புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மார்., 2016

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கியது: முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி போராடி ஹாங்காங்கை வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட்
16 அணிகள் இடையிலான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில், முதலாவது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் களம் காணும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி, பிரதான அணிகள் விளையாடும் சூப்பர்–10 சுற்றுக்கு முன்னேறும்.
ஜிம்பாப்வே 158 ரன்கள்
இந்த நிலையில் முதலாவது சுற்றின் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஹாங்காங் (பி பிரிவு) அணிகள் நாக்பூரில் நேற்று மோதின. டாஸ் ஜெயித்த ஹாங்காங் கேப்டன் தன்விர் அப்சல் முதலில் ஜிம்பாப்வேயை பேட் செய்ய கேட்டுக்கொண்டார்.
இதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. தனது முதலாவது அரைசதத்தை எட்டிய சிபான்டா 59 ரன்களும் (46 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), சிகும்புரா 30 ரன்களும் (13 பந்து, 3 சிக்சர்), வாலெர் 26 ரன்களும், கேப்டன் ஹாமில்டன் மசகட்சா 20 ரன்களும் விளாசினர். ஜிம்பாப்வே அணியில் மூன்று முன்னணி வீரர்கள் ரன்–அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அந்த அணி இன்னும் அதிகமான ரன்களை குவித்திருக்கும்.
தொடர்ந்து ஆடிய அனுபவம் இல்லாத ஹாங்காங் அணி முடிந்த வரை கடுமையாக போராடியது. எதிரணிக்கு ஓரளவு நெருக்கடி அளித்த போதிலும், இலக்கை தொட முடியவில்லை.
20 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடித்த ஹாங்காங் அணி 6 விக்கெட்டுக்கு 144 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜாமி அட்கின்சன் 53 ரன்களும் (44 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் தன்விர் அப்சல் 31 ரன்களும் (17 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.
கேப்டன் கருத்து
ஹாங்காங் கேப்டன் தன்விர் அப்சல் கூறுகையில், ‘மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம். ஜிம்பாப்வேயை நாங்கள் 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். எங்களது பேட்டிங் திறமையை வைத்து, இந்த இலக்கை எட்டி விட முடியும் என்று நினைத்தேன். ஆனால் ஜிம்பாப்வே பவுலர்கள் பவர்–பிளேயில் (24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்) சிறப்பாக பந்து கட்டுப்படுத்தி விட்டனர். இது தான் ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டது’ என்றார்.
20 ஓவர் கிரிக்கெட்டில்
அதிக வயதில் அறிமுகமான ரையான் கேம்ப்பெல்
ஹாங்காங் அணியில் ரையான் கேம்ப்பெல், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக நேற்று களம் இறங்கினார். அவருக்கு வயது 44 ஆண்டு 30 நாட்கள். இதன் மூலம் அதிக வயதில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது தாகிர் 43 வயது 176 நாட்களில் தனது முதல் 20 ஓவர் போட்டியில் களம் கண்டதே அதிக வயதில் அறிமுகமான வீரராக விளங்கினார்.
இந்த ஆட்டத்தில் ரையான் கேம்ப்பெல் 9 ரன்னில் (19 பந்து) கேட்ச் ஆனார். கேம்ப்பெல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். முன்பு பேட்டிங்குடன் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக 2002–ம் ஆண்டு இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38, 16 ரன்கள் வீதம் எடுத்தார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும் அதன் பிறகு அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது பாட்டி சீனாவைச் சேர்ந்தவர். இதனால் 2012–ம் ஆண்டு குடும்பத்துடன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு உள்ளூர் போட்டிகளில் ஆடிக்கொண்டே, கிளப் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். அதன் தொடர்ச்சியாக ஹாங்காங் அணியிலும் இடம் பிடித்து விட்டார்.
2002–ம் ஆண்டு ரையான் கேம்ப்பெல் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆன போது, அவர்களை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணியில் பிரன்டன் மெக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தொடர்ந்து 14 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் ஆடிய மெக்கல்லம் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். ஆனால் ரையான் கேம்ப்பெல்லின் கதை முற்றிலும் வித்தியாசமானது. 14 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்த ரையான் கேம்ப்பெல், ஹாங்காங் அணியின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்திருக்கிறார்.

ad

ad