ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும நிலையில், தமிழக அரசு நிர்வாகம் குறித்து தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரை அவரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மாற்றப்பட்டது. அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார் என்றும் கவர்னர் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பி உள்ளார். கவர்னர் அறிக்கை கிடைக்கப்பெற்றதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்து எதுவும் கூறாத ஆளுநர், தான் மருத்துவமனைக்கு சென்று வந்ததை கூறியுள்ளார். மருத்துவமனைக்கு சென்றபோது முதலமைச்சரை பார்க்க தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் சிகிச்சை பெறும் அறைக்கு சென்று அவரை பார்க்காமல் திரும்பிவிட்டதாக கூறியுள்ளார்.