புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 நவ., 2015

பாரிஸ் படுகொலைகள், இது தொடரும் தொல்லைகள்!

நிச்சயம் இயற்கை மாற்றங்களினால் உலகம் அழிந்திட போவதில்லை! நம் வாழ்வை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்து
செல்லும் தீவிரவாத கூட்டத்தினால் தான் இந்த உலகம் அழியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது பாரிஸ் தீவிரவாத தாக்குதல். அன்று அரசர்கள் கண்டம் விட்டு கண்டம் சென்று போரிட்டனர். நாடுகளை கைப்பற்றினர். வீரர்கள் மடிந்தனர். ஆனால் அதில் ஒரு போர் தர்மம் கடைபிடிக்கப்பட்டது. நிச்சயம் முன்னறிவிப்பு இன்றி எதுவும் நடந்திருக்காது. ஆனால் இன்று உலக அரசியலை காரணம் காட்டி, ஏதும் அறியா அப்பாவி மக்களை பணயக்கைதிகள் ஆக்குவதும், கொலை செய்வதும் எந்த நிலையுலும் தர்மமே ஆகாது. இவர்கள் கொள்கை வேண்டுமானால் மேற்கத்திய அரசியலுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஒவ்வொரு முறையும் பழியாவது. தினமும் தன் உயிரை தான் மட்டுமே பாதுகாத்து கொள்ளும் அப்பாவி மனிதன்தான். 
 
உலக வல்லரசுகள் மீண்டும் ஒரு தீவிரவாத தலைவனை சீக்கிரமே போட்டு தள்ளும். அதன் எதிரொலியாக மீண்டும் வேறு நாட்டிலோ, ஏன் நம் நாட்டிலே கூட சாமானியர்கள் கொல்லப்படுவர். ஆட்டு மந்தையில் ஒரு ஆடு ஓடும் திசையில் எல்லா ஆடுகளும் ஓடுமாம். அது போலதான் இந்த மனித இனமும். ஒரு தலைவனை தேர்ந்தெடுக்க, நாமும் ஆடுகளாய் தான் மாறிப்போனோம். நம் கூட்டத்தில் ஒரு ஆடு தலைவனின் வீராவேச பேச்சுக்கு செவி சாய்க்க, நாமும் அவன் பின்னே ஆமாம் சாமி போட்டு கொண்டு பின் தொடர்கிறோம். ஆடுகள் கசாப்பு கடைக்காரனை தான் நம்பி அழியுமாம். அதை போலத்தான் நாமும் நயவஞ்சகன் என்று தெரிந்தும் இந்த அரசியல் தலைவர்களுக்காக வாழ்ந்து விட்டு அவர்களை காப்பாற்றும் வேலியாக இருந்து கொண்டு, பின்  தீவிரவாதத்துக்கு முதல் பழியாகிறோம்.

தீவிரமாய் தங்களை தயார் செய்துகொண்டு, கொள்கைக்காக தங்கள் உயிரை இழப்பதை பெருமையாகவும், தியாகமாகவும் எண்ணி உயிரை விடும் இந்த பைத்தியகாரர்கள், இன்னொரு சன்னதிக்கும் இந்த அறிவுரையை வழிமொழிந்து விட்டுதான் அழிந்து போகின்றனர். ஆனால், நரிகளாய் இருந்து கொண்டு தங்கள் காரியங்களை சாதித்து கொண்டும், தீவிரவாதத்தை அழிப்போம் என்று வெறும் வாய் சவடால் விட்டுக்கொண்டும் வாழும் இந்த அரசியல் கயவர்கள், தன்னை தலைவனாக்கிய பொது மக்களை தீவிரவாததிற்கு இரையாக்கி விட்டு, தான் மற்றும் தன் குடும்பத்தை பாதுகாத்து வாழ்வது நம் கண் முன்னாலே நடத்தப்படும் விட்டலாச்சார்யா நாடகம் தானே.
 
