கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்ததால் தமிழக மீனவரை
படுகொலை செய்து சிங்கள கடற்படை வெறியாட்டம் போட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள கடற்படையால் இதுவரை 800 தமிழக மீனவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர் படுகொலைக்கு எந்த ஒரு நீதியும் எந்த ஒரு அரசாலும் வழங்கப்பட்டதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள திராணியற்று நிராயுதபாணிகளான தமிழக மீனவர்களை படுகொலை செய்து வெறித்தனம் காட்டியது சிங்கள கடற்படை.
இந்த ரத்தவெறி 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னரும் நீடித்தது.2011-ம் ஆண்டு 4 மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்து உச்ச கோழைத்தனத்தை உலகுக்கு காட்டியது சிங்களம். அதன்பின்னர் அதன்படுகொலை வெறியாட்டம் சற்றே தணிந்திருந்தது.
இந்த நிலையில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்போம்; மீனவர் பிரச்சனையை தீர்ப்போம் என்ற வாய்ச்சவடாலுடன் மத்தியில் பாஜக அரசு அமைத்தது. இதோ 3 ஆண்டுகள் முடிவடைந்து போனது.
எந்த ஒரு துரும்பையுமே இந்திய மத்திய அரசு கிள்ளிப் போடவில்லைஇதனால் கொந்தளித்துப் போன ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை வசம் உள்ள 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளையும் மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என அறிவித்தனர்.
அதுவும் அந்தோணியார் கோவில் திருவிழா அடுத்த ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.இந்த அறிவிப்பு வெளியானதுதான் தாமதம்…
இந்திய கடல் எல்லையான ஆதாம்பாலத்துக்குள் நுழைந்து அப்பாவி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட்டது. இதில் 22 வயது பிரிட்சோ என்ற அப்பாவி மீனவ இளைஞர் உயிர் பறிபோனது. மீண்டும் தொடங்கிவிட்ட சிங்கள பேரினவாத அரசின் நரவேட்டை தமிழகத்தை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது