3 அக்., 2018

யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு தடையுத்தரவு


யாழ். காரைநகர் வலந்தைச்சந்தி உல்லாச விடுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரியாகிய நந்தகுமாரின் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய மன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் இன்று புதன்கிழமை குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது

அதன் போது உல்லாச விடுதி அமைக்கப்படவுள்ள பிரதேசத்திற்கு மிக அண்மித்த பகுதியில் பாடசாலைகள் , ஆலயங்கள் உள்ளன எனவும் , குறித்த பகுதி நன்னீர் தேக்கமாக காணப்படும் இடம் என்பதனால் , குறித்த உல்லாச விடுதி நிர்மாணிக்க தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் கட்டட நிர்மாண பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். குறித்த தடையுத்தரவு தொடர்பில் உரிய தரப்பினர்களுக்கு அறிவிக்குமாறும் , கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தில் தடையுத்தரவு அறிவுறுத்தல் துண்டை ஒட்டுமாறும் கட்டளையிட்டார்.