9 மே, 2019

மைத்திரிக்கு சரத்பொன்கோ எச்சரிக்கை?

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற நகரங்களில் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ளதென்று தகவல் கிடைத்துள்ளதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று புதன்கிழமை மாலை இல்ங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இது தொடர்பாகத் தன்னிடம் கூறியதாகவும் இந்த ஆபத்துத் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டுமெனவும் சரத் பொன்சேனக வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறன்று தேவாலங்கள், ஹோட்டேல்களில் குண்டுவெடிக்கவுள்ளதாக இந்தியப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தை 15 தடவைகள் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஹேமசிறி பெர்ணான்டோ ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியிருந்தார்.
ஆனால் ஜனாதிபதி அதனை கருத்தில் எடுக்கவில்லையெனவும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தினார்.

இந்த விடயத்தை ஹேமசிறி பெர்ணான்டோ பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகியதும் தன்னிடம் கூறிக் கவலை வெளியிட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் குண்டுகள் வெடிக்கும் எனக் கிடைத்த தகவலக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது ஜனாதிபதியின் கடமை என்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி பாதுகாப்புகளை மேற்கொள்ளுமாறும் சரத் பொன்சோக கேட்டுள்ளார்.

இதேவேளை சரத் பொன்சேகாவின் உரைக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட மகிந்த தரப்பு உறுப்பினர்கள் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

இதேவேளை, இலங்கைப் பாதுகாப்புச் சபையை மீண்டும் கூடி ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையில் மேலும் குண்டுகள் வெடிக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததையடுத்து பாதுகாப்புச் சபையை கூட்டவுள்ளதாகவும் முரண்பாடுகளைத் தவிர்த்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனாலும் மைத்திரியும் ரணிலும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இல்லையெனக் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருக்கும் இந்தியா. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேசப் புலனாய்வு அதிகாரிகளும் இலங்கைப் புலனாய்வு உயர் அதிகாரிகளோடு இணைந்து தீவிரமாகச் செயற்படுவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அமெரிக்க, இந்திய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் செயற்படுவதற்கு மகிந்த ராஜபக்ச தரப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த தரப்பு நிலைப்பாட்டை ஏற்றுச் செயற்படுவதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ஏதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை குண்டுகள் வெடிக்கலாமென இலங்கைச் சுற்றுலாத்துறை அதிகாரசபை சென்ற திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அரசாங்கத்துக்கு அறிவித்திருந்திருந்தது.