1 நவ., 2016

ரகசியம் எதுவுமில்லை: கவுதமி முழு அறிக்கை

நானும் கமல்ஹாசனும் இனி சேர்ந்துவாழப்போவதில்லை. இதைச் சொல்வதற்கு என் இதயம் வலிக்கத்தான் செய்கிறது. கிட்டத்தட்ட 13 வருடங்கள் சேர்ந்துவாழ்ந்தபின், என் வாழ்க்கையிலே நான் எடுத்த முடிவுகளிலே மிகவும் துயரகரமான முடிவு இது. தீர்மானிக்கப்பட்ட உறவில், பாதைகள் திரும்பமுடியாத அளவுக்கு பிரிந்துசெல்லும் எனவும், ஒன்று தங்கள் வாழ்க்கை கனவுகளை கைவிடவேண்டும் அல்லது உண்மையை ஏற்றுக்கொண்டு முன்னகரவேண்டும் இரண்டிலொன்றுதான் முடியுமென முன்கூட்டியே உணர்வது யாருக்குமே எளிதானதில்லை. இதயத்தை நொறுங்கச்செய்யும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டு முடிவுக்குவர எனக்கு நீண்ட காலம்பிடித்தது. குறைந்தபட்சம் சில வருடங்கள் ஆனது.

பரிதாபம் தேடுவதோ குற்றம் சுமத்துவதோ எனது நோக்கமல்ல. மாற்றம் தவிர்க்கமுடியாதது, இதை என் வாழ்க்கையெல்லாம் நான் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு தனிநபரின் இயல்பை வரையறுப்பதே அந்த மாற்றம்தான். இந்த மாற்றங்கள் எல்லாம் நாம் எதிர்பார்த்ததாக இருக்கவேண்டுமென்றில்லை. என் வாழ்வின் இந்தக் கட்டத்தில் நான் எடுக்கும் இந்த முடிவு நான் சொந்தமாக எடுத்ததே. இது அவசியமான முடிவும்கூட. முதலில் நான் ஒரு தாய். என் குழந்தைக்கு சிறந்த தாயாகத் திகழவேண்டிய பொறுப்பு எனக்கு முதன்மையாக இருக்கிறது. அதற்கு நான் அமைதியாக இருப்பது முக்கியமானது.

சினிமாவுக்கு வருவதற்குமுன்பே நான் கமல்ஹாசனின் ரசிகை. அதில் ரகசியம் எதுவுமில்லை. அவரது திறமையையும் சாதனைகளையும் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன். அவரது அனைத்து இக்கட்டுகளின்போதும் நான் அவருடன் இருந்துவந்திருக்கிறேன். அவையெல்லாம் பொன்னான தருணங்கள். அவரது படத்தில் காஸ்ட்யூம் டிசைனராகப் பணிபுரிந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் வரை அவர் சாதித்ததுபோக, அவரது ரசிகர்களுக்காக இன்னும் நிறைய சாதிக்கப்போகிறார் என்பதையும் நான் அறிவேன். அந்த வெற்றித் தருணங்களில் கைதட்டிப் பாராட்ட காத்திருக்கிறேன்.

நான் எப்போதும் உங்களது நடுவே, என்னாலானவரை கெளரவத்தோடும் சிறப்போடும் வாழ்ந்திருக்கிறேன். என் வாழ்வின் முக்கியமான நிகழ்வை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள காரணம், நீங்கள் எல்லோரும் என் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக பலவிதங்களில் இருந்திருக்கிறீர்கள்.கடந்த 29 வருடங்களாக உங்களிடமிருந்து பெரிதும் அன்பையும் ஆதரவையும் பெற்றுவந்திருக்கிறேன்.  என் வாழ்வின் இருண்டதும் மிகவும் வலிமிகுந்த நேரங்களில் என்னோடிருந்ததற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லவிரும்புகிறேன். 

அன்புடன் 
கெளதமி