23 ஜூன், 2019

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம்

நடிகர் சங்க தேர்தல்; நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு வருத்தம் அடைந்தோம்: நடிகர் நாசர்நடிகர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க முடியாததற்கு அவரை போன்றே நாங்களும் வருத்தம் அடைந்தோம் என நடிகர் நாசர் கூறினார்.


தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர்.


தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்திற்கு காலை முதல் வர தொடங்கினர். இந்த தேர்தலில் வாக்களித்த பின்னர் நடிகர் நாசர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் சங்க தேர்தலில், நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் வாக்களித்து வருகின்றனர் என கூறினார்.

இந்த தேர்தலில், தபால் வாக்கு காலதாமதமுடன் வந்த நிலையில் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறிய நாசர், அவர் வருந்தியது போல, நாங்களும் வருத்தமடைந்தோம். எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறினார்.

எது சாத்தியமான வாக்குறுதி என அனைவருக்கும் தெரியும். நடிகர் சங்கத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை நிறைவு செய்ய எங்களுக்கு போதிய அவகாசத்தை வழங்குவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.