புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 அக்., 2015

மட்டக்களப்பில் இரு கோயில்கள் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை


மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இனந்தெரியாத நபர்கள், ஆலய விக்கிரகங்கள், மற்றும் சிலைகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஆலயத்தின் நவக்கிரகத்தில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள், மற்றும் சிலைகள் அடங்கலான 13 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல் அதிகாலை 4.30 மணிக்கு ஆலயத்துக்குச் சென்ற ஆலய பரிபாலனைச்சபைச் செயலாளர், ஆலய விக்கிரகங்கள், உடைக்கப்பட்டு கீழே கிடப்பதை கண்டுள்ளார்.சில சிலைகள் உடைத்தெடுக்கப்பட்டு அருகில் உள்ள வீதிகளில் தூக்கியெறியப்பட்ட நிலையில் சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பின்னரே ஆலயம் உடைக்கப்பட்டுள்மை தெரிவந்ததாக குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிருவாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி அறிந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்துக்கு இன்று காலை விஜயம் செய்து நிலைமையை நேரில் கண்டு விசாரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு காடுகளுக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுக்குள் வீசப்பட்டுக்கிடந்த விநாயகர் உருவக்கல்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி கிராமத்தில் உள்ள இத்தியடி விநாயகர் ஆலயத்தில் பிரதேச மக்களால் வழிபட்டு வந்த விநாயகர் உருவக் கல் விஷமிகளினால் வெள்ளிக் கிழமை இரவு திருடப்பட்டு பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வழக்கம் போல் குறித்த ஆலயத்திற்கு சனிக்கிழமை காலை விநாயகரை வழிபடச் சென்ற பொது மக்கள் சிலர் ஆலயத்தில் விநாயகர் சுவாமி உருவக் கல் இல்லாமல் காணப்பட்டுள்ளமையும்,
அங்கு வைக்கப்பட்டிருந்த சுவாமி உருவப்படங்கள் தூக்கி வீசப்பட்டும் ஆலயப் பொருட்கள் சில காணாமல் போயுள்ளமை தொடர்பாக கண்ணுற்று ஆலய நிர்வாகத்தினருக்கு தகவல் வழங்கியமையினையடுத்து,
நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சுவாமியின் உருவக் கல்லை தேடிய போது உருவக் கல்லானது ஆலயத்தின் அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் காணப்பட்டுள்ளது.
பின்னர் அதனை மீட்டு வாகனேரி சித்தி விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தற்போது மேற்படி ஆலயத்தில் சுவாமியின் உருவக் கல்லானது வைக்கப்பட்டுள்ளதால் பிராயச் சித்த பூஜை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த இத்தியடி ஆலயத்தின் கட்டிட நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்ததும் குறித்த உருவக் கல்லை இத்தியடி ஆலயத்தில் வைத்து வணங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேற்படி உருவக் கல்லானது கடந்த வருடமும் இதே போன்று பற்றைக் காட்டுக்குள் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் பிராயச் சித்த பூஜை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே மேற்படி விடயம் அடிக்கடி இடம் பெறுவதனால் பொலிசார் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் எஸ்.வியாழேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டு குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பொலிசாரை கேட்டுக் கொண்டனர்.

ad

ad