புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

வ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் மூன்று நோக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

1) அச்சுறுத்துவது

எதிரிகள் என்று யாரை முடிவு செய்கிறார்களோ அவர்களை அச்சுறுத்தும் பொருட்டு அவர்களைச் சேர்ந்திருக்கும் குழுவைத் தாக்கி அழிப்பார்கள். இந்த எதிரிகள் இன அல்லது மத ரீதியிலான குழுக்களாக இருக்கலாம், ஏதேனுமொரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த மக்களாகவோ, அந்நாட்டின் அரசாங்கப் பிரநிதிகளாகவோ இருக்கலாம்.
2) ஒருங்கிணைப்பது

இந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொள்வதற்குக் காரணமே நீங்கள்தான். உங்கள் துயரங்களை நீக்கத்தான், உங்கள்  நோக்கங்கள் நிறைவேறவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் உயிரைக் கொடுத்து பாடுபடுகிறோம் என்பதை உணர்த்தி மக்கள் ஆதரவைத் திரட்ட முயல்வார்கள். ஏதேனும் ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களாக இந்த மக்கள்கூட்டம் இருக்கும்.

3) பிளவுபடுத்துவது

தாங்கள் ஆதரிக்க விரும்பும் பிரிவினருக்கும், எதிர்க்க விரும்பும் பிரிவினருக்கும் இடையில் பகை வளரவேண்டும் என்று இவர்கள் விரும்புவார்கள். அந்தப் பகையுணர்வைத் தீவிரப்படுத்த தாக்குதல்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

வெள்ளி இரவு பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 200 பேருக்கு மேல் காயமடைந்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வைத்தும் இந்தப் படுகொலைகளை நிகழ்த்திய எட்டு பேரும் இறந்து விட்டனர். ஒருவர் காவல் படையினரால் சுடப்பட்டிருக்கிறார்; மற்றவர்கள் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ஒரு தரப்பும் இல்லை, அது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல என்று இன்னொரு தரப்பும் இன்று முழுக்க இணையத்தில் வாதிட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், சற்று முன்பு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அதிகாரபூர்வமான ஒப்புதல் கடிதம் இணையத்தில் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்த விவாதம் கிட்டத்தட்ட முற்றுபெற்றுவிட்டது.

பிரெஞ்சு, அரபு மொழிகளிலும் ஆடியோ வடிவிலும் வெளிவந்திருக்கும் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* கவனமாக டார்கெட்டைத் தேர்ந்தெடுத்து இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறோம்.

* பாலியல் தொழிலுக்கும், ஆபாசத்துக்கும் தலைநகரகரமாக விளங்கும் பாரிஸில் தாக்குதல் நடந்திருப்பது சரியே.

* நடந்துகொண்டிருப்பது சிலுவை போர். ஐரேப்பாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பும் ஒரு நாடுதான் பிரான்ஸ்.

* முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகள்மீது குண்டுகள் வீசி போர் தொடுப்பவர்கள் அனைவருக்கும் இந்தக் கதிதான் ஏற்படும்.
* தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்திய சகோதரர்களுக்கு அல்லா துணையிருப்பார்.

* மற்றபடி, இது ஓர் ஆரம்பம் மட்டுமே.

அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே செல்லவும் : <https://news.siteintelgroup.com/Jihadist-News/is-claims-paris-attacks-warns-operation-is-first-of-the-storm.html>

இந்த அறிக்கை உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால்தான் வெளியிடப்பட்டது என்பது உறுதியாகும் பட்சத்தில், மேலே நாம் பார்த்த மூன்று நோக்கங்களும் இந்தத் தாக்குதல்களில் வெளிப்படுவதைப் பார்க்கமுடிகிறது.

1) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போரில் பிரெஞ்சு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அந்நாட்டு அரசியல் தலைமையையும் மக்களையும் அச்சுறுத்தும் நோக்கில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

2) பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட புனிதப் போர் என்று அந்தத் தாக்குதலுக்கு ஒரு தார்மிக நியாயம் கற்பிக்கப்பட்டிருக்கிறது.

3) மேலை நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும், ஒடுக்கப்படும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் நோக்கமும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.

தி கார்டியனில் இதனை ஆராய்ந்துள்ள ஜேசன் பர்க், கூடுதலாக அல் காயிதாவையும் சந்தேகித்துள்ளார். தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது அல் காயிதாவே நினைவுக்கு வருகிறது என்கிறார் அவர். ஐ.எஸ்.ஐ.எஸ், அல் காயிதா இரண்டும் இணைந்தும் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்பது வேறு சிலரின் நம்பிக்கை.

ஒரு காலத்தில் ஜிகாதி தீவிரவாதத்தின் தந்தையாகக் கருதப்படும் அல் காயிதா இன்று சுருங்கிய கட்டெறும்பாக மாறிக்கிடக்கிறது. ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போ தனது ஆக்டோபஸ் கரங்களை நாலாபக்கமும் படரவிட்டபடி பரவிக்கொண்டிருக்கிறது. ஈராக், சிரியா என்று தொடங்கி பல நாடுகளில் இஸ்லாமிய காலிஃபைட் அரசை நிறுவவேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நீண்ட கால லட்சியம். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் என்று ஒரு மாபெரும் கூட்டணி தமக்கு எதிராகத் திரள்வதைக் கண்டு சினம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ், இவர்கள் அனைவரையும் எதிரிகளாக அறிவித்து போர் தொடுத்திருக்கிறது. பாரிஸ் தாக்குதல் என்பது அந்தப் போரின் ஒரு பகுதி மட்டுமே.

