1 நவ., 2016

நாமல் தொடர்பான விசாரணை அறிக்கை ஆலோசனையை துரிதப்படுத்த உத்தரவு

இந்தியாவின் கிறிஸ் நிறுவனம் வழங்கிய 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில்  இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை குறித்த ஆலோசனைகளை துரிதமாக நீதிமன்றத்திற்கு வழங்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன, சட்டமா அதிபருக்கு நினைவூட்டியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிந்து அது தொடர்பான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எனினும் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதனையடுத்தே நீதவான், ஆலோசனைகளை துரிதமாக வழங்குமாறு சட்டமா அதிபருக்கு நினைவூட்டியுள்ளார்.