1 நவ., 2016

ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழிகளை சக மாணவர்கள் ஏற்றாலே கற்றல் செயற்பாடு ஆரம்பமாகும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தமக்கு திருப்தி அளிக்கவில்லை எனவும்  அவர்கள் அளித்த உறுதிமொழிகளை சக மாணவர்களுக்கு தெரிவித்து அவர்கள் அதனை ஏற்றாலே கல்வி நடவடிக்கைகளில்  ஈடுபடுவோம் என  சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.
 
எனினும் இந்த சந்திப்பில் ஜனாதிபதியினால் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை தாங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்றதும் சக மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால் மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று கூறிய யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.ரஜீவன், மாணவர்கள் அதனை  நிராகரித்தால் வகுப்புப் பகிஷ்கரிப்பு தொடரும் என்றும்  தெரிவித்தார்.  
 
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
 
இதில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், யாழ்  பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் தலைமையில் 16 பேர் கொண்ட மாணவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது என்றும்  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
 
எனினும் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த யாழ் பல்கலைக்கழ மாணவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் தமக்கு திருப்தியில்லை என தெரிவித்தனர். 
 
இது குறித்து  கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் இன்றைய சந்திப்பில் 100 வீதம் நம்பிக்கை இல்லை. ஆனால் மாணவர்கள் 10 ஆயிரம் பேர் முன்னிலையில் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை கூறுவோம். மாணவர்கள் ஏற்றுக்கொண்டால் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால்  தொடரும்  போராட்டம்  என்றார்