புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மே, 2016

இரத்த சரித்திரம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் கதறி அழுத உறவுகள் (படங்கள் இணைப்பு

30f2a4d1-0717-468c-b165-1e34697d503cமூன்று தசாப்தகாலம் இந்த மண்ணில் ஆயுதமேந்தி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் கனவுகள் புதைக்கப்பட்ட நாள். சிங்கள பேரினவாதத்தின் பிடியில் சிக்கிய தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழித்து மனிதகுல வரலாற்றின் மிகப் பெரிய இனப்படுகொலை அரங்கேறிய அதி உச்ச நாள்.

ஆயிரமாயிரம் கனவுகளோடும் தமிழ் மண்ணின் விடுதலைக்காகப் போராடிய இளைஞர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட நாள். இதுவே, மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதகுல பேரவலம் நடந்தேறிய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நினைவலைகள் எம் இதய அறையை விட்டு இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்துசென்றாலும் அழியாத சுவடுகளாய் சுடர் விட்டெரியும்.
பூமிப் பந்தில் தமிழ் குடியின் வரலாறு தொடர்பில் சான்றுகள் கிடைக்கப்பெற்றன. முதல் ஈழ மண்ணில் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. உலகுக்கு புது பரிணாமத்தைக் கொடுத்த தமிழர்களின் உரிமையை ஆங்கிலேயர்கள் சிங்களவர்களிடம் ஒப்படைத்துச் சென்றமையே 67 வருடகாலமாகத் தொடரும் தமிழன சுதந்திரப் போராட்டம்.
இலங்கையின் உண்மைச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்ற நாமத்தை உடைத்தெறிய ஆங்கிலேயக் காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கையை மகாவம்ச பௌத்த தேசிய வாதத்தில் ஊறிப்போன பேரினவாதிகள் தமிழர்களின் உரிமையைக் கொடுக்க மறுத்தன.
அன்று எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பற்றவைத்த பௌத்த தேசியவாதத் தீ இன்று ஆலவிருட்சம்போல் பரந்து வியாபித்துக் கிடக்கின்றது. பெரும்பான்மையினரின் அடக்குமுறையின் கீழ் வாழ விரும்பாத தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுதான் 2009 மே 18 ஆம் திகதி நடந்த மனிதகுல வரலாற்றின் கொடூர ஊலித்தாண்டவம்.
முள்ளிவாய்க்காலோடு முற்றுப்பெறாத அந்தப் பேரவலம் இன்றும் தொடர்கிறமையில் மாற்றுக்கருத்தில்லை. சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவுக்கு தமிழர்கள் விட்டுக்கொடுத்த பதவிதான் அந்தப் பிரதமர் பதவி. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைய பெருவாரிய õன பங்கைத் தமிழர்கள்தான் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் தமிழர்களிடம் ஒப்படைத்த அதிகாரத்தை இந்த நாட்டில் சிங்களவர்களோடு இணக்கமாக வாழ சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.
டி.எஸ். சேனநாயக்க முதலாவதாகத் தமிழர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மீறினார். பின்னர் அவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இனவாத ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அந்த ஆயுதத்தின் முதல் தாண்டவமாக 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். அச்சட்டத்தின் மூலம் வரலாற்றுக் காலம்தொட்டு இந்த நாட்டில் வாழ்ந்துவந்த தமிழர்களை அடிமையாக்க முயன்றார்.
பின்னாளில் பௌத்த தேசியவாத ஆயுத்தைக் கூர்மையாக்கி ஆட்சிக்குவந்த அனைத்து பேரினவாதிகளும் தமிழர்களின் முதுகில் குத்தினர். அன்று மாவட்ட நிர்வாக அலகைக் கேட்ட தமிழர்களை 1976 ஆம் ஆண்டு தமிழீழத்தைக் கேட்கவைத்தனர். 1983ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றி தமிழர்களை ஆயுதமேந்த வைத்தனர்.
இந்தப் போராட்டத்தை 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி உலக வல்லாதிக்கச் சக்திகளை ஒன்றுதிரட்டி குழிதோண்டிப் புதைத்த மஹிந்த ராஜபக்ஷ அரசு முள்ளிவாய்க்காலில் முடங்கிக்கிடந்த தமிழர்களை நந்திக் கடலோடு சங்கமிக்க வைத்தது. அன்று நிகழ்ந்த அந்தப் இனப்படுகொலையை சர்வதேசத்திற்குத் தமிழர்கள் உணர்த்தியும் இன்றுவரை எவரும் நேசக்கரம் நீட்டாததால் தொடர்கதையாகவே உள்ளது.
போர் முடிந்த 2009ஆம் ஆண்டு இறுதியில் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் ஐ.நா. தவறிழைத்து விட்டதாகக் கூறியது. இறுதிப் போர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா. இடைக்கால மீளாய்வுக் குழுவையும் இலங்கை அனுப்பியது. விடுதலைப் புலிகள் தவிர்த்து 40ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கபட்டதாக அக்குழு அறிக்கைப்படுத்தியது.
பன்நாட்டு மனிதவுரிமை அமைப்புகளும், சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் இலங்கையில் பாரதூரமான மனிதவுரிமைகள் மீறப்பட்டுள்ளன என ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், இன்றுவரை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென எவரும் குரல்கொடுக்கவில்லை. மஹிந்த ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் கொண்டுவந்த தீர்மானம்தான் இன்று போர்க்குற்றம் தொடர்பில் பேசவைத்துள்ளது. மாறாக, தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென ஒருபோதும் அமெரிக்கா போன்ற நாடுகள் நினைத்ததில்லை. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை அறிந்தே கியூபா இன்றும் அமெரிக்காவுக்கு சவால்விடும் நாடாக உள்ளது.
