7 மார்., 2017

பவர் ஸ்டார் சீனிவாசன் டெல்லி போலீசாரால் கைது

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீசாரால் கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார்.

இதேபோல், ஆந்திர தொழிலதிபர் ஒருவரும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பணமோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையிலும் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து நிறைய பேர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

புளுகோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானியிடமும் ரூ.1000 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் கமிஷனாக ரூ.5 கோடியை வாங்கிய பவர் ஸ்டார் சீனிவாசன், வழக்கம்போல் அவரையும் ஏமாற்றிவிட்டதாக டெல்லி போலீசாரிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு திலீப் புகார் கொடுத்திருந்தார்.  அந்த புகாரின் அடிப்படையில், அப்போதே டெல்லி போலீசார் சென்னை வந்து பவர் ஸ்டார் சீனிவாசனை விசாரணைக்காக டெல்லி அழைத்து சென்றனர். அதன்பிறகு, அந்த புகார் மீதான நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. பவர் ஸ்டார் சீனிவாசனும் சிறையில் இருந்து வெளியே வந்து படபிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

இந்நிலையில், இன்று பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் சென்னையில் திடீரென கைது செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.