சுவாதி பயன்படுத்திய செல்போனை ராம்குமார் வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது
. கொலை செய்தபோது ராம்குமார் அணிந்திருந்த பேக்கில், அந்த செல்போன் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சந்தான கிருஷ்ணன் என்பவரின் 2-வது மகள் சுவாதி செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 24-ந்தேதி காலை 6.45 மணிக்கு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு அவர் வந்தபோது, மர்மநபர் ஒருவரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த வீடு ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளியை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் கொலையாளி பதுங்கியிருக்கலாம் என்கிற தகவலையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ராம்குமார் என்ற இளைஞரை பிடித்தனர். கண்காணிப்பு காமிராவில் பதிவான கொலையாளியின் புகைப்படமும், ராம்குமாரின் புகைப்படமும் ஒத்துப்போயிருந்தால், அவர்தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர்.
ராம்குமாரை பிடிக்க முயன்றபோது, அவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து உடனடியாக அவரை நெல்லை  பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். சுவாதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பின் ராம்குமார் மயக்க நிலைக்கு சென்றதால், அவரிடம் விரிவான வாக்குமூலத்தை பெற, சென்னையிலிருந்து சென்ற தனிப்படை போலீசார் பாளையங்கோட்டை மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே  மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமாரின் வீட்டில் செங்கோட்டை போலீசார் நடத்திய சோதனையின்போது, கொலை செய்யும்போது ராம்குமார் தனது தோளில் மாட்டியிருந்த பை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் உள்ளே சுவாதியின் செல்போனும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நெல்லையில் முகாமிட்டிருக்கும் தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர், இந்த பையை கைப்பற்றுவதற்கு செங்கோட்டை விரைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சுவாதியின் செல்போனில் ராம்குமார் – சுவாதி இடையேயான உரையாடல் பதிவாகியிருந்தால் அதன் அடிப்படையில் கொலைக்கான உண்மையான காரணத்தை அறிய, போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.