இதுபோக, பிரிட்டனைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பிரமுகரான ஜிகாதி ஜான் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதும், பாரிஸ் தாக்குதலுக்கு ஒரு முக்கியக் காரணம். சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் போரில் பிரெஞ்சு வீரர்களும் பங்கேற்றிருக்கிறார்கள்.

சார்லி ஹெப்டோ தாக்குதல் முடிவடைந்து இன்னும் ஓராண்டுகூட முடியாத நிலையில், அதைவிடக் கடுமையான இன்னொரு தாக்குதலை பிரான்ஸ் சந்தித்திருக்கிறது. பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைப் பெயரிட்டுக் குறிப்பிட்டு கண்டித்திருக்கிறார். இது எங்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போர்; விரைவில் பழிக்குப் பழி வாங்கப்படும் என்றும், கருணையற்ற முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் சூளுரைத்திருக்கிறார். அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸ் ஒரு நீங்கா இருளுக்குள் நுழைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்டிருக்கிறது பிரான்ஸ் மட்டுமல்ல, லெபனானின் தலைநகரம் பெய்ரூத்திலும் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. இதில் 43 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 200 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
அதிர்ச்சியூட்டும் இந்நிகழ்வுகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இவற்றுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்?

1) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தீவிரத்தன்மை கொண்ட வாஹாபி இஸ்லாத்தை உலகம் முழுக்க எடுத்துச்செல்ல துடிக்கிறது. இந்த முயற்சிக்கு எதிரான கருத்தியல் போரை அறிவுஜீவிகள் முன்னெடுக்கவேண்டும். வெறுப்பு அரசியலையும், சிந்தாந்தத்தையும் வளர்த்தெடுக்கும் இத்தகைய இயக்கங்களிடம் இருந்து அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றவேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைத் தனிமைப்படுத்தவேண்டும்.

2) ஹாலண்டே சொல்வதைப் போல் பலமடங்கு தீவிரத்துடன் இரக்கமற்ற முறையில் பதிலடி கொடுப்பது சரியான தீர்வு அல்ல. ஜிகாதி ஜானுக்குப் பழிவாங்க பாரிஸ். பாரிஸுக்குப் பழிவாங்க இன்னொரு ஜிகாதி ஜான் என்று ஆரம்பித்தால் முடிவே இராது. நிலைமை மேலும் தீவிரமடையும்.

3) பாரிஸ் தாக்குதலோடு சேர்த்து பெய்ரூத் தாக்குதலும் அதே தீவிரத்தன்மையுடன் அணுகப்பட வேண்டும். வளர்ந்த நாட்டைச் சேர்ந்த மக்களுக்கும், பின்தங்கிய நாட்டைச் சேர்ந்த மக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை.

4) ஒவ்வொரு மதமும் தனக்குள் இருந்து கிளைத்தெழும் பிழையான சக்திகளை அடையாளம் கண்டு உள்ளிருந்தே தகர்க்க வேண்டும்.

5) மதத்தின் பெயரால் முன்னெடுக்கப்படும் ஒரு தீவிரவாதப் போரைக் கண்டிக்கும்போது அந்த மதத்தைச் சேர்ந்த அனைவரையும் சேர்த்து பழிக்கக்ககூடாது.

6) கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு இடையில் பகையை வளர்க்க விரும்பும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கங்களுக்கு நாம் மறைமுகமாகக்கூட உதவிடக்கூடாது. இஸ்லாமோஃபோபியா ஒழிக்கப்படவேண்டும். ஜிகாதி பீதி, இஸ்லாமியத் தீவிரவாதம் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தி அப்பாவி இஸ்லாமியர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது. இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும்.

7) தீவிரவாதத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டே இருப்பது வீண். வேரை ஆராயவேண்டும். பிரச்னைகள் தோன்றும் சமூகங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். முறையான அரசியல், சமூக, வரலாற்று நோக்கில் தீர்வுகள் காணப்படவேண்டும்.

சுதந்தரம், சமத்துவம், சகோதரத்தும் ஆகிய முழக்கங்களை உலகுக்கு வழங்கிய நாடு பிரான்ஸ். அந்த முழக்கங்களுக்கு மெய்யாகவே உயிர் கொடுக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

8) தீவிரவாத இயக்கங்களைப் போலவே நாமும் விளைவுகள் குறித்து யோசிக்காமல், பெரும் நாசங்களை விளைவிக்க வேண்டியதில்லை. தீவிரவாதத்துக்கு எதிரான பெரும் போர் என்று சொல்லி ஜார்ஜ் புஷ் இதைத்தான் செய்தார். அது பலனளிக்கவில்லை என்பதையே பாரிஸும், பெய்ரூத்தும் நமக்கு உணர்த்துகின்றன.