புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2016

வண்டலூர் பூங்கா மிருகங்களை இணையதளத்தில் 24 மணி நேரமும் பார்க்க சிறப்பு ஏற்பாடு


“காடு செழித்திருந்தால் தான் நாடு செழித்திருக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. மண் வளப்பாதுகாப்பு, தூய காற்று உருவாக்குதல், பல்லுயிர் பன்மை பாதுகாப்பு என ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு வனங்கள் உறுதுணையாக அமைந்துள்ளன.

வன வளம் பெருக கீழ்க்காணும் அறிவிப்புகளை இங்கே அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. 2013 முதல் 2015 வரையிலான காலத்திய இந்திய வன அளவை நிறுவனத்தின் வன அறிக்கையின்படி, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பரப்பளவு தமிழகத்தில் தான் மிக அதிக அளவு அதிகரித்துள்ளது.

5,640 பூக்கும் தாவர வகைகளை தமிழ்நாடு தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் 230 தாவர வகைகள் அழியும் தருவாயில் உள்ளன. இவை பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, சென்னையை அடுத்துள்ள வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அருகே வண்டலூர் கேளம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள வன ஆராய்ச்சி பிரிவு மூலமாக, வன மரபியல் வளங்களைப் பாதுகாக்க, 8 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வளர்ந்து வரும் 300 மரத்தாவர வகைகள் ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு மரபியல் வளங்கள் கொண்ட மரப்பூங்கா ஏற்படுத்தப்படும்.

இந்த மரப்பூங்கா மரபியல் வளங்களைப் பாதுகாப்பதுடன், தாவரவியல் வல்லுநர்களின் சொர்க்கமாகவும் திகழும். இந்த மரப்பூங்கா 2 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

2. கோயம்புத்தூர் வன மரபியல் கோட்டத்தில் அரசு விதை மையம் ஒன்று உள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட விதை மையம் அனைத்து தென் மாநிலங்களில் உள்ள வனத்துறை, தொழிற்சாலைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மரபியல் மேம்படுத்தப்பட்ட, உயர் ரக, சீர்திருத்தப்பட்ட விதைகளை வழங்கி வருகிறது.

நவீன உபகரணங்களைக் கொண்டு விதைகளின் தரத்தினை ஆய்வு செய்து 250 வகையான விதை வகைகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட தாவர வளர்ப்பு தொழில் நுட்பங்களை இந்த மையம் செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மரபியல் தரம் வாய்ந்த மற்றும் உயர்தர மர விதைகள் வழங்கும் அவசியத்தினை கருத்தில் கொண்டு, திருச்சியில் நவீன “வன மர விதை மையம்” ஏற்படுத்தப்படும்.

இந்த மையம் மாநிலத்தில், விதை சேகரம், ஆய்வு, தரப்படுத்துதல், குளிர்ந்த அறைகளில் சேமித்தல் மற்றும் வழங்குதலுக்கான நவீன தொழில் வசதிகளை கொண்டதாக இருக்கும்.

இந்த மையம் 1 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்படுத்தப்படும். விவசாயிகள், தொழிற்சாலைகள், துறைகள் மற்றும் இதர பயனாளிகளுக்கு அரிய, அருகி வருகின்ற மற்றும் அழிந்து வருகின்ற மருத்துவச் செடிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் மையமாக இந்த மையம் திகழும். 2 கோடி ரூபாய் செலவில் இந்த மையம் ஏற்படுத்தப்படும்.

3. வனங்கள் பாதுகாப்பிற்காக காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வனங்கள் பயனாளிகளின் குழுக்களில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது வனப்பகுதியை சார்ந்து வாழும் மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தில், பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்த வழி வகுக்கும். எனவே, வனங்களின் அருகில் உள்ள கிராமங்களில் மருத்துவச் செடிகள் பயிரிட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதன்படி, “பெண்கள் தொழில் முனைவோர் குழுக்கள்” ஏற்படுத்தப்பட்டு, இந்தக் குழுக்கள் மூலம் மருத்துவச் செடிகள் பயிரிடப்பட்டு விற்பனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். “வீட்டில் மூலிகைத் தோட்டம்” அமைக்கும் இந்தத் திட்டம், முதற்கட்டமாக சேலம், தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

4. வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலுள்ள சிறந்த உயிரியல் பூங்காக்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பூங்காவில் உள்ள 20 முக்கிய உயிரின குடில்களில் உள்ள விலங்குகளை தொலைதூரத்தில் இருக்கும் விருப்பமுள்ள மக்கள் 24 மணி நேரமும் கண்டுகளிக்கும் நோக்குடன் அகச்சிவப்பு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இணையதளத்தின் வாயிலாக ஒளிபரப்பப்படும்.

இத்திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக இந்த உயிரியல் பூங்கா நிருவாகமும் உயிரினக் குடில்களில் உள்ள வனவிலங்குகளைக் கண்காணிக்க இயலும்.

ad

ad