புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2016

அட... இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்....!?

மூன்றாவது முறையாக மிக முக்கிய 'ஆளுமை'ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்
தமிழக நிதியமைச்சர் ஓ.பி.எஸ்!  ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21-ம் தேதி, முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம், முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அடுத்து, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு பெங்களுரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததையடுத்து மறுபடியும் ஜெயலலிதா  முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். எனவே மீண்டும் 2015, செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.
பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவி, இரண்டாவது முறையாக மீண்டும் பறிபோனது. ஆக, ஓ.பி.எஸ். முதல் முறை, 163 நாட்கள் முதல்வராக இருந்தார்.  இரண்டாவது முறை, 225 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.
இப்படி, அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தை பாதகமில்லாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பவர், ஓ.பன்னீர்செல்வம். அப்படிப்பட்ட ஓ.பி.எஸ். விசுவாசத்தின் மீதே 'யார் கண் பட்டதோ, இப்படி ஆகிடுச்சே' என்று உறவுகள் புலம்புகிற அளவுக்கு காலச் சூழல்கள் மாறிய கதையும் இந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்தன.
ஓ.பி.எஸ்.-சின் மகன் ரவீந்திரநாத் தேனி மாவட்ட அ.தி.மு.க-வை ஆட்டிப்படைக்கிறார் என்றும் தேர்தலில் போட்டியிட, சீட் வாங்கித் தருவதாகக் கூறி ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் புகார்கள் வந்து குவிந்தன. அப்போது, "ஒ.பி.எஸ்-க்கும் தனியாக ஆதரவாளர்கள் இருக்கிறார்களா என்ன?" என்று ஜெயலலிதா வியந்து கேட்டதாகவும் ஒரு தகவல் அப்போது ஓடியது. ஆனால், புகார்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையை அடுத்து ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான பலரையும் கட்டம் கட்டினார் ஜெயலலிதா .
ஆனாலும்கூட, ஓ.பி.எஸ்.ஸை மட்டும் ஒரேயடியாக விலக்கிவிடாமல், 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதோடு, நிதி அமைச்சர் , சட்டப்பேரவை முன்னவர் ஆகிய பொறுப்புகளையும் ஓ.பி.எஸ்.ஸுக்கு கொடுத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதாவின் குட்புக் லிஸ்ட்டில் அழுத்தமான இடத்தைப் பிடித்திருக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கு இப்போது மூன்றாவது முறையாக அதிகாரம் தேடி வந்திருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளுக்கான பொறுப்பேற்று, அதற்கான கோப்புகளை அக் -12, 2016- அன்று, ஒ.பி.எஸ். பார்வையிட்டுள்ளார். முதல்வராக இல்லாவிட்டாலும், முதல்வரின் இலாகாக்களை நிர்வகிக்கும் , பொறுப்பை ஏற்றிருக்கிறார் ஓ.பி.எஸ்!
ஆனால், இதற்கு முந்தைய நாள் இரவு, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முக்கியப் பிரமுகரின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் விடிய விடிய நடந்திருக்கிறது. 'ஓ.பி.எஸ். கைகளில் மீண்டும் அதிகாரம் போய் விடக்கூடாது' என்பதே அந்தக் கூட்டத்தில் விவாதப் பொருளாக இருந்திருக்கிறது. கூட்டத்தில், ஓ.பி.எஸ். பெயரைவிடவும் அதிகமாக முன்னிறுத்தப்பட்டது, பத்து நாட்களாக திடீரென வெளிச்சத்துக்கு வந்த இன்னொரு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியின் பெயர்தான். இதில், கலந்து கொண்ட எம்.எல்.ஏ., எம்.பி-க்கள் அனைவருமே மிகத் தெளிவாகத் தங்களுடையக் கார்களை விட்டு தனியார் கார்களில் வந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ரகசியக் கூட்டம் குறித்து ஆளுநர் மாளிகைக்கும் தகவல் போயிருக்கிறது. அங்கிருந்து அடுத்தடுத்து நடந்த 'மூவ்' களே, இப்போது ஓ.பி.எஸ் கைகளுக்கு  அதிகாரத்தைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், " எங்க அய்யாவுக்கு (ஓ.பி.எஸ்) ஒரு தகவலைக் கொடுத்தாங்க, 'நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம், பேச வேண்டாம், அமைதியாக மட்டும் இருங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், உங்களையும்தான்' என்று அழுத்திச் சொன்னார்கள்.
அய்யா, எதையும் பொருட்படுத்தாமல் இருந்ததன் பலனைத்தான் இப்போது அனுபவிக்கிறார்" என்கின்றனர்.
இதுதான் ஓ.பி.எஸ். பாலிடிக்ஸ்!

ad

ad