புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2016

தமிழகத்தில் 2 கட்டமாக அக்.17, 19-ல் உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக வருகின்ற அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சி
தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 21-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்று மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.
சென்னை கோயம்பேடில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடித் தேர்தல்கள் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
வேட்புமனுக்களை இன்று (செப்.26) முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மன்ற அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான ஆய்வு அக்டோபர் 4-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும். 6-ம் தேதி மாலை 3 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெறலாம். நகர்ப்புறம், ஊரகம் என மொத்தம் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக நகர்ப்புறங்களில் 10 மாநகராட்சிகளுக்கும், 64 நகராட்சிகளுக்கும், 225 பேரூராட்சிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் 193 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 332 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், 3,250 ஒன்றிய வார்டுகளுக்கும் 50,640 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், 6,444 கிராம ஊராட்சி தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும்.
இரண்டாம் கட்டமாக, நகர்ப்புறங்களில் சென்னை, திண்டுக்கல் மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 273 பேரூராட்சிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 323 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் 3,221 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், 48,684 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், 6,080 கிராம ஊராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் அக்டோபர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குச் சாவடிகள்: ஊரகப் பகுதிகளில் 62,337 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புறங்களில் 28,761 வாக்குச்சாவடிகளும் என 91,098 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5,531 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள்: ஊரகப் பகுதிகளில் 2,17,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. நகர்ப்புற வாக்குப்பதிவுக்கு 34,515 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 41,418 மின்னணு வாக்குப்பதிவு கருவிகளும் மொத்தம் 75,933 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களால் கண்டறியப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படும். வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதமும் சென்னை மாநகராட்சி மற்றும் சில மாநகராட்சி பகுதிகளுக்கு 2 தேர்தல் பார்வையாளர்களும் என மொத்தம் 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சிகளில் 664 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,836 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சிகளில் 907 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,979 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நகர்ப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதமும், கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் வீதமும் சுமார் 6.50 லட்சம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த தேர்தலில், மொத்தம் 5.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். அதில் 2.88 கோடி ஆண்கள், 2.92 கோடி பெண்கள். இதர வாக்காளர்கள் 4,584 ஆகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடுகின்றன. இதனை அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
அட்டவணை...
செப்டம்பர் 26 - தேர்தல் அறிவிக்கை பிரசுரம், வேட்பு மனுக்கள் தாக்கல்
அக்டோபர் 3 - வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள்
அக்டோபர் 4 - வேட்பு மனுக்கள் ஆய்வு
அக்டோபர் 6 - வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுதல்
அக்டோபர் 17 - முதல் கட்ட வாக்குப்பதிவு
அக்டோபர் 19 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
அக்டோபர் 21 - வாக்கு எண்ணிக்கை
அக்டோபர் 24 - தேர்தல்கள் முடிக்கப்பட வேண்டிய நாள்
அக்டோபர் 26 - வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம், பதவி ஏற்பு.
நவம்பர் 2-ம் தேதி மேயர், துணை மேயர், மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, நகர்மன்ற-பேரூராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர்கள். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.

ad

ad