8 மே, 2016

தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து வெற்றி பெறாவிட்டால்...!? -வைகோ சொல்லும் 'திடீர்' பாதை

க்கள் நலக் கூட்டணியின் இணைய தளப் பக்கத்திற்காக, வீடியோ பதிவு ஒன்றில் பேசியிருந்தார் வைகோ.

அந்தப் பதிவில், " கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் தகவல்களை எல்லாம் நம்பாதீர்கள். பெரு மழையில் சென்னை சிக்குண்டபோது, செல்போன் புரட்சியாளர்கள்தான் மக்களைக் காத்தார்கள். அவர்கள்தான் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறவர்கள். என் போன்றவர்கள் செய்ய முடியாததை அவர்கள் செய்வார்கள். அவர்களிடம் கையெழுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு அடுத்த வரப் போகிற சந்ததியைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இதைவிட்டால் உங்களுக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது.
தி.மு.க, அ.தி.மு.கவை எதிர்த்து, ஒருவேளை எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், வரும் காலங்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு போவது வழக்கமாகிவிடும். என் போன்றவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். பெரியார் போன்று கட்சி நடத்த வேண்டியது வரும். எனக்கும் வயது எழுபதைத் தாண்டிவிட்டது. உங்களைப் பேரப் பிள்ளைகள் என்றே அழைக்கிறேன். உங்களைவிட சிறிய குழந்தைகளைப் பார்க்கும்போது, இவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையிலும் பார்க்கப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப் போவதில்லை. 

இவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்ற கவலைதான் கண்முன் வருகிறது. உங்களால்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். எந்த அரசியல் லாபத்துக்காகவும் இதை நான் கேட்கவில்லை. 52 வருடங்களாக நானும் பாடுபட்டுவிட்டேன். மூன்றாயிரம் கிலோமீட்டர் தமிழ்நாட்டின் நலனுக்காக நடந்திருக்கேன். முல்லைப் பெரியாறில் உரிமையைக் காக்கப் போராடியிருக்கிறேன். மீத்தேன் திட்டத்திற்கு எதிராகப் போராடியிருக்கிறேன். நியூட்ரினோவுக்கு எதிராகப் போராடி தடுத்திருக்கிறேன்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி உலகக் கோடீஸ்வரனின் பகையை சம்பாதித்தேன். ஈழப் பிரச்னை என் உயிர் கொள்கை. இறுதிவரையிலும் ஈழத்திற்காகப் போராடுவேன். என் பேரப் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன். இந்த நாட்டைக் காப்பாற்றுங்கள். மாற்றத்தைக் கொண்டு வருவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது" என உருக்கமாகப் பேசியிருக்கிறார் வைகோ.

வைகோவின் இந்த பேச்சு மக்கள் நலக் கூட்டணியின் இணையப் பக்கங்களைக் கலக்கி வருகிறது. வைகோ பேசி முடித்ததும் முதல்வன் படத்தின் பின்னணி இசையை கோர்த்துவிட்டு அதிர வைக்கிறார்கள்.