புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2015

ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னையின் எஃப்.சி

ந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது சீசன் அரையிறுதில் நடப்பு சாம்பியன் அத்லெடிகோ டி கொல்கட்டா
அணியை வீழ்த்தி, சென்னையின் எஃப்.சி அணி இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்துள்ளது. இன்று கொல்கத்தாவில் நடந்த அரையிறுதி போட்டியின் இரண்டாவது சுற்றில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது. ஆனால், முதல் சுற்றில் 3 கோல்கள் முன்னிலை பெற்றிருந்ததால் சென்னை அணி 4-2 என்ற இறுதி கோல் கணக்கில் கொல்கத்தாவை வென்று முதன் முதலாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

நான்கு நாட்களுக்கு முன்னர் நடந்த அரையிறுதியில் சென்னை அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றிருந்தது. சென்னை அணியின் ஜீஜே, பெலிசாரி மற்றும் மெண்டோசா ஆகியோர் கோலடித்திருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது அரையிறுதி இன்றிரவு 7 மணிக்குத் தொடங்கியது. 3 கோல் பின்தங்கிய நிலையில் அதிரடி வியூகங்களோடு போட்டியைத் தொடங்கியது கொல்கத்தா. கேப்டன் போர்ஜா ஃபெர்னாண்டஸ் கடந்த ஆட்டத்தில் காயத்தால் வெளியேறியதால், அந்த அணிக்கு பெரிதும் பிண்ணடைவாக அமைந்தது. குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்யவே 3 கோல்கள் தேவை என்பதால் 3 தடுப்பாட்டக்காரர்களை மட்டுமே களமிறக்கினார் கொல்கத்தா பயிற்சியாளர் ஹபாஸ்.

360 நிமிடத்தில் முதல் கோல்

ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் சென்னை அணி சற்று ஆதிக்கம் செலுத்தியது. நட்சத்திர வீரர் மெண்டோச வழக்கம் போல் எதிரணியினருக்கு குடைச்சல் கொடுத்த வண்ணம் இருந்தார். ஆனால், அதன்பிறகு சுதாரித்து விளையாடிய கொல்கத்தா அணி தனது வீரர்களை முன்னோக்கி செலுத்தியது. இந்த சீசனில் எதிரணியை அதிகம் கோலடிக்க விடாமல் சொப்பனமாய் விளங்கிய சென்னை அணியின் கோல்கீப்பர் எடல் அபோலா, கடந்த 360 நிமிடங்களில் தனது முதல் கோலை விட்டார். சென்னை அணியின் அரணாய் கருதப்படும் மெண்டி செய்த சிறு தவறைப் பயன்படுத்திய கொல்கத்தா வீரர் லெகிக் 22-வது நிமிடத்தில் கோலடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பின்னர் கொல்கத்தா அணி சென்னையின் கோல் போஸ்டை அடிக்கடி முற்றுகையிட்டது. எனினும், அதை சென்னை வீரர்கள் திறம்படத் தடுத்துவிட்டனர். இரண்டு அணியினரும் களத்தில் சற்று வேகம் காட்டியதால் நிறைய ஃபவுல்கள் ஏற்பட்டன. குறிப்பாக சென்னை அணிக் கேப்டன் எலானோ தொடர்ச்சியாக பல ஃபவுல்கள் செய்தார்.
போராடிய கொல்கத்தா

முதல் பாதியின் முடிவில் 1-0 என கொல்கத்தா முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் அவ்வணி வீரர்கள் டௌட்டி, இசுமி, லெகிக் ஆகியோர் கோலடிக்க பெரிதும் போராடினர். அவர்கள் அடித்த பல ஷாட்கள் கோல்கம்பத்தைத் தாண்டிப் போயின. சில ஷாட்களை சென்னை கோல்கீப்பர் திறம்பட செயல்பட்டு கோல் போகாமல் தடுத்துவிட்டார். ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டிரி அடித்த பந்தை நொடி நேரத்திற்குள் ரியாக்ட் செய்து மிகச்சிறப்பாகத் தடுத்தார் எடல். இவர் முதல் சீசனில் கொல்கத்தா அணியில் விளையாடி கோப்பை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் இயான் ஹியூம் அட்டம் முடியும் தருவாயில் கோலடித்து சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் லெகிக் கொடுத்த பாசை அவர் கோலாக்க ஆட்டம் சூடு பிடித்தது. மேலும், ஒரு கோல் அடித்தால் ஆட்டம் டிரா என்ற நிலையில், சென்னை அணியின் ஃபிக்ரு கோலடிக்க சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவது உறுதியானது. இறுதியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
கோலி vs தோனி

ஆனாலும், முதல் சுற்றில் பெற்ற முன்னிலை காரணமாக சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் கோவா அணி டெல்லி டைனமோஸ் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை அணியும் கோவா அணியும் மோதவுள்ளன. அப்போட்டியில் வெல்லும் அணி ஐ.எஸ்.எல் மகுடத்தை சூட்டும். கோவா அணிக்கு விராத் கோலியும், சென்னை அணிக்கு தோனியும் இணை உரிமையாளர்களாக இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் இரு கேப்டன்களில் யார் வெல்வர் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஐ.பி.எல்.லிலிருந்து வெளியேற்றப்பட சென்னை ரசிகர்களுக்கு பெரும் வரப் பிரசாதமாய் அமைந்துள்ளது சென்னையின் எஃப்.சி.

ad

ad