புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2015

உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் ஏகமனதாக தீர்மானம்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மையப்படுத்தி தை மாதத்தினை உலகளாவிய தமிழ் மரபுத் திங்களென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில்  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்விலேயே இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடாவின மாநில, உள்ளுராட்சி, கல்விச்சபை மட்டத்தில் உத்தியோகபூர்வமாக தமிழ் மரபுத்திங்களை அங்கீகரித்து வருகின்ற அடிப்படையில் இதனை உலகளாவியரீதியில் காவிச்செல்லவும் ஊக்குவிக்கும் பொருட் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முழுமையான விபரம் :
உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் குறித்த தீர்மானம்
பொது :
கனடாவில், ஜனவரி மாதமானது தமிழ் மரபுத்திங்கள் என வழங்கப்படுகிறது. கனடாவின் பல்கலாச்சார தேசியக் கொள்கைகளுக்கு இணைவாகவும், கனடா வாழ் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சமூக வளர்ச்சிக்கு உந்து சக்தியாகவும் தமிழ் மரபுத்திங்கள் அமைகிறது.
 மாநில அளவில் கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசு தமிழ் மரபுத்திங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அத்துடன் ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு உள்ளுராட்சி மன்றங்களும், கல்விச் சபைகளும் உத்தியோகபூர்வமாக தமிழ் மரபுத்திங்களை அங்கீகரித்து வருகின்றன.
தமிழ் மரபுத்திங்கள் கருத்தியலை உலகளாவிய நிலையில் எடுத்துச் செல்லும் முயற்சியின் வெளிப்பாடாக, உலகளாவிய தமிழ் மரபுத் திங்கள் என்ற தீர்மானத்தை நாடுகடந்த தமிழீழ அரசு இத்தால் முன்மொழிகிறது.
தீர்மானம் :
1. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமானது உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்படுகிறது.
2. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டவகையில் தீர்மானிக்கப்பட்டு மேன்மைதங்கிய பிரதமரின் ஆணைக்கு உட்பட்டு உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
அடிப்படை நியாயம்: 
ஈழத்தமிழர் புலம்பெயர் நாடான கனடாவில் அரச நிர்வாக அங்கீகாரத்துடன் ஜனவரி மாதமானது தமிழ் மரபுத்திங்கள் என உத்தியோகபூர்வமாக வழங்கி வருகிறது. மேலும் தமிழர் மரபுத் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி மாத மத்தியில் தமிழ் மக்களால் உலகளாவிய நிலையில் கொண்டாடப்பட்டும் வருகிறது. இவைதவிர நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உலகளாவிய நிலையில் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழ்நிலைப்பட்ட ஆக்க சக்தியாகத் திகழ்கிறது. எனவே (1) புலம் பெயர் தேசங்களாகக் கணிக்கப்படும் நாடுகள் (2) தமிழீழத்தின் பல்வேறு பகுதிகள் (3)இலங்கைத்தீவினுள் தமிழீழம் தவிர்ந்த பகுதிகள் (4) இதர நாடுகள் அனைத்தும் இணைந்து ஜனவரி மாதத்தை உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் என கொண்டாடுவதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்மொழிந்து வழிநடத்துவது மிகப் பொருத்தமானதாகும்.
நடைமுறை: 
1. தமிழ் மரபு குறித்த எண்ணப்பாடுகளை தமிழ் மக்களுக்கும், தமிழர் வாழும் நாடுகளிலுள்ள பிற இனத்தவருக்கும் காத்திரமாகச் சொல்வதன் மூலம் தமிழ் மொழி, தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாசாரம் ஆகியவற்றின் விழுமியங்களைக் கொண்டாடுதல்.
2. எதிர்காலத் தலைமுறைக்கு தமிழ் மரபு குறித்த சீரிய அறிவைப் புகட்டுவதற்கு ஏற்றதாக அமையும் செயற்பாடுகளைக் கைக்கொள்ளல். (செயல்பாடுகள் கீழ்வரும் இணைப்பில் தனியே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.)
3. நாடுகடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் நாடுகளில் நாடுகடந்த அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்ற செயற்குழுக்கள் மூலம் உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்
4. நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் இல்லாத நாடுகளில் நாடுகடந்த அரசின் எண்ணப்பாடுகளுக்கு ஏற்று இயங்கும் செயற்குழுக்கள் மூலம் உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்
5. உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் கருத்தியலைப் புரிந்து நடைமுறைப்படுத்தும் எந்தவொரு அமைப்பிற்கும் ஆதரவு நல்கும் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தல்.
இணைப்பு: 
உலகளாவிய தமிழ் மரபுத்திங்கள் செயற்பாடுகள்:
கீழ்க்காணும் செயல்பாடுகள் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மேலும் விரிவாக்கத்துக்கு உள்ளாக்கப்படுதல் உறுதி செய்யப்படுகிறது.
1. கலாச்சார நிகழ்வுகள்
2. தமிழ்மரபு குறித்த நூல்கள் வெளியீடு
3. தமிழ் மரபு குறித்த ஒலி ஒளி வடிவ ஆவணங்கள்
இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad