புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2016

3 மாணவிகள் மரணம் சிக்கியது செல்போன்! சிக்கலில் வாசுகி..?


3 மாணவிகள் உயிரிழந்த அன்று எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் வாசுகியின் செல்போனில் மட்டும் ஒருவர் 5 முறை பேசியுள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய 3 பேரும் கடந்த 23ம் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
இதுகுறித்து அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல்துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகிய 2 பேரை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் நீதிமன்றத்திலும், அவரது ஆதரவாளர் வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மாணவிகள் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி. காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதன்படி வாசுகி, வெங்கடேசன், சுவாக்கர் வர்மா, கலாநிதி ஆகிய 4 பேரையும் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
விசாரணையின்போது கல்லூரி தாளாளர் வாசுகி, தனது காரில் முக்கிய ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் சிபிசிஐடி காவல்துறையினர் கள்ளக்குறிச்சியில் உள்ள வாசுகியின் வீட்டுக்கு சென்றனர். அங்கு ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அந்த காரின் கண்ணாடிகள் மூடப்பட்டு இருந்தன. கார் சாவி இல்லாததால், காவல்துறையினர் அந்த காரின் கண்ணாடியை உடைத்து சோதனை நடத்தினர். அப்போது காரில் 3 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் இருந்தன. அவற்றை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனர்.
3 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தன்று வாசுகியின் ஒரு செல்போனில் மட்டும் ஒருவர் 5 முறை பேசியுள்ளார். அந்த நம்பரை வைத்து, அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாசுகியின் கார், 3 செல்போன்கள், முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறையினர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணியிடம் ஒப்படைத்தனர்.

ad

ad