25 ஜன., 2019

அற்புதம்மாளிற்கு ஈழமக்களும் ஆதரவு

இந்திய சிறையினில் அடைக்கப்பட்டுள்ள ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் நேற்று ஆரம்பித்துள்ள பயணத்திற்கு அவர் பயணிக்கும் பகுதிகளில் வாழும் அனைத்து தமிழர்களும் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் வலுச்சேர்த்து குரல் கொடுத்து போராட அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் ஆரம்பித்துள்ள பயணத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. ஏழு தமிழர்களையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


அதன்படி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழ்நாடு அரசு.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல்காந்தி ஏற்கனவே தெரிவித்துவிட்டார்.
ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பல தடவை கோரியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மட்டுமன்றி பல்வேறு பொதுநல மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி வருகின்றன.

இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் இந்த ஏழு தமிழரில் நாலுபேர் ஈழத் தமிழர்கள். ஆனால் இதுவரையில் ஒரு ஈழத் தமிழ் தலைவரும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

.
பேரறிவாளன் தான் விடுதலை பெற்று வந்தால் தொடர்ந்தும் ஈழத் தமிழரை ஆதரிப்பேன் என்றே கூறியிருக்கிறார்.
அவரின் தாயார் அற்புதம்மாளும் கூட ஈழத் தமிழரை தன் மகன் ஆதரித்தது தவறு என்று கூறியதில்லை. அவரும்கூட இன்றும் ஈழத் தமிழர்களின் ஆதரவாளராகவே இருக்கிறார்.
ஆனால் எமது ஈழத் தலைவர்கள் கொஞ்சம்கூட நன்றி உணர்வு அற்றவர்களாக இருக்கிறார்கள்.
முருகன் மற்றும் நளினியின் குழந்தை சிறையில் பிறந்தது அனைவரும் அறிந்ததே. சட்டப்படி அக் குழந்தை இந்திய குடியுரிமையைக் கோர முடியும்.

ஆனால் இந்திய அரசோ லண்டனில் தற்போது இருக்கும் அக் குழந்தை தன் தாய் தந்தையரை பார்வையிடுவதற்குகூட விசா வழங்க மறுக்கிறது.
25 வருடங்களாக தன் தாய் தந்தையரை நேரில் சந்திக்க முடியாமல் இருக்கும் அப் பிள்ளைக்காவது விசா வழங்கும்படியாவது சம்பந்தர் கேட்டிருக்கலாமென முன்னாள் விடுதலைப்போராட்ட செயற்பாட்டளர்களுள் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இப்போது தமிழ் மக்களின் ஆதரவு கேட்டு வரும் தாயார் அற்புதம்மாளுக்கு ஈழத் தமிழர்கள் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமித்த ஆதரவை வழங்கவேண்டுமென கோரப்பட்டுள்ளது