3 செப்., 2015

டிஜிட்டல் மயமாக்கத்திற்காக தமிழர் நிறுவனத்தின் உதவியை நாடிய மான்செஸ்டர் யுனைடெட்!

ங்கிலீஸ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, உலகம் முழுக்க 70 கோடி ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள அணி இதுதான்.


இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அணிதான், இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் அதிகபட்சமாக 20 முறை பட்டம் வென்றுள்ளது.  ஐரோப்பாவின் கவுரவமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியிலும் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.
தற்போது இந்த அணி, உலகம் முழுக்கவுள்ள தங்களது ரசிகர்களை இணைக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மான்செஸ்டர் யுனைடெட்டின் தாய்வீடான 'ஓல்ட் ட்ராபோர்ட்' மைதானத்தில் டிஜிட்டல் கண்காட்சி மையம் அமைகிறது.
137 ஆண்டு  பழமையான இந்த அணியின் தொடக்க காலம் முதல் தற்போது வரையிலான நிகழ்வுகள் 'ஓல்ட் ட்ராபோர்ட்' மைதானத்தில் 'எக்ஸ்பிரியன்ஸ் அட் யுனைடெட்' என்ற பெயரில் டிஜிட்டல் கண்காட்சி மையமாக உருவெடுக்கப்படவுள்ளது.
இதற்காக இந்தியாவின் ஹெச்.சி.எல். நிறுவனத்துடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சுமார்  30 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் டிஜிட்டல் தொடர்பான அனைத்து பணிகளையும் 3 ஆண்டுகளுக்கு இனிமேல் ஹெச்.சி.எல் நிறுவனம்தான் மேற்கொள்ளும்.இதே போல் ஸ்பெயினை சேர்ந்த ரியல்மாட்ரிட் அணி மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தை சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான இந்த நிறுவனம், இந்தியாவின் 4வது மிகப் பெரிய தகவல் தொலை தொடர்பு நிறுவனம் ஆகும். உலகளவில் மிகப் பெரிய விளையாட்டு அணியாக கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் ஒப்பந்தம் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் இதன் மூலம்  ஹெச்.சி.எல். பெற்றுள்ளது.