புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2016

தேசிய கீதம் தமிழில் பாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும்! டக்ளஸ் தேவானந்தா

1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடியது போன்று, இம்முறை நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின விழாவிலும் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பாடப்படவுள்ளது.
இது தேசிய நல்லிணக்கத்திற்கான உணர்வுப்பூர்வமான சமிக்ஞையின் வெளிப்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ்,
 தமிழ் மக்கள் பெரும்பாலாக வசித்து வரும் பகுதிகளில் நிகழ்த்தப்படும் அரச நிகழ்வுகளின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும். சிங்கள மக்கள் பெரும்பாலாக வாழும் பகுதிகளில் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட வேண்டும். அதேநேரம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும் மக்கள் கலந்து கொள்கின்ற அரச நிகழ்வுகளில் தேசிய கீதத்தின் இசை ஒலிபரப்பப்பட வேண்டும். இதன் போது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இந்த இசைக்கேற்ப தமது மொழிகளில் தேசிய கீதத்தை பாட முடியும். இது எமது மக்களின் உணர்வு சார்ந்த விடயமாகும். தமக்குத் தெரிந்த மொழிகளில் தேசிய கீதத்தை எம்மக்கள் உள்வாங்கும் போதுதான் அவர்களுக்கு தேசிய உணர்வுகள் ஏற்படும். இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளேன்.
நாட்டின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழிலும் பாட வேண்டும் என்பது எமது மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இக் கோரிக்கையை கடந்த காலங்களில் நாம் முன்வைத்து வந்திருந்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
தேசிய கீதத்தை தமிழ் மொழியிலும் பாடலாம் என்பது எமது அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடாகும். அந்த வகையில், நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிகழ்வில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ad

ad