சென்னையிலிருந்து ஒகேனக்கல்லைச் சுற்றிப்பார்க்க வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது.
சென்னை தியாகராயர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் கோமதி தம்பதிக்கு நேற்று (ஞாயிறு) திருமண நாள். அதைக் கொண்டாடுவதற்காக தன்னுடைய குழந்தைகள் சச்சின், தர்ஷன்,மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் கெளரி, மைத்துனர் ரஞ்சித் அவரின் மனைவி கோகிலா அவரின்
ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி,சினிஃபால்ஸ்,எடத்திட்டு, கண்காட்சிக் கோபுரம்,தொங்கு பாலம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு மதியம் 1.30 மணியளவில் பரிசலில் சுற்றிப்பார்க்க மாமரத்துக்கடவு பரிசல்துறையை அடைந்திருக்கிறார்கள். அங்குதான் ஆபத்து காத்திருந்திருக்கிறது என்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
9 பேரும் ஊட்டமலையைச் சேர்ந்த காஜா முருகேசன் என்பவரின் பரிசலில் ஏறி பயணம் செய்திருக்கிறார்கள். பெரிய பாணி,ஐவர்பாணி உள்ளிட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு தொம்பச்சிக்கல் பரிசல்துறையைக் கடந்து 20 அடி தூரம் பயணித்துக் கொண்டிருந்த போது பரிசல் கவிழ ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் உயிர்பயத்தில் அலறினாலும் படு வேகமாகப் பாய்ந்தோடும் தண்ணீரை மீறி யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.
தண்ணீரின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், பரிசல் ஓட்டி காஜா முருகேசன் உட்பட பத்துபேரும் மூழ்கினர். எப்படியோ ராஜேஷ் தனி ஆளாகப் போராடி தன் மனைவி கோமதி மற்றும் மகன் சச்சின் இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்துவிட்டார். பரிசலோட்டி காஜா முருகேசன் மற்றவர்களைக் காப்பாற்ற முயன்றும் முடியாததால் அவர் மட்டும் கரைசேர்ந்தார்.
அதன் பிறகு, தண்ணீரில் மூழ்கிய ஆறு பேரையும் மீட்க பரிசல் ஓட்டிகள், ஒகேனக்கல் போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தர்ஷன், கெளரி ஆகியோரின் உடலை ஒரு மணி நேரத்தில் மீட்டனர். கிருஷ்ணமூர்த்தி,ரஞ்சித் ஆகிய இருவரின் உடல்கள் இன்றைக்கு மீட்கப்பட்டுள்ளன. இன்னும் இருவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் மாமரத்துக்கடவு, கோத்திக்கல், தொம்மச்சிக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி ஆகிய ஐந்து பரிசல்துறைகள் தமிழ எல்லைக்குள்ளும் கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் பகுதியில் ஒரு பரிசல்துறை என்றும் மொத்தம் 6 பரிசல்துறைகள் இயங்குகின்றன. இதில் 500 க்கும் மேற்பட்டவர்கள் பரிசல்களை இயக்கிவருகிறார்கள்.
இங்குள்ள பெரும்பாலான பரிசல்காரர்களிடம், ஆபத்துக் காலத்தில் உயிர்காக்கும் லைஃப் ஜாக்கெட் இல்லை. குழந்தைகள் பெண்கள் என சுற்றுலாப் பயணிகளுக்கு லைஃப் ஜாக்கெட் கொடுக்காமலேயே பாதுகாப்பில்லாத பயணத்தைப் பரிசல் ஓட்டிகள் மேற்கொள்கிறார்கள். இதைக் காவல்துறை கண்காணிப்பதும் கிடையாது.
ஒரு பரிசலில் 6 பேருக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் அதிக காசுக்கு ஆசைப்பட்டு, கூடுதலாக ஆட்களை ஏற்றி சுற்றுலா பயணிகளின் உயிரோடு விளையாடி வருகிறார்கள் பரிசல் ஓட்டிகள். ஒகேனக்கல்லைப் பொருத்தமட்டில் அவ்வப்போது விபத்து நடப்பது வாடிக்கையான நிகழ்வாகவே இருக்கின்றது.
அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பிறகுதான் மீட்பு பணி, கண்காணிப்பு பணி என்று காவல்துறையும் தீயணைப்புத் துறையினரும் வருகிறார்களே ஒழிய, நிலையான பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இங்கில்லாதது வேதனையான ஒன்று.
காஜா முருகேசன் மட்டும்தான் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் 10 பேரைப் பரிசலில் ஏற்றிச் சென்றார்? இல்லை. பெரும்பாலான பரிசல் ஓட்டிகள் அபாயகரமான பயணத்தைத்தான் தினமும் மேற்கொள்கிறார்கள். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் எடுக்கப்படவேண்டிய ஒன்று.
முன்னெச்சரிக்கையைத் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றுமா அரசு?