புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2015

ஐ.நா மனித உரிமைப்பேரவை தீர்மான நடைப்பாட்டை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்புக்குழு நியமனம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் நடைப்பாட்டைக் கண்காணிக்க நிபுணர் குழுவினைக் கொண்ட அனைத்துலக கண்காணிப்புக்குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமனம் செய்யவுள்ளது.
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டு வெளிப்படுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவதைக்  கண்காணிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்கள் உள்ளடக்கியதாக கொண்ட இக்கண்காணிப்புக்கு பற்றிய விபரங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம் தொடர்பிலான பிரதமர் வி.உருத்திரகுமாரனது முழுமையான அறிக்கை பின்வருமாறு :
இலங்கைத் தீவில் நிகழ்த்தப்பட்ட பெருந்திரள் குற்றங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வதற்குரிய வகையில் சிறீலங்காவை அதன் நிகழ்ச்சி நிரலில் வைத்துக் கொண்;டமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது, அதே நேரத்தில் நீதியின் கோட்பாடுகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டமை குறித்த தனது ஏமாற்றத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இம்மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது அமர்வின் போது உலகம் நீதியின் இருவகைத் தோற்றங்களைக் கண்டுள்ளது. ஒன்று அரசுகள் கையளிக்கத் தயாராக இருந்த நீதியின் தோற்றம். இது மனித உரிமைகள் உயர் ஆணையரின் அறிக்கையின் ஐயத்துக்கிடமற்ற முடிவுகளுக்கு நேர் முரணாக இருந்த ஒரு நீதி. நீதியின் மற்றைய தோற்றம், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறீலங்காவை நிறுத்துமாறு கோரிய பத்து இலட்சம் கையெழுத்துக்கள் இயக்கம் மூலமாக 14 இலட்சம் பேர் பங்கேற்றதன் வழியே எடுத்துக்காட்டப்பட்ட மானுட சமூகம் கோரிய நீதியின் தோற்றம்.
வட மாகாண சபை, தமிழ்நாடு சட்டப்பேரவை, நாடுகடந்த அரசாங்கத்தின் பாராளுமன்றம் ஆகியவை சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனித இனத்துக்;கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றை விசாரணை  செய்து வழக்கெடுப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறிமுறையைக் கோரித் தீர்மானங்களை நிறைவேற்றின.
பொறுப்புடைமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ‘உள்நாட்டுப் பொறிமுறையை விடக் கூடுதலான ஒன்று தேவைப்படுகிறது’ என்று  மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் இளவரசர் சாயித் துணிவுடன் கூறினார். மேலும் அவர் ஒரு சிறப்புநிலைக் கலப்பு நீதிமன்றத்தைக் கேட்டிருந்தார் இருப்பினும், இன்று இறுதியில் மனித உரிமைகள் பேரவை, ஓர் அரசுகளின் போக்குக்கொண்ட நிறுவனமாக இயங்கி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அத் தீர்மானம் பின்வருமாறு குறிப்பிடுகிறது:
‘… ஒரு நம்பகமான நீதிசார் செயல்முறையில், நேர்மைக்கும் பாரபட்சமின்மைக்கும் பெயர்பெற்ற தனிநபர்களின் தலைமையிலான சுதந்திரமான நீதித்துறை மற்றும் வழக்கெடுக்கும்; நிறுவனங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்; மேலும் இது தொடர்பில், பொது நலவாய நாடுகளின் சிறப்பு வழக்கறிஞர், மற்றும்  பிற அயல்நாட்டு நீதிபதிகள், பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசுத்தரப்பு வழக்கெடுக்கும் சட்டவாளர்களும்  விசாரணை செய்ய வல்ல அதிகாரிகளும் சிறீலங்கா நீதித்துறைப் பொறிமுறையில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.’
இந்தத் தீர்மானம் பொறுப்பிலிருந்து நழுவிக்கொள்ளும் ஒன்றாக இருக்கிறது. அது பாதிக்கப்பட்டவர்களின் நீதி பெறுவதற்கான உரிமைகளை விட குற்றவியல் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதில் சிறீலங்கா கொண்டுள்ள தீவிர ஆர்வத்துக்கு முன்னுரியமையளிக்கிறது. சிறீலங்காவின் நீதியமைப்பு முறைக்குள் நடத்தப்படும் அனைத்துக் குற்றவியல் நடைமுறைகளும் இனப்பக்கச்சார்பு மற்றும் அரசியல் தலையீடு ஆகியவற்றால் நெருக்கடிக்குள் உட்படுத்தப்படும் என்பது எவருக்கும் நன்கு தெரிந்ததே. சர்வதேச நீதிபதிகள் எத்தனை பேரானாலும் இந்த உண்மை நிலையைத் தடுக்க இயலாது. பெருந்திரள் குற்றங்களில் சிறீலங்கா அரசின் பாத்திரம் மூடிமறைக்கப்பட்டுவிடும்.
எமது வேண்டுகோளுக்கமைய குளோபல் டிலிஜன்ஸ் நிறுவனம் தயாரித்த வள நிபுணர் கட்டுரையில், ஒரு கலப்பு நீதிமன்றம் பாரபட்சமின்றியும் சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்குப்  பின்வரும் பரிந்துரைகளைச் செய்துள்ளது :
ஐ.நா.வுக்கும் சிறீலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட வேண்டிய ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், பின்வரும் பொதுவான அம்சங்களைக் கொண்ட ஒரு கலப்பு நீதிமன்றம் நிறுவப்பட வேண்டும்:
அ) சிறீலங்காவுக்கு புவியியல் ரீதியாக அருகாமையில் உள்ள, சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய  ஒரு நடுநிலை நாட்டில் இடம்பெற வேண்டும்.
 
