புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2015

முதலாவது வடக்கு மாகாண சபையின் 41வது அமர்வு15.12.2015 அன்று காலை 9.30 மணிக்குமாகாண பேரவைச் சபாமண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும்.2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் சம்பந்தமான அறிமுகவுரை

அவைத் தவிச்சாளர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, சபையில் வீற்றிருக்கும்
கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்களே வடமாகாண சபையின் நிர்வாகம் எமது கையில் கிடைக்கப்பெற்று 2 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் 2016ம் ஆண்டிற்கான எமது மூன்றாவது நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை சமர்ப்பிக்க முன்னர் எமது தற்போதைய நிலை பற்றி ஒரு சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகின்றேன்.
கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் போது எனது உரையில் வடமாகாணத்தின் அப்போதைய நிலை பற்றியும் பலவருடங்கள் கடந்தும் போரினால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து எமது மக்கள் இன்னமும் முற்றுமுழுதாக விடுபடவில்லை என்ற கருத்தையும் தெரிவித்திருந்தேன். தற்போதும் அந்த நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. போரினால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட எமது மக்கள் வீடுகளை இழந்து, சொத்துக்களை இழந்து, குடும்பத்
தலைவர்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, பெற்றோர்களை இழந்து, உடல் அங்கங்களைப் பறிகொடுத்து நிர்க்கதியாய் நிற்கின்றார்கள். மேலும் காணாமல்ப் போனேரின் குடும்பத்தினர், சந்தேகத்தின் பேரில் சிறையில் வாடுபவர்களின் குடும்பங்கள் என பலதரப்பட்ட மக்கள் தமது குறைகளை தினமும் எம்மிடம் தெரிவித்தவாறு உள்ளனர்.
அதே நேரம் வெளிநாட்டுத் தூதுவர்கள், தூதுவராலய அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பல மட்டங்களில் உள்ளவர்கள் எம்மை அணுகி வடமாகாண சபையினதும் இங்கு வாழ்கின்ற மக்களினதும் நிலைமைகள் பற்றித் தினமும் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். ஆனாலும் இதுவரை குறிப்பிடக் கூடியளவு முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
இப்பகுதியில் மத்திய அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது மேற்கொள்ளப்பட இருக்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பல எமது மக்களுக்கு நன்மை பயப்பதைவிட தென் பகுதி மக்களுக்கு நன்மை வழங்கும் திட்டங்களாகவே காணப்படுகின்றன.
அத்துடன் புதிய அரசாங்கத்தினது செயற்பாடுகள் மேம்போக்காக நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதாகக் காணப்படுகின்ற போதிலும் மறைமுகமாக மாகாணசபைகள் மீதான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் பேணுகின்ற வகையில்த் தான் காணப்படுகின்றன. அத்துடன் மாகாணசபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைக்கும் வகையிலும் மத்திய அரசாங்கத்தினது நேரடிக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கக் கூடிய வகையிலுமான மறைமுகத் திட்டங்களை அமுல்படுத்த முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அண்மையில் மத்திய அரசாங்கத்திடமிருந்து ‘கிராம இராஜ்ஜியம்’ என்கின்ற புதிய திட்டத்திற்கான வரைவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்ற கிராம மற்றும் மாவட்ட மட்டத்திலான குழுக்களே சகல அபிவிருத்திச் செயற்திட்டங்களையும் தீர்மானித்து செயற்படுத்துகின்ற அதிகாரத்தினை கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றன. இது மாகாண சபைகளைப் புறந்தள்ளி மத்திய அரசு தனது நேரடிச் செல்வாக்கை பிரயோகிக்க முற்படுகின்ற ஓர் புதிய வடிவிலான திட்டமாகக் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒவ்வொரு விடயத்திலும் தனது பிடியை இறுக்க முற்படுகின்றதே தவிர தளர்த்த முற்படவில்லை. அதிகாரப் பரவலாக்கத்திற்குப் பதில் அதிகார மையமாக்கலையே இன்றைய அரசாங்கம் கடைப்பிடிக்க எத்தனிப்பது போல்த் தெரிகின்றது.
கடந்த காலத்தில் எம் மீது திணிக்கப்பட்டிருந்த ஆளுனரின் கட்டுப்பாடுகள் பிரதம செயலாளரின் ஒத்துழையாமை போன்ற தடைகளில் இருந்து நாம் இப்போது விடுபட்டுள்ள போதிலும் எமது செயற்பாடுகளை செயற்திறனுடன் முழுமையாக நிறைவேற்றுவதற்கு முடியாமல் உள்ளது.