சரித்திரம் நமக்கு கற்று தந்த பாடங்களில் போர் தர்மம் மிக முக்கியமானது. போரில் அழிவது வீரர்களாய்தான் பெரிதும் இருப்பார்கள். ஏனென்றால் ஒரு நாட்டின் அடையாளம் அதன் போர் வீரர்களையும், எதிர்த்து நின்று போராடும் குணத்தையும் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் ஒரு நாட்டிற்கு அரசன் தானே முன் நின்று போர் செய்வான். அவனே தன் தேச மக்களை அழிவுக்கிரையாக்கிய சரித்திரம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்க, எவனோ ஒருவன் இயற்றும் சட்டங்களுக்காகவும், நாட்டின் அரியணையில் அமர்ந்து உலக அரசியலை ஆட்டி படைக்கும் தலைவன் ஒருவன் இளைத்த கொடுமைகளுக்காகவும் பழியாக வேண்டியவன் அவன் தானே தவிர சாமானியர்கள் நிச்சயமாக இல்லை.  

இன்றைய சூழலில் தீவிரமாய் தன் கொள்கைகளை ஏற்று வாழும் ஒரு கூட்டம், தங்களை தியாகிகளாய் காட்டி கொண்டு சற்றும் எதிர்பாராத நிமிடங்களில் பொது மக்களை கொன்று குவித்து விடுகின்றனர். இதில் நேர்மையும் இல்லை. முறையாக தங்கள் கோரிக்கைகளை உலக மேடையில் கொண்டு செல்லும் செயலாகவும் இவை எனக்கு தெரியவில்லை. உயிரின் உன்னதம் அறியாத இம்சை போர் குற்றவாளிகளே, உங்கள் தெய்வங்கள் எதுவானாலும் அதன் சன்னதியில் நிச்சயம் உங்கள் மனசாட்சியின் குரலாக கேளுங்கள். உங்கள் கோபங்களுக்கு இரையாக வேண்டியவன் தலைவனா இல்லை அப்பாவி தொண்டனா என்று. உங்கள் குரல் ஒரு தலைவனுக்கு கேட்க வேண்டும் எனில் அதை சொல்ல ஆயிரம் வழிகள் உண்டு. பாவப்பட்ட மக்களின் படுகொலைகள் நிச்சயம் உங்கள் ஆதங்கத்தை முன்நகர்த்தி செல்லாது.
 
திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்தால் இவர்கள் திருந்தி விடுவார்களா என்றால் அதற்கு நிச்சயம் நம்மிடத்தில் பதில் இல்லை. புத்தி சொல்ல யாரும் வரப்போவதில்லை. நிச்சயம் புத்திமதி சொன்னாலும், அவர்களுக்கு அது புரிந்திட போவதும் இல்லை. உலக அரசியல் மாற்றங்களில் ஏற்பட்ட சில சூழ்ச்சிகளில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு காரணம் அவர்களால் நாளும் கொல்லப்படும் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லை என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை நிறுத்த, தீவிரவாதிகளை திருத்த உலகில் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். அனைவரும் சமம் என்ற நிலை உருவாகிட உலக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். ஒருவன் மட்டும் பணம் பார்ப்பான், மற்றவன் எல்லாம் அவன் பணம் பார்ப்பதை பார்த்து கொண்டே இருப்பான். இடையிடையே எவனோ ஒருவனின் வெறிச்செயலுக்கு இரையாகி கொண்டும் இருப்பான் இந்த இளிச்சவாயன். இந்த நிலை மாற வேண்டும். இன்று வேறு நாட்டில் நடந்த சம்பவம் நேற்று நம் நாட்டிலும் நடந்தது. நாளை நம் ஊரிலும் நடக்க கூடும். அப்படி ஒன்று நடுக்கும் முன் நாம் என்ன செய்ய முடியும். நிச்சயம் முடிந்த வரையில் நம்மை நாமே தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

உலக அரங்கில் நல்ல தலைவர்களின் வருகை அதிகரிக்க வேண்டும். அது உங்களில் ஒருவராக கூட இருக்கலாம். நேர்மையின் எதிரொலி எல்லா திசைகளிலும் ஒலித்திட வேண்டும். அது அந்த மூடர்களின் செவிகளில் விழுந்திட வேண்டும். அவர்களாய் திருந்தும் வரை தீவிரவாதம் நம்மை வாட்டி வதைக்கும் வாதமாய் தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. தீவிரம் காட்டினால், தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற மூட நம்பிக்கைகள் நிச்சயம் முடிவுக்கு வரவேண்டும். உயிரின் விலை தெரியா தீவிரவாதிகளே, உங்கள் தோட்டாக்களுக்கு இரையாக வேண்டியது சாமானியர்கள் இல்லை. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள்.