ஆ) சர்வதேச நீதிபதிகள் மட்டுமே இடம்பெறவேண்டும். அல்லது மாற்றாக ஒவ்வொரு நீதியாளர்கள் குழு அல்லது அமர்வில், சர்வதேச நீதியாளர்களின் பெரும்பான்மையும் அத்தோடு சம எண்ணிக்கையில் சிறீலங்கா சிங்கள நீதியாளர்களும்; தமிழ் நீதியாளர்களும் இடம்பெறவேண்டும்.
 
இ) ஒரு சர்வதேச வழக்கு தொடுக்கும் வழக்கறிஞர், அவருக்கு ஒரு தமிழர் மற்றும் ஒரு சிங்களவர் என இரண்டு உதவியாளர்கள்.  
 
ஈ) ஒரு சர்வதேசப் பதிவாளர்,  ஒரு தமிழர் ஒரு சிங்களவர் என இரண்டு உதவியாளர்கள்
 
உ) ஒரு சர்வதேச வழக்கறிஞரின் தலைமையில் பிரதிவாதிதரப்பு ஆதரவுப் பிரிவு.
 
ஊ) போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை உட்பட (பொருந்தக்கூடிய), பொருள்மிக்க பாரம்பரியமான சர்வதேச சட்டங்கள்  பயன்படுத்தப்படுதலும் அதேபோல, உத்தரவுப் பொறுப்புடைமை மற்றும் கூட்டுக் குற்றவியல் செயல்பாடு போன்ற அங்கீகரிகப்பட்ட குற்றவியல் பொறுப்பேற்பு வடிவங்கள் 
 
எ) சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நடைமுறைகளின் (ஐஊஊPசு) பாதுகாப்புக்களுடன்   ஒத்திசைவாக இருக்கக் கூடியவகையில் மாற்றியமைக்கப்பட்ட சிறீலங்கா நடைமுறைச் சட்டம் பயன்படுத்தப்படுதல்
 
