25 பிப்., 2017

பொதுக்குழு உறுப்பினர்களை திரட்டும் ஓ.பி.எஸ்”:அதிமுக பொ.செயலாளர் ஆக திட்டமா?

அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட,அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களின்
ஆதரவை ஓ.பன்னீர் செல்வம் திரட்டி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சசிகலாவுக்கும்,ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டி காரணமாக,அதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்தது.பன்னீர் செல்வம் அணியில் மதுசூதனன்,பொன்னையன் ,மாஃபா பாண்டியராஜன் போன்ற முக்கிய அதிமுக நிர்வாகிகள் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாங்கள் தான் உண்மையான அதிமுக எனவும்,கூடிய விரைவில் கட்சியையும்,சின்னத்தையும் கைப்பற்றுவோம் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும்,கூடிய விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,அதிமுக பொதுக் குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஓ.பி.எஸ் ஈடுபட உள்ளார்.
இதன் பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன்,ஓ.பன்னீர் செல்வம் அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.