-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஜூன், 2019

உலக கோப்பை கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி

பிரித்வெய்ட்டின் சதம் வீண் உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- நியூசிலாந்து அணிகள் கோதாதவில் இறங்கின. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மூன்று மாற்றமாக காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்செல் மற்றும் கேப்ரியல், டேரன் பிராவோ ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக கார்லஸ் பிராத்வெய்ட், கெமார் ரோச், ஆஷ்லே நர்ஸ் சேர்க்கப்பட்டனர்.


‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மார்ட்டின் கப்தில் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். அதே ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ (0) கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சனும், மூத்த வீரர் ராஸ் டெய்லரும் இணைந்து தங்கள் அணியை சிக்கலில் இருந்து காப்பாற்றினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் 23.4 ஓவர்களில் அணியை 100 ரன்களை தொட வைத்தனர்.

தங்களை அழுத்தமாக நிலை நிறுத்திக்கொண்டபிறகு ரன்ரேட்டை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். ஸ்கோர் 167 ரன்களாக உயர்ந்த போது ராஸ் டெய்லர் (69 ரன், 95 பந்து, 7 பவுண்டரி) கிறிஸ் கெய்லின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினாலும் இன்னொரு பக்கம் பிரமாதப்படுத்திய வில்லியம்சன் தனது 13-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலக கோப்பையில் அவரது 2-வது சதமாகும். ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் சதம் அடித்திருந்தார். வில்லியம்சனின் மனஉறுதிமிக்க ஆட்டம், நியூசிலாந்து அணி சவாலான ஸ்கோரை அடைவதற்கு வித்திட்டது. வில்லியம்சன் 148 ரன்களில் (154 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ஒரு நாள் போட்டியில் வில்லியம்சனின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் காட்ரெல் 4 விக்கெட்டுகளும், பிராத்வெய்ட் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் கெய்ல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு 292 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் அணியின் சார்பில், கிறிஸ் கெயில் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் ஷாய் ஹோப் 1(3) ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிகோலஸ் பூரனும் 1(7) ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக கிறிஸ் கெயிலுடன், ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் சீராக உயர்ந்தது. இந்த ஜோடியில் இருவரும் தங்களது அரை சதத்தினை பதிவு செய்திருந்த நிலையில், ஹெட்மயர் 54(45) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டர் (0) ரன் ஏதும் எடுக்காமலும், சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் கெயில் 87(84) ரன்களும், அஸ்லே நர்ஸ் 1(8) ரன்னும், இவின் லீவீஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பிரித்வெய்ட்டுடன், கேமர் ரோச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரளவு ரன் சேர்த்திருந்தநிலையில் கேமர் ரோச் 14(31) ரன்களில் வெளியேறினார். பொறுப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித் வெய்ட் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்து களமிறங்கிய ஷெல்டன் கட்ரல் 15(25) ரன்களில் கேட்ச் ஆனார். தனி ஒருவனாக போராடிய பிரித்வெய்ட் தனது சதத்தை பதிவு செய்த நிலையில் 101(82) ரன்களில் ஆட்டமிழந்தார்.இறுதியில் தாமஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முடிவில் வெஸ்ட் இண்டிஸ் அணி 49 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், பர்குசன் 3 விக்கெட்டுகளும், நீஷம், ஹென்றி மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

விளம்பரம்