புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மே, 2019

பல்கலை மாணவர்கள் மீது பிணையில் வெளிவர முடியா 4 பிரிவுகளில் வழக்கு$

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கு எதிராகவும் 4 பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மாணவர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ். பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுச் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் புகைப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சில சட்ட விதிகள், அவசரகாலச் சட்டம், அரசியல் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச பட்டயச் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த நான்கு பிரிவுகளின் கீழும் பிணை கிடைப்பது மிகமிகக் கடினம்.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோர் நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகளான கலாநிதி குமாரவடிவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகினர்.