புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2016

வடக்கின் தீர்வுத் திட்ட வரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் - சபாநாயகர்

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பேன் என அரசமைப்பு நிர்ணயச் சபையின் தலைவரும்
சபாநாயகருமான கரு ஜயசூரிய, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் நேரில் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத் திட்ட வரைபு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று முன்தினம் பிற்பகல் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் திடீரெனக் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டைப் பிரிப்பதற்காக அல்ல, நாட்டை ஒன்றுபடுத்துவதற்காகவே இதனைக் கையளிக்கின்றோம் எனத் தெரிவித்து, சபாநாயகரிடம் முதலமைச்சர் கையளித்தார்.
வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைபை இன்று சனிக்கிழமை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளித்து, அதனை வெளியிடுவதாகத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே, சபாநாயகரிடம் நேற்று முன்தினம் திடீரென வடக்கு முதலமைச்சர் அதனைக் கையளித்துள்ளார்.
இதன்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.
சமஷ்டி அடிப்படையில் அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும் என்று வலியுறுத்திய இந்தத் தீர்வுத் திட்டம் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வட மாகாணசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தத் தீர்வுத் திட்ட வரைபை ,இன்று 30ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் கையளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் தீர்வு வரைபை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்வுத் திட்ட வரைபை சபாநாயகரிடம் கையளிப்பதற்கான திகதியை வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்று முன்தினம் காலை கோரிய போது சபாநாயகர் அடுத்த வாரம் தாம் இங்கே நிற்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா ஆகியோர் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள சபாநாயகரின் அலுவலகத்தில் சபாநாயகரைச் சந்தித்துத் தீர்வுத் திட்ட வரைபை சமர்ப்பித்துள்ளனர்.
இதன்போது முதலமைச்சர் சபாநாயகரைப் பார்த்து, எமது தீர்வுத் திட்ட வரைவுக்கு எதிராக தென்பகுதி ஊடகங்கள் பலவற்றை எழுதுகின்றன. தென்னிலங்கை அரசியல்வாதிகள் வேண்டத்தகாத இனவாதக் கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால், நாம் நாட்டை ஒன்றுபடுத்தவே இதனைக் கையளிக்கின்றோம். நாட்டைப் பிரிப்பதற்காக அல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சபாநாயகர், தான் இதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றமும் அரசமைப்பு நிர்ணயசபையாக மாற்றப்பட்ட பின்னர், சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது தீர்வுத் திட்ட முன்மொழிவு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad