும், அவரது கார் டிரைவரும் சேர்ந்து அந்த ஆசாமியை மடக்கிப்பிடித்துவிட்டனர். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தேனாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிடிபட்ட வெளிநாட்டு கொள்ளை ஆசாமியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அவர் சர்வதேச கொள்ளை கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஜோஸ் ஒசாரியோ பர்க் (வயது 36). தப்பி ஓடியவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் விவரம் தெரியவில்லை. அவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அவர் தப்பி ஓடாத வண்ணம் சென்னை விமான நிலையத்தில் போலீசாரை உஷார்படுத்தி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இதுபோல நகை கண்காட்சி நடந்தபோது, பல கோடி மதிப்புள்ள நகைகளை கொரியா நாட்டு ஆசாமிகள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த வழக்கில் கொள்ளையர்கள் பிடிபடவில்லை. நகைகளும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நல்லவேளையாக இந்த சம்பவத்தில் நகை கொள்ளை போகாமல் காப்பாற்றப்பட்டுவிட்டது. காப்பாற்றப்பட்ட வைர நகைகள் மதிப்பு ரூ.80 லட்சம் என்று போலீஸ் தரப்பில் முதலில் சொல்லப்பட்டது. ஆனால் உண்மையான மதிப்பு ரூ.38 கோடி இருக்கும் என்ற தகவல்களும் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகம் சார்பில் தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கொலம்பியா ஆசாமி ஜோஸ் ஒசாரியோ பர்க் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ad

ad