ஏ) மேலே கண்டவற்றுக்கு  ஒத்திசைவான வகையில் நிதியளிப்பு மற்றும் நிதி மேலாண்மைக் குழுவை உருவாக்குவது
மேற்கூறிய அம்சங்களில் ஒன்றுகூட தீர்மானத்தில் வெளிப்படையாகச்  சேர்க்கப்படவில்லை.  அத் தீர்மானம் குறைந்தபட்ச சர்வதேச பங்கேற்பு என்ற சாயம் பூசப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றே தவிர வேறொன்றும் அல்ல. உயர் ஆணையர் ஏற்கெனவே தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, அத்தகைய ஓர் உள்நாட்டுப் பொறிமுறை செயல்பட வாய்ப்புமில்லை.
சூடான் நாடு டார்புரில் இழைத்த சர்வதேசக் குற்றங்களுக்காக ஓர் உள்நாட்டுப் பொறிமுறையினை நிறுவ முன்வந்தபோது, அந்த முன்மொழிவு மனித உரிமைப் பேரவையால் முற்றாக நிராகரிக்கப்பட்டது. அதேபோல, அண்மைய அமர்வில் வடகொரியாவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு  மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்தது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதே மட்டத்திலான நீதியைப் பெறுவதற்குத் தகுதியானவர்களாக இருந்தும்  இன்று அவர்கள் மேல் காட்டப்படும் பாரபட்சமான இரட்டை அணுகுமுறையும் குறுகிய அரசியல் நன்மைகள் மேலோங்கிய நிலையில் அடிப்படை நீதியின் கோட்பாடுகள் நசுக்கப் படுவதும் மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் தொடர்ந்து சீர்குலைப்பதாகவே அமையும்.
உயர் ஆணையரின் அறிக்கையும் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பிற அம்சங்களிலும் மாறுபடுகின்றன. உயர் ஆணையரின் அறிக்கை தமிழர்கள்தான் இன ஒடுக்குமுறையின் கொடூரங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்கள் எனத்  தெளிவாகவும் திரும்பத்திரும்பவும் தெரிவிக்கிறது. அப்படியிருக்கையில், இத் தீர்மானமோ தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற  இருப்பையே மறுப்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.
சிறீலங்காவின் புதிய ஆட்சி மனித உரிமைப் பேரவையுடனான தனது கொடுக்கல் வாங்கலினது தொனியை மாற்றிக்கொண்டாலும் முந்தைய ஆட்சியைப் போலவே புதிய ஆட்சியும் உயர் ஆணையரின் சிறீலங்காவுக்கான  விசாரணை பணியகம் (OISL) அங்கே  வருவதற்கு இடமளிக்க மறுத்ததோடு, அவர்களால் கோரப்பட்ட தகவலைத் தருவதையும் தவிர்த்துவிட்டது என உயர் ஆணையரின் அறிக்கை தெரிவித்தபோதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானமோ புதிய சிறீலங்கா ஆட்சி ஏதோ நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மீட்பிக்க வந்த தேவதூதர்கள் என்ற எண்ணத்தைக் கடும் முயற்சி எடுத்துச் சித்தரித்துள்ளது.
தமிழ் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவது இன்றைய ஆட்சியிலும் தொடர்கிறது. வட கிழக்கில் ஆயுதப் படைகள் நிலங்களை ஆக்கிரமித்துள்ள நிலை இன்றும் தொடர்கிறது. அச்சுறுத்தலும் அதிகாரமும் இன்னும் நிலவுகின்றன. இன்றைய ஆட்சியினது புவிசார் அரசியலில் ஏதொ ஒரு மாற்றம்  தென்பட்டாலும் வேறெதுவுமே மாறியதாகத் தெரியவில்லை.
மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் தமிழர்களுக்கான உண்மையான நீதி தாமதிக்கப்பட்டுள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான பரிகாரங்களைப் பெறுவதற்கான வெளி இன்றைய சர்வதேச சட்ட அமைப்பில் இருக்கிறது. உயர் ஆணையரே அவரது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது போல, அரசுகள் தாங்களாகவே சர்வதேசக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்குட்படுத்தவும், வழக்குத் தொடரவும்  உலகப்பொது நீதி  வழங்கலின் அதிகாரங்களின் கீழ் இடமுன்டு.
