மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் உள்ள பி.ஆர்.பி. நிறுவன கிரானைட் குவாரியில் குழந்தை உள்பட 4 பேரின் எழும்பு கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் (V.A.O.) அழகு கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பி.ஆர்.பழனிச்சாமி, ஜோதிபாசு, ஐயப்பன், பரமசிவன் ஆகிய 4 பேருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கீழவளவு காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்மன் அனுப்பினார்.
இந்த சம்மனை பி.ஆர்.பழனிச்சாமியின் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். மற்ற மூவரும் நேரில் பெற்றுக்கொண்டனர். ஆனால் காலை 11.30 மணி வரை யாரும் ஆஜராகவில்லை. பி.ஆர்.பழனிச்சாமி சம்மனை நேரில் பெறாததால், நேரில் பெற்று ஆஜராக உள்ளார். அதனால்தான் காலதாமம் ஆகிறது என்று அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மற்ற மூன்று பேரும் ஒரு மணி நேரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் கெடு விதித்தனர். சம்மனை பெற்றுக்கொண்ட ஜோதிபாசு, ஐயப்பன் ஆகிய இருவரும் கீழவளவு காவல்நிலையத்தில் ஆஜராகினர். அவர்கள் இரண்டு பேரிடம் இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏடிஎஸ்பி மாரியப்பன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் பெறும் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.ஆர்.பழனிச்சாமி ஆஜராக வருவார் என்று பத்திரிகையாளர்கள் இன்று காலை முதல் காவல்நிலையத்தில் குவிந்திருந்தனர்.