மே 18, இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சிறைக்கம்பிகளை எண்ணாமல் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன அழிப்பை மேற்கொண்டவர்களின் கைகளிலேயே தமிழரின் பாதுகாப்பும் உள்ளது. தண்டனைபெறாத, தவறை உணராதவர்கள் இன்னொரு தடவை இவ்வாறு மேற்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு இந்த நாட்டில் என்ன உத்தரவாதம் இருக்கிறது?
முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கும் தற்போதைய மைத்திரி அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள்கூட இன்று கைதுசெய்யும் அளவுக்கு இந்த அரசின் கொடூரம் அரங்கேறிவருகிறது. சாவகச்சேரியில் கிடைக்கப் பெற்ற ஒரு சாதாரண தற்கொலை அங்கியைவைத்து இதுவரை விடுதலை செய்யப்பட்ட அனைத்து முன்னாள் போராளிகளையும் மர்மமான முறையிலும், வெள்ளை வான்களிலும் அரசின் விசேட படைகள் கடத்திச்சென்று கைதுசெய்து வருகின்றன.
இதுவா நல்லாட்சி? மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசு அமையப்பெற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால், இன்றும் வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்கள் சூறையாடப்படுகின்றன. தற்போதைய நல்லாட்சி அரசு தமிழர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் வகையில் மேற்கொண்டுள்ள நல்லிணக்க முயற்சிகள் எவை? கடந்த ஆண்டு ஐ.நாவில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்கூட இன்னமும் கொடுக்கப்பட்டவையாகவே உள்ளன.
அதிகாரப் பகிர்வுக்கு அரசு உண்மையான இணக்கத்தை வெளியிடவில்லை. தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் எனக் கூறும் மைத்திரி அரசு, சமஷ்டியை எதிர்க்கிறது. ஒற்றையாட்சியில் தமிழர்களின் சுயநிர்ணயம் உறுதிப்படுத்தப்படாது என்பதற்காகவே இந்த 67 வருடகாலப் போராட்டம் நடைபெற்றதை மைத்திரி மறந்து விட்டாரா?
சமஷ்டித் தீர்வுமூலம் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் எனக் கூறிய பெரும்பான்மைத் தலைமைகள் இன்று சமஷ்டியால் நாடு பிளவுபடும் எனப் பொய்ப் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. நல்லாட்சி அரசு தொடர்பில் மில்லியன் டொலர் கேள்விகள் உள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கடந்த மஹிந்த அரசு பயங்கரவாதிகளின் நினைவுகூரல் எனக் கூறி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத அவல அரசியலையும் செய்தது. தற்போதைய அரசு இறந்த சொந்தங்களுக்கு நினைவுகூர அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும், மஹிந்த சார்ப்பு கூட்டு எதிரணி எதிர்ப்பலையையே தெரிவித்துவருகிறது. ஆனால், இராணுவ வெற்றியை சர்வதேச ரீதியில் கொண்டும் காய் நகர்த்தலையும் மஹிந்த அணி மேற்கொண்டுள்ளது. இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா? இவர்களின் இனவாதப் பிடியிலிருந்து சிங்கள மக்கள் எப்போது விழிப்படையப் போகிறார்களோ?
நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்த இலங்கையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் இன்றைய சூழலில் உதயமாகியுள்ளது. ஆனால், அரசு இந்த விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயற்படுகின்றதா என்பது தெளிவில்லை. நல்லிணக்கம் எனக் கூறி நாட்கள் மாத்திரம் கடத்தப்படுகின்றன. மைத்திரி அரசின் ஆயுட்காலத்தின் கால்பங்கு முடிந்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுகூட இன்றளவும் ஸ்தாபிக்கப்படவில்லை. நல்லிணக்கத்திற்கான வாய்ப்பை அரசு உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடந்த மே 18ஆம் திகதி இனவிடுதலைக் களத்தில் வீழ்ந்த ஒவ்வொருவரையும் நினைவுகூர தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எந்தவொரு அரசாயினும் அனுமதியளிக்காமல் இருக்க முடியாது தடைசெய்ய முடியாது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழின அழிப்புப் போரின் இரத்த ஆறு ஓடி இன்றுடன் ஆறு ஆண்டுகளாகிவிட்டன. தீராத பெருவலியின் நினைவுகளும் உணர்வுகளும் எம்மைத் தினமும் உயிருடனேயே கொன்று சாகடித்துக் கொண்டிருக்கின்றன. நடந்தவை வெறும் கனவுகளாக இருந்துவிடக்கூடாதா என்ற ஏக்கமும், பரிதவிப்பும் எம்மினத்தை அலைக்கழிக்கின்றன. ஆயினும், உண்மையை ஏற்றுக்கொண்டு துயரத்தில் நாம் தேங்கி நின்றுவிடாமல் முன்னோக்கி நகர்ந்து போக வேண்டுமென்று எம் தமிழ்த் தேசியத் தலைமைகளினதும், போராளிகளினதும், மக்களினதும் தீரச்செயல்களும், தியாகங்களும் நமக்கு வழிகாட்டுகின்றன. இன்றைய நினைவுகூரல் எதிர்கால தமிழன அரசியல் விடியலை நோக்கிய நினைவுகூரலாக இருக்கவேண்டும் என்பதே என்னுள் தோற்றுகிறது.