உயர் ஆணையர் அவரது அறிக்கையில் பயன்படுத்தியுள்ள ‘நியாயமான காரணங்கள்’  என்ற சட்டபூர்வத்தரமும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிடிப்பாணை பிறப்பிப்பதற்கு முன்பு தேவைப்படும் நிரூபண ஆதாரமும் ஒன்றுதான் என்பதை இவ்விடத்தில் நாம் குறிப்பிட விரும்புகிறோம். ஆகவே, அந்த அடிப்படையில் சர்வதேசக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிராகக் குற்றவியல் விசாரணைகளைத் தொடங்குமாறும், அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை அவர்களின் நாட்டைவிட்டுக் கொண்டுவரும் நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் இந்த உலகின் நாகரீகமடைந்த நாடுகளை நாம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். உயர் ஆணையரின் அறிக்கை அத்தகைய நடவடிக்கைக்கான ஆதாரமாக அமைகிறது.
உலகப்பொது நீதி  வழங்கல் என்ற முக்கியமான சட்டக் கோட்பாட்டின் கீழ்  வழக்குகளை எடுத்துகொள்ள விரும்பும் அரசுகளுக்குக் கிடைக்கும் வகையில்  மனித உரிமைப் பேரவையின் விசாரணையின் போது திரட்டப்பட்ட ஆதாரத்தை வெளிவிடுமாறும் உயர் ஆணையரிடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எந்த ஒரு அரசுடனும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. போர்க் குற்றவாளிகளையும் இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர்களையும் நீதியின் முன்பு நிறுத்துவதற்கு  சட்டத்தின் கீழ் கிடைக்கக்கூடிய அனைத்து உத்திகளையும் கண்டறிய உதவுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழிவகை செய்யும். சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் சர்வதேச சட்டத்தின் தரங்களை எட்டாதவரைக்கும் குற்றங்களுக்கு ஏற்ற பரிகாரங்களாக அமையப் போவதில்லை..
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணியாக மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவதைக்  கண்காணிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் வல்லுனர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு சர்வதேசச் செயற்குழுவை அமைக்கவுள்ளது. இக்குழு பற்றிய விபரங்களை வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி அறிவிக்க விரும்புகிறோம்.
முடிவாக, மனித உரிமைகள் விடயத்தில் சர்வதேச குடிமைச் சமுதாயம் (Civil Society) எடுத்து வந்துள்ள வகிபாகத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கீகரித்துக் கொள்ள விரும்புகிறது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தையும், முன்னாள் யுகோஸ்லாவியாவுக்கும் ருவாண்டாவுக்குமான சர்வதேசத் தீர்ப்பாயங்களையும்  நிறுவியதிலும், சூடானை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தியதிலும் எவ்வாறு சர்வதேச குடிமைச் சமுதாயம் தீவிரமாகப் பங்காற்றியதோ அது போலவே குற்றமிழைத்தவர்கள் மீது வழக்கு விசாரணையைத் தூண்டுவதற்கும்  தொடர்ந்து பங்காற்றி வருகிறது.
தமிழர்களின் துயரத்தின்பாலும், மனித இனம் உயர்த்திப் பிடித்துவரும் நீதியின் தரிசனத்தை இறுதியாக உறுதிப்படுத்துவதிலும் உள்நாட்டிலும் உலகெங்கும் உள்ள குடிமைச் சமுதாயம் காட்டிவரும் அளவிறந்த ஆர்வம் மேலோங்கிவருவதில் நாங்கள் மனம் நெகிழ்கிறோம்.  இனப்படுகொலையால் பாதிக்கப்பட்வர்களுக்கு நீதியின் தரிசனத்தைக் கொண்டுவருவதற்கும், இலங்கைத் தீவில் இழைக்கப்பட்ட சர்வதேசக் குற்றங்களை வழக்குவிசாரணைக்குக் கொண்டுவருவதற்குமான வகையில் மக்கள் பொதுக்கருத்தைத் திரட்டும் உலகளாவிய இயக்கத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுவருமென உறுதி கூறுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad