புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2016

பழம் போச்சு... கழகம் பரிதாபமாச்சு


மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம்,  இதுவரை காணாத வகையில் புதிய பாதையில் பயணிக்கிறது. இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டி
என்பதைத் தாண்டி இப்பொழுது பலமுனைப் போட்டியை சந்திக்கிறது. ஒரு பக்கம் அமைதியாக காய் நகர்த்தி வரும் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற இலக்கில் கூட்டணிக்கு தவிக்கும் தி.மு.க, ஆட்சியைப் பிடிக்கப் போகும் கனவில் ‌இருக்கும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே தே. மு.தி.க.வை  தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவந்தது தி.மு.க.வும், பா.ஜ.க.வும். ஆனால் தேமுதிக  என்ற பழம்,  மக்கள் நலக் கூட்டணியில் விழுந்ததில்  நிலைகுலைந்துப் போனது என்னவோ தி.மு.க.தான். 

எப்படியும் தங்கள் பக்கம் விஜயகாந்தை கொண்டுவந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நினைப்பில் இருந்த கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும், விஜயகாந்த்தின் அறிவிப்பு பேரிடியாய் அமைந்துள்ளது. விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.கவை தில்லு முல்லு கட்சி என்று விஜயகாந்த் கூறியும், தி.மு.க.விடமிருந்தோ, கருணாநிதி, ஸ்டாலினிடமிருந்து மறுப்போ, கண்டனமோ இதுவரை வரவில்லை.

இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்படும் நிலையில், இதில் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கும் சூழலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டிய கட்டாயத்தில், விஜயகாந்திற்கு பதில் கூறுவது சரியாக இருக்காது என்றுகூட நினைத்திருக்கலாம். அத்தனைக்கும் பலனில்லாமல் போய்விட்டது இப்போது. தமிழகத்தில் பெரிய வாக்குவங்கி இல்லாத காங்கிரசை  மட்டும் நம்பி எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்று குழப்பத்திலும், அதிர்ச்சியிலும்‌ தி.மு.க உறைந்திருக்கிறது தற்போது.
தேமுதிகவுக்கு வலைவீசியதன் பலன் இன்று திமுக தலைவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுதான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தேமுதிகவிடம் இந்தளவிற்கு இறங்கிப்போக தேவையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் எதிர்த்துவந்தார். 

தனித்துப் போட்டி, மக்களுடன் கூட்டணி என்று மாறி மாறிப் பேசிய விஜயகாந்துடன், மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கருணாநிதி கூறியதை ஸ்டாலின் விரும்பவில்லையாம். 

இதனால்தான் உடனடியாக கருணாநிதியின் கருத்தை மறுத்து, ஸ்டாலின் பேட்டி கொடுத்தார் சில தினங்களுக்கு முன். ''தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே விடுத்த அழைப்புதான். புதிதாக அழைப்பு விடுக்கவில்லை. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை'' என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதைப் பார்க்கும் போது, தி.மு.க தலைமைக்குள் குழப்பம் இருப்பதை உணர முடிகிறது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக “கருணாநிதியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் பேசியது, தி.மு.க.வை உதாசீனப்படுத்தும் செயல் என்றும், இதற்கு முன்பு கட்சிக்குள் இதுபோன்று நிகழ்ந்தது இல்லை‌” என்றும் வைகோ கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, கட்சிக்குள் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மறைமுகப் போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை பற்றிய கருத்து மோதலில் அது வெளிப்படையாகவே தெரியவந்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

“கருணாநிதியை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஸ்டாலின் ஒன்றும் அடைந்திட முடியாது. திராவிட இயக்கத்தில் இதுபோன்ற ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்க கூடாது. அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் இது தவிர்க்கப்படவேண்டும்'' என்கின்றனர் இதுகுறித்து பேசும் தி.மு.க ஆதரவாளர்கள்.

ad

ad