காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக
மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் கூறியிருந்த நிலையில், தற்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி காவிரி விவகாரம் தொடர்பான கூட்டம் டெல்லியில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் கடந்த 29-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தண்ணீர் திறப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. மாறாக, கர்நாடகா, தமிழகம் தரப்பில் மாறி மாறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் விவாதிக்கப்பட்டது குறித்த அறிக்கையை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 30ஆம் தேதி தாக்கல் செய்தது.
இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் அளித்த 4
வார கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணர்களின் குழுவின் பெயர்களை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகள், மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். இந்த நிபுணர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அக்டோபர் 1-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறியது. மேலும், தமிழகத்திற்கு 6 நாட்களுக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரிய உத்தரவையும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உத்தரவையும் திருத்தம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது. இதனிடையே, காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெறும் நிபுணரின் பெயரை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, காவிரி தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் சுப்பிரமணியனின் பெயரை மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால், கர்நாடகா அரசு, நிபுணர் குழுவில் இடம்பெறும் உறுப்பினர் பெயரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உத்தரவில் திருத்தம் கோரி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வாரியத்தை அமைக்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்த மனு நாளை பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.