பல வழிகளில் மத்தியன் செல்வாக்கை மேம்படுத்தவும் மாகாணத்தைப் புறக்கணிக்கவுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மையாக இருக்கின்றன. மேலும் அரச அலுவலர்களின் உளப்பாங்கில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு நாம் இன்னமும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் நாங்கள் இவ்வருடம் பின்நிற்கப் போவதில்லை என்பதை இங்கு கூறிவைக்கின்றேன்.
மத்திய அரசினது மன நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு எமது மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு வடமாகாண அரசிற்கு அனுசரணையாக எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளையும் வாழ்வாதார தேவைகளுக்குமான உதவிகளையும் புரிய அவர்கள் முன்வருவார்கள் எனவும் நம்புகின்றேன். எம்மிடையே உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து எமது மக்களின் விடிவிற்காக 2016ல் அனைவரும் கைகோர்த்துப் பாடுபடுவோம் என இச்சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் விளித்து எனது ஆரம்ப உரையை நிறைவு செய்து 2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க விழைகின்றேன்.
மாகாணசபையொன்று இல்லாதிருந்து நீண்ட காலத்தின் பின்னர் வடமாகாணத்தில் முதன்முதலாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில் இந்த வடமாகாண சபையின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை இச்சபையில் சமர்ப்பிப்பதில் மகிழ்வடைகின்றேன்.
வடமாகாணசபையின் ஆட்சிக் கட்டமைப்புக்குட்பட்ட எமது 5 மாவட்டங்களின் பொருட்டு ஆற்றப்படவுள்ள நடவடிக்கைகளுக்காக 2016ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள், அந்நிதியை நிதியீட்டம் செய்யும் வழிமுறைகள் தொடர்பாக இவ் விபரங்களை சமர்ப்பிக்க விழைகின்றேன்.
ரூபா 23,269.880 மில்லியன் 2016ம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக எமது மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீண்டு வரும் செலவீனத்திற்காக ரூபா 18,574.230 மில்லியனும் மூலதனச் செலவீனத்திற்காக ரூபா 4,695.650 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் வரவு செலவுத்திட்டமானது வடமாகாணத்தில் வசிக்கும் சுமார் பன்னிரண்டு இலட்சத்து முப்பத்தையாயிரத்து அறுபது (1,235,060) மக்களின் தேவைகளை வடமாகாணத்திற்கான முதலமைச்சு மற்றும் ஏனைய நான்கு அமைச்சுக்களின் ஊடாகவும் ஏனைய மாகாண அலகுகள், திணைக்களங்கள் ஊடாகவும் எம்மால் வழங்கக் கூடிய பயன்களை எமது மக்களுக்கு வழங்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
முதலில் பொதுவான சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியுள்ளது. அரசியல் யாப்பின் 13ம் திருத்தச் சட்டம் எமது வடமாகாணசபை பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே வழிநடத்தப்பட்டு வருகின்றது.
தொடக்கத்திலேயே நாம் பதவிக்கு வந்த போதே அச்சட்டத்தின் பலவிதமான குறைபாடுகளையும் தேவைப்பாடுகளையும் குறிப்பிட்டிருந்தோம். எனவே அவற்றிற்கு அமைவாகவே எமது நிர்வாகம் ஆற்றுப் படுத்தப்பட்டு வருகின்றது என்பதை நாம் மறத்தலாகாது.
வருடாவருடம் மாகாணங்களுக்குரிய நிதியமானது நிதி ஆணைக்குழுவினால் மாகாணசபை செலவினங்களுக்காக தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு சிபாரிசு செய்யப்பட்டு மாகாணங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இவ்வருடம் இவை ஒரு அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அதனூடாக எமக்குத் தரப்படவேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டிருப்பினும் ஒன்பது மாகாணசபைகளினதும் முதலமைச்சர்களின் எதிர்ப்பின் நிமித்தம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆணையைத் தொடர்ந்து அந்த வழிமுறை கைவிடப்பட்டது. மாகாணங்களை மத்திக்கு அடிமைப்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகவே இதனைக் காண்கின்றேன்.
பிராந்தியங்களுக்கான அபிவிருத்தியை சமஅளவில் அடைந்துகொள்ளும் நோக்குடன் பின்வரும் பிரமாணங்களின் அடிப்படையில் மாகாணங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

ad

ad