8 நவ., 2018

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை

வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்தபோதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவி, தற்போது பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வியாழேந்திரனை மீளவும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக கூட்டமைப்பின் உறுப்பினராகச் செயற்பட்டு வந்த வியாழேந்திரன் அண்மையில் கட்சி தாவி அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெற்றிருக்கின்றார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய அவரை கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்த புளொட் அமைப்பு அவரை தனது கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாகவும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்றும் தமிழரசுக் கட்சியிடம் கோரியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்