புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2018

விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

ஈழத்தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தியதான கொள்கை அடிப்படையில், முன்னாள் நீதியரசரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆயுத மௌனிப்பின் பின்னரான தாயக அரசியலானது ஈழத் தமிழ் மக்களின் நலனுக்கு நேர் விரோதமான பாதையில் பயணப்பட்டு ஈற்றில் சிங்கள பௌத்த பேரினவாத நச்சு வட்டத்திற்குள் மீண்டெழ முடியாத இக்கட்டில் தமிழர்களது தலைவிதியை கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. இவ்வாறான இக்கட்டில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் மீட்டெடுக்க வேண்டுமாயின் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்த வலுவான அரசியற் கூட்டணி ஒன்றை உறுதியான தலைமைத்துவத்தின் கீழ் உடனடியாக ஏற்படுத்தியே ஆகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது உயிர் விதை விதைத்து இலட்சக்கணக்கான தமிழ் மக்களது உயிர்த் தியாகம் சுமந்து நான்கு தசாப்தங்களாக நடந்தேறிய விடுதலைப் போராட்டம் பாதுகாத்து நின்ற தமிழீழ மண்ணையும் மக்களையும், ஆயுத மௌனிப்பின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், அழித்தொழித்து அடிமைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத பேய்களிடமே கையளித்து நிற்கும் கயமைத்தனத்தினை தமிழர்களின் அரசியல் தலைமையாக கருதப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத்துணிந்துள்ள பின்னணியில்தான் மாற்று அரசியல் தலைமையின் தேவை மிக மிக அவசியமாக உணரப்பட்டுள்ளது.

தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான அரசியற் செயற்பாட்டின் மூலமாக தமிழர்களது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்து பலம் சேர்க்கும் நோக்கில் தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இச் செயற்பாடானது ஆயுத மௌனிப்பின் பின்னர் தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அயோக்கியத்தனத்தை விஞ்சியதாக அமைந்திருக்கிறது .

இவ் அரசியற் பின்புலத்தில் மாற்று அரசியல் தலைமை ஒன்றை உருவாக்கும் முனைப்பில் நீண்ட காலமாக முன்னின்று பாடுபட்ட தரப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருந்து வருகின்றது. தமிழீழத் தேசியத் தலைமையின் உறுதியான வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டே பழக்கப்பட்ட எமது மக்களின் ஆதரவை மாற்றுத் தலைமையின் பக்கம் மடைமாற்றுவது பெரும் சவால் நிறைந்ததாக காணப்பட்டது. இதுவே, கொள்கைப் பற்றுறுதியுடன் மக்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல்கால அங்கீகாரத்தை பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்துவரக் காரணமாகும்.

இத்துர்ப்பாகிய நிலையிலும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தமிழர் விரோத செயற்பாடுகளை நேரடியாகவே எதிர்த்து நின்று, ஈழத்தமிழர்களின் உரித்துக்களை சமரசமின்றி இடித்துரைத்துவரும் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் பெருந்திரளாக அணிதிரண்டு வருவது ஆறுதலாக இருந்து வருவதுடன் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவடைந்த நிலையில் தன் சார்ந்த தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து முற்றிலுமாக தன்னை விடுவித்துக் கொண்டுள்ள க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்து மாற்று தலைமைக்கான புதிய பாதையை திறந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோத நிலைப்பாடுகளை மக்கள் மன்றத்தில் முன்வைத்து வந்ததுடன் தமிழர்களது தேசிய அபிலாசைகளை உள்ளடக்கிய தீர்வை நோக்கியதாக தாயக மக்களை அணிதிரட்டும் வரலாற்றுக் கடமையிலும் ஈடுபட்டு வரும் தமிழ் மக்கள் பேரவையின் வழிகாட்டுதல் மற்றும் பங்கேற்புடன் மாற்று அரசியல் கூட்டணி ஒன்று ஏற்படுத்தப்படுவதே பொருத்தப்பாடானதாகும்.

இந்நிலையில், தமிழ் மக்கள் பேரவையில் ஆரம்பம் முதலே அங்கத்துவம் வகித்து வரும் கட்சிகள் தொடர்பிலான முரண் நிலையை முன்னிறுத்தி தமிழர்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் விதமான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதானது எமக்கு நாமே தடையாக விளங்குவதற்கு ஒப்பானதாகும்.

தாயக அரசியலின் இன்றைய சூழமைவின் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளூடாக வாக்கு வங்கியை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் ஒருபக்கமென்றால் அண்மையில் கொழும்பு அரசியலில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னணியில் அமைச்சராக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியும் இம்முறை கணிசமான வாக்குகளை சுவீகரித்துக்கொள்ளும் ஏது நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழர் அரசியற் பிரதிநிதித்துவம் தமிழர் விரோத சக்திகளிடம் இழக்கப்படும் பேரபாயம் ஏற்பட்டுவிடும். கொள்கையளவில் ஒன்றுபட்டிருந்தாலும் ஒன்றுபடுவதில் ஏற்படுத்தப்பட்டு வரும் முரண்பாட்டு நிலை தமிழ் மக்கள் மனங்களை சோர்வடையச் செய்துவிடும். இந்நிலையானது தேர்தல் கால வாக்களிப்பு விகிதத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினர் கருத்தில்கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தை ஒன்றிணைத்ததாக உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் இருப்பு தாயக அரசியல் வெளியில் இன்றியமையாததாகும். அதனை இத் தாமதங்களும் தடுமாற்றங்களும் சிதைத்துவிடக் கூடும். ஆகவே மேற்குறித்த தரப்புகள் கொள்கை அடிப்படையில் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.

‘மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடம்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளூடாக தேர்தல் அரசியலை பயன்படுத்திக் கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன்’ என கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை ஈழத் தமிழர் சுதந்திர வாழ்வில் உண்மையாக அக்கறையுடய தரப்புகள் ஏற்று மாற்று அரசியல் தளத்தை பலப்படுத்துமாறு அனைத்துலக ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நாம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றோம்.

‘மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை’ எனும் தேசியத் தலைவரது சிந்தனையை வேதவாக்காக கொண்டு, நாம் வாழ வேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களது உன்னத தியாகத்தை போற்றி நினைவுகொள்ளும் இந்நாளில் மண்ணுறங்கும் மாவீரர்களது கனவுகளையும், இலட்சியங்களையும் எமது தோள்களில் சுமந்து செல்வதுடன் அவ்வழி நின்று தாயக மண்ணினதும் மக்களினதும் விடுதலையை வென்றெடுக்க பாடுபடுவோம் என்று உறுதியேற்போம்.